மாநில நிதி நிலை அறிக்கையில் சமூகநீதி சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை நிதி அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியது அகில இந்திய ஓபிசி ஊழியர் கூட்டமைப்பு

3 Min Read

சென்னை, ஜூலை 20 தமிழ்நாடு அரசின் சமூக நீதி மரபை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) நலனுக்கான மூன்று முக்கிய திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடும், கொள்கை அனுமதியும் வழங்குமாறு அகில இந்திய ஓபிசி ஊழியர் கூட்டமைப்பு (AIOBC Federation) தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசால் 14.07.2026 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட முன்-பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டமைப்பின் சார்பில்   கோ. கருணாநிதி கலந்து கொண்டு, நிதி அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் துறை செயலாளர்களிடம் விரிவான கோரிக்கை மனுவை நேரில் சமர்ப்பித்து விளக்கவுரை வழங்கினார்.

இதற்கு முன்னர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் விரிவான கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அந்த மனுவில் பின்வரும் மூன்று முக்கிய சமூக நீதி கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன:

“தந்தை பெரியார் அயலக உயர் கல்வி
உதவித் தொகைத் திட்டம்”

சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) மாணவர்கள் உலகின் சிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில நிதி உதவி வழங்கும் தனித்துவமான உதவித்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டது.

“முதற்கட்டமாக ஆண்டுதோறும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தலா ரூ.50 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்குவதன் மூலம் 100 BC/MBC மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘தந்தை பெரியார் அயலக உயர் கல்வி உதவித்தொகைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட வேண்டும்’’ என கோரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், திறமையான ஆனால் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்கி, சமூக முன்னேற்றத்திற்கும், அறிவியல் ஆராய்ச்சி துறைகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட (BC/MBC) மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் உதவும் என வலியுறுத்தப் பட்டது.

சமூக நீதி கண்காணிப்புக் குழுவை மறுசீரமைத்தல்

தமிழ்நாட்டில் சமூக நீதி கொள்கைகள் மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறைகள் சிறப்பாக அமல்படுத்தப் படுவதை தொடர்ந்து கண்காணிக்க, பல்வேறு ஒதுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கி சமூக நீதி கண்காணிப்புக் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என கோரப்பட்டது.

BC/MBC நலத்திட்டங்களுக்கு வருமான
உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்துதல்

தற்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களில் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பொருளாதார மாற்றங்களை கருத்தில் கொண்டு, இந்த வரம்பு காலாவதியானதாக மாறிவிட்டதால், பல ஆயிரக்கணக்கான தகுதியான மாணவர்கள் மற்றும் குடும்பங்கள் அரசின் நலத்திட்டங்களில் இருந்து விலக்கப்படுகின்றனர். எனவே, இந்த வருமான வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

 சமூக நீதி மரபை வலுப்படுத்தும்
மூன்று கோரிக்கைகள்

இந்த மூன்று கோரிக்கைகளும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு, சமூக முன்னேற்றம், சமத்துவம், மற்றும் அரசின் நலத்திட்டங்களில் சமமான அணுகு முறையை உறுதி செய்யும் என்று கூட்டமைப்பு எடுத் துரைத்தது.

தமிழ்நாடு சமூக நீதி, கல்வி மேம்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நாடு முழுவதற்கும் முன்னுதாரணமாக விளங்கி வருவதை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பு, இந்த கோரிக்கைகள் தமிழ்நாட்டின் சமூகநீதி இலட்சியங்களை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தது.

முதலமைச்சர், நிதி அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் இந்த கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலித்து, வரவிருக்கும் மாநில நிதி நிலை அறிக்கையில் உரிய அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *