கேள்வி: சின்னாளப்பட்டி திறந்தவெளி மாநாடு, குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, சேலம் பொதுக்குழு ஆகிய நிகழ்ச்சிகள் கழகத்தினரிடம் ஏற்படுத்தப் போகின்ற தாக்கங்கள் எவை என்று கருதுகிறீர்கள்?
– த.நடராசன், கல்லக்குறிச்சி
பதில்: தன்னந்தனியராகவே சிந்தித்து, அந்தச் சுய சிந்தனையில் முளைத்த 100 ஆண்டு கண்ட தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கமும், அதன் பாதுகாப்பினில் ஆரியத்திடமிருந்து பாதுகாக்கப்பட்ட நீதிக்கட்சி என்ற சமூகநீதிக்கான திராவிடர் (அரசியல்) இயக்கம் – அதனைத் தக்க நேரத்தில், தோல்வி நெருப்பில் புடம் போட்டத் தங்கமாக்கி, புது ஒளியோடு வெளிவந்த திராவிடர் கழகமும், அதன் அரசியல் பிரிவுபோல், கொள்கைகளைச் சட்டமாக்கிய தி.மு.க. என்ற அரசியல் குழலும் எத்தகைய முக்கியத்துவம் பெற்றவை என்பதை உணர்த்திடத் தக்கவை. திராவிடர் இயக்கத்தில் ஆரியம் எத்தனை சூழ்ச்சி முதலியவற்றைச் செய்தாலும், அடிவேரான நமது கொள்கை ஆலமரத்தை எந்தப் புயலும் அசைத்துவிட முடியாத ஆயிரங்காலத்துப் பயிர் என்பதற்குச் சில துளிகள் மூலமாக எடுத்துக்காட்டி, புதுமுறுக்கில் களம் காணத் தயார் நிலையில் உள்ளது இயக்கம் என்பதைப் பறைசாற்றுகின்றன!
கேள்வி: ‘கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) இந்தியக் குடிமகள்(ன்) சான்றாகக் கொள்ள முடியாது’ என்று ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அறிவித் துள்ளதே (25.6.2026) – மக்களின் குடியுரிமையை எதை வைத்து நிரூபிப்பது? ஏன் இப்படியொரு அறிவிப்பு?
– ஓவியன், அரும்பாக்கம்
பதில்: இதில் புதைந்துள்ள சூழ்ச்சி அம்பலப்படுத்தப்பட வேண்டும் – புரிந்த கட்சிகளின் அறிவார்ந்த தலைவர்கள். குறிப்பிட்டவர்களின் குடியுரிமைப் பறிப்புக்கு இது முதல் ஆயத்த ஆபத்து.ஏற்கெனவே ஆதார் அட்டையை அதனை ஏதோ வெகுச் சாதாரண துண்டுத்தாள் போல் ஆக்கிவிட்டார்கள். இது இரண்டாம்கட்ட ஏற்பாடு – பாஸ்போர்ட் குடியுரிமைச் சான்று இல்லையாயின் – யாருக்கு வேண்டுமானாலும் பாஸ்போர்ட் கடவுச் சீட்டு வழங்கப்படுமா? யோசியுங்கள்!

கேள்வி: கணவனை விட மனைவி அதிக ஊதியம் பெறுபவரானால் கணவன் மனைவிக்கு வாழ்வூதியம் தரத் தேவையில்லை என்ற கருநாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கதா?
– ம.மலர்விழி, திருவள்ளூர்
பதில்: தவறான, ஏற்க முடியாத மனித உரிமைப் பறிப்புக்கான ஒரு பிற்போக்குத் தீர்ப்பு!
கேள்வி: மக்களின் வாழ்நாளை நீட்டிக்கப் பாடுபடும் மருத்துவர்களின் வாழ்நாள்கள் குறைவதாகச் செய்திகள் வருகின்றனவே?
– திவ்யபாரதி, சாலிகிராமம்
பதில்: வருத்தப்பட வேண்டிய, தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. இது சமூகக் கவலையுடன் கூடிய ஒரு முக்கியக் கடமை – அரசு உள்பட அனைவருக்குமே!
கேள்வி: ஆவின் பால் விநியோகம் குறைப்பு என்று பலர் கூறி வருவதும், இல்லை என்று அரசுத் தரப்பிலும், அந் நிறுவனமும் அதை மறுத்து வருவதும் தொடர்கதையாய் இருக்கலாமா? தீர்வுகள் என்ன?
– பொ.கர்ணன், விழுப்புரம்
பதில்: கண்டனத்திற்குரியது; உடனடியாக அரசு முன்வந்து நிலைமையைச் சீராக்க முயற்சி எடுப்பது அவசியம் – அவசரம்!

