திருவள்ளூர், ஜூலை 5- திருவள்ளூர் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில், வடமாநில தொழிலாளர்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தை விபத்து நடந்த ஆலையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
“இறால் ஆலையில் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு எஞ்சியிருந்த ஆபத்தான அமோனியா வாயுவை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆலையில் தேங்கியிருந்த வாயு பாதுகாப்பாக உறிஞ்சப்பட்டு, பாதுகாப்பான டேங்கர் லாரிகளுக்கு மாற்றப்பட்டு வருகிறது.
தற்போது வரை 60 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, ஆலையின் உள்கட்டமைப்பு பைப்புகளில் (Pipes) எஞ்சியுள்ள அமோனியா வாயுவை முழுமையாக அகற்றும் பணிகள் (ஜூலை 5) காலை முதல் மேற்கொள்ளப்படும்.” இந்த மீட்புப் பணிகளின் போது மீண்டும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம், தீயணைப்புத் துறையினரும், பாதுகாப்புப் பொறியாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் கைது கும்பல் துணிகரம்
பெங்களூரு முதியவரிடம் ரூ.3 கோடி மோசடி!

பெங்களூரு, ஜூலை 5- பெங்களூருவில் உள்ள ஜெய நகரை சேர்ந்தவர் மஞ்சுநாத் (74). இவரது வீட்டு தொலைபேசி எண்ணுக்கு கடந்த மார்ச் 9ஆம் தேதி மூத்த தொலைத்தொடர்பு அதிகாரி எனக் கூறி, ரஞ்சிதா என்ற பெண் பேசியுள்ளார்.
அப்போது அவர், ‘‘உங்கள் தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண் ஹவாலா பண மோசடி, போதைப்பொருள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. இதனால் உங்கள் மீதும் உங்களின் மனைவி மீதும் போதை கடத்தல் வழக்கு, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.
அதன்பின்னர் பெங்களூரு துணை ஆணையர் எனக் கூறி அசோக் என்பவர் பேசியுள்ளார். அவரும் மஞ்சுநாத்தை மிரட்டியுள்ளார். இதையடுத்து மர்ம கும்பலைச் சேர்ந்த 6 பேர் காவல் துறை அதிகாரி போல அவ்வப்போது தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர்.
பின்னர் மஞ்சுநாத் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.17 கோடியை மிரட்டி பெற்றுள்ளனர். மஞ்சுநாத் 22 தவணைகளில் ரூ.3 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரத்தை 11 வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
பணம் அனுப்பிய பிறகு எந்த தொலைபேசி அழைப்பும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மஞ்சுநாத் 3.7.2026 அன்று பெங்களூரு மாநகர தெற்கு மண்டல காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மர்ம நபர்கள் 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
