லண்டன், ஜூலை 7- அய்ரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இங்கிலாந்திலும் வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்துள்ளது. இங்குள்ள பெரும்பாலான பள்ளி கட்டடங்கள், குளிர்காலத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்டவை என்பதால், ஏ.சி. வசதி இல்லாமல் வகுப்பறைகள் அனலாக மாறின.
வெப்பத்தைத் தாங்க முடியாமல் மாணவர்கள் மயங்கி விழுந்ததால், இங்கிலாந்து முழுவதும்
1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. திறந்திருக்கும் சில பள்ளிகளில், மதிய உணவிற்குப் பதிலாக மாணவர்களுக்கு ஐஸ் கிரீம்கள் மற்றும் சாலட்டுகள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தண்ணீர் தெளிப் பான்கள் மூலம் தண்ணீர் தெளித்து குளிர்வித்து வருகின்றனர். சிலர் வகுப்பறைக்குள் குளிர்ந்த நீர் வாளிக்குள் கால்களை வைத்து படித்து வருகின்றனர். பருவநிலை மாற்றத்திற்கு இங்கிலாந்து இன்னும் தயாராகவில்லை என்பதை இந்த அவலநிலை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
இலங்கைச் சிறையில்
கைதிகள் மோதல் 26 பேர் உயிரிழப்பு
கொழும்பு, ஜூலை 7- இலங்கையின் மேற்குக் கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள சிறையில் கடந்த இரு நாள்களாக நிகழ்ந்த கைதிகளின் மோதலில் 26 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள சிறையில் 1,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதற்கு ஆதரவாக உள்ள குழுவுக்கும், எதிராக உள்ள குழுவுக்கும் இடையே 5.7.2026 அன்று கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக மாறியுள்ளது. இதில் இரு கைதிகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்ததனர். படுகாயமடைந்த 34 கைதிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்றும் (6.7.2026) மோதல் வெடித்தது. இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில், 6 பேர் சிறை அதிகாரிகள், காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 13 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறைக் காவலர்களின் துப்பாக்கிகளைப் பறித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