கேள்வி: ஆயிரம் அறப் போராட்டக் கள இளைஞர்களுக்கு தாங்கள் அறிவிக்கும் போராட்டக் களம், அவ் இளைஞர்கள் முன் வைக்கவுள்ள களப் பணிகள் குறித்துக் கூறுவீர்களா?
– பா.பார்த்திபன், மங்களபுரம்
பதில்: தொடர்ந்து ‘விடுதலை’யைப் படிக்கும் தங்களைப் போன்றவர்கள், ‘விடுதலை’ மூலம் செயல் வீரர்களாகியோர் பக்குவப்பட்ட முழுக் கொள்கை யாளர்களாக ஆக்கப்பட்டுப் பட்டைத் தீட்டப்பட்ட வைரங்களாக்கப்படுவார்கள்!
கேள்வி: ஆழ்துளைக் கிணறுகளைத் தக்க வகையில் மூடி வைக்குமாறு ஒன்றிய – மாநில அரசுகள் அறிவுறுத்தி எச்சரித்தப் பின்பும் மக்கள் அதனை அலட்சியப்படுத்துவது ஏன்? அரியானா மாநில சிறுவனின் அண்மை மரணத்திற்குப் பின்பாவது திருந்துவார்களா? என்னதான் தீர்வு?
– மூ.அருண், ஆலந்தூர்
பதில்: அதற்குரிய துறையினரிடம், அரசுகள் கவனச் சிதறல் இன்றி கடமையாற்ற அறிவுறுத்தல் அவசியம்.

கேள்வி: எஸ்.அய்.ஆர். – தேர்தல் ஆணையம் குறித்துத் தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி அளித்துள்ள கடிதத்தில் தி.மு.க.வும் கையெழுத்திட்டுள்ளதே – அக் கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்றுள்ளதா?
– இரா.கதிரேசன், திருச்சி
பதில்: இந்தியா கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகவில்லையே – அப்படியே தனித்தே இருந்தாலும் நியாயத்தைக் கேட்க எவரும், எக்கட்சியும் முன்வர உரிமை உண்டு.
கேள்வி: நீதிமன்றங்களே பல வழக்குகளில் நீதியை சரியாக வழங்காதபோது போராட்டங்களும், கடும் முயற்சிகளும் (எ.கா. இடஒதுக்கீடு, சமூகநீதிக்காக) வீணாகிப் போகின்றனவே! இதற்கு தீர்வுதான் எப்போது?
– கவிமுரசு, காந்திநகர்
பதில்: உயர்நீதிமன்றம் அதைவிட முக்கியமாக உச்சநீதிமன்ற நீதித்துறையில் சமூகநீதி முழுமையாகக் கிடைக்கத் தொடர்ந்து போராடி, ஒடுக்கப்பட்டோர் போதிய விகிதத்தில் நீதிபதிகளாக வந்தால் இந்த நிலையை மாற்ற முடியும்!
கேள்வி: கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, விவசாய மேலாண்மை நாட்டுக்கு எவ்வளவு இன்றியமையாதவை என்பதை மக்கள் மறந்துவிடுகின்றனர்; ஆனால், நெகிழி போன்றவற்றைப் பயன்படுத்தி, அநாவசியமாகத் தூக்கிப் போட்டுச் செல்கின்றனரே! இதுபற்றித் தங்கள் அறிவுரை என்ன?
– மொ.கந்தசாமி, பழனி
பதில்: நோய்க்கு அப்போதைய சிகிச்சை முக்கியம். என்றாலும் நோய் நாடி மீண்டும் நோய் வராமல் தடுப்பதற்கு நோய்க் கிருமிகளைக் கண்டு அகற்ற வேண்டியது எப்படி முக்கியமோ அந்த அணுகுமுறையை சம்பந்தப்பட்ட துறையினர் தவறாது இதில் கடைப்பிடித்தல் இன்றியமையாதது.
