புதுடில்லி, ஜூலை 26- மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் முன்னணி செய்தித் தொலைக்காட்சிகள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதும், அதன் விளைவாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கத் திட்டமிட்டுள்ளதும் ஊடக உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடாப் போர் பதற்றம் மற்றும் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற டில்லி மாணவர் போராட்டங்கள் என அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகள் நடந்த போதிலும், இந்திய செய்தித் தொலைக்காட்சிகளின் சந்தை மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
சுழிய நிலைக்குச் சென்ற நம்பகத்தன்மை
ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசிற்கு ஆதரவானப் போக்கைக் கையாண்டு வந்ததே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரண மாகப் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான முன்னணிச் செய்தித் தொலைக்காட்சிகளின் நம்பகத்தன்மை மக்களிடம் முற்றிலுமாகச் சரிந்து, சுழிய நிலையை எட்டியுள்ளது.
கடந்த நான்கு வாரங்களில், நாட்டில் இயங்கும் பெரும்பாலான செய்தித் சேனல்களின் டிஆர்பி மதிப்பீடு மைனஸ் குறியீட்டை நோக்கிச் சென்றுள்ளது. வெறும் இரண்டு தொலைக்காட்சிகளைத் தவிர, மற்ற அனைத்து முன்னணி நிறுவனங்களும் பெரும் நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றன.
ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் வெளியான டிஆர்பி கண்காணிப்பு அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 475 செய்தித் தொலைக்காட்சிகளில் 470 சேனல்கள் கடுமையான நட்டத்திலேயே இயங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்று ஊடகங்களைக் கைப்பற்றும் இளைஞர்கள்
பாரம்பரிய ஊடகங்களின் இந்த ஒருபக்க சார்பு நிலைப் பாட்டால், 16 முதல் 30 வயதுக் குட்பட்ட இளைஞர்கள் செய்தித் தொலைக்காட்சிகளைப் புறக் கணித்துவிட்டு, மாற்று டிஜிட்டல் ஊடகங்களை நோக்கி வேகமாகக் நகரத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக டில்லி மாணவர் போராட்டத்திற்குப் பிறகு, அஜித், நியூஸ் பின்ச் (News Pinch), ரவீஷ் குமார், சம்டிஷ் (Samdish) போன்ற சுயேச்சை பத்திரிகையாளர்கள் மற்றும் படைப்பாளர்களின் யூடியூப் சேனல்கள் பெருமளவிலான பார்வையாளர்களை ஈர்த்து முதலிடத்தைப் பிடித்துள்ளன. இதனால் இத்தகைய நேரலை யூடியூப் சேனல்களின் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆட்குறைப்பு பயத்தில் ஊழியர்கள்
ஒருபுறம் மாற்று ஊடகங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், மறுபுறம் நட்டத்தில் தவிக்கும் முன்னணி தனியார் ஊடக நிறுவனங்கள் தங்கள் செலவைக் குறைக்கப் பணியாளர்கள் நீக்கம் தொடர்பான சுற்றறிக்கையை ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளன.
செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட வேண்டிய சூழலிலும், நம்பகத்தன்மை இல்லாததால் சந்தை மதிப்பையும் வருவாயையும் இழந்து நிற்கும் முன்னணி ஊடகங்களின் இந்த நடவடிக்கை, அதில் பணியாற்றும் செய்திப் பிரிவு ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
