மாணவர் மரணமும், மக்கள் மவுனமும்! உலகப் புரட்சிகளும், இந்திய ஆட்சிகளும்!-புதூரான்

4 Min Read

வரலாற்றில் பல நேரங்களில் தனி மனிதர்களின் மரணங்கள், வெறும் துயரச் சம்பவங்களாகக் கடந்துபோகாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கி, மாபெரும் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளன. “ஒரு சிறிய தீப்பொறி காட்டை எரிக்கும்” என்பது போல, மாணவர்களின் மரணங்கள் உலக நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகளையும், தவறான கொள்கை களையும் வீழ்த்தியிருக்கின்றன. ஆனால், தற்கால இந்தியாவில் நீட் தேர்வினால் தொடரும் மாணவர் தற்கொலைகளும், அதற்குப் பின்னாலுள்ள அரசியல் சூழ்ச்சிகளும் நம்மைப் பெரும் சிந்தனைக்கு உள்ளாக்குகின்றன.

உலக வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய மாணவர் எழுச்சிகள்!

  1. தென்கொரியாவின் ஜனநாயகப் புரட்சி (1987)
    – லீ ஹான்-யோல் மரணம்.

1987-இல் தென்கொரியாவில் கொடூரமான ராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் முறையான தேர்தல் நடத்தக் கோரிப் போராடினர். ராணுவம் இப்போராட்டங்களைச் சித்திரவதைகள் மூலம் ஒடுக்க நினைத்ததால், மாணவர்கள் சற்றே பின்வாங்கினர்.

இந்தியா, ஞாயிறு மலர்

அச்சமயத்தில், ‘யோன்சி’ பல்கலைக்கழக மாணவரான லீ ஹான்-யோல் (Lee Han-yeol) தனிநபராக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மிரட்ட வீசப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டு, அவரது தலையின் பின்பகுதியைத் தாக்கியது.  ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்த புகைப்படம் நாடு முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. 40 நாட்கள் கோமாவில் இருந்து அவர் உயிரிழந்தபோது, கொரிய மக்களின் மனசாட்சி விழித்துக்கொண்டது.

விளைவு

அவரது இறுதி ஊர்வலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். இதில் என்ன வியப்பு என்றால் பெரும்பாலான ராணுவ வீரர்களும் சீருடையோடு போராட்டத்தில் இணைந்தனர். ஒட்டுமொத்த நாட்டின் இயக்கமும் ஸ்தம்பித்தது. இறுதியில் ராணுவ அரசு பணிந்தது; தென்கொரியாவில் மக்களாட்சி மலர்ந்தது. இன்று தென்கொரியா மின்னணுத் துறையில் உலகில் முதலிடத்தில் இருப்பதற்கு அன்றைய மாணவர் புரட்சியே அடித்தளம்.

  1. துருக்கியின் மதச்சார்பற்ற கல்விப் போராட்டம் (2022) – எனெஸ் காரா மரணம்

துருக்கியில் 2022-ஆம் ஆண்டு எனெஸ் காரா (Enes Kara) என்ற மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்டார். ஏழ்மைநிலை காரணங்களால் அரசு ஆதரவு பெற்ற மத அமைப்பின் விடுதியில் தங்கியிருந்த அவர், அங்கு திணிக்கப்பட்ட கட்டாய மத வழிபாடுகளை எதிர்த்தார். அவரது தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முன் ஒரு காணொலிக் காட்சிப் பதிவை வெளியிட்டார்.

இந்தியா, ஞாயிறு மலர்

அதில், விடுதியின் நெருக்கடிகள் குறித்தும், தன்னைப் போன்ற கடவுள் நம்பிக்கையற்ற புரட்சிகரக் கருத்துடைய பிற மாணவர்களின் எதிர்காலப் பயம் குறித்தும் பேசியிருந்தார். இந்த காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி, மக்கள் மற்றும் பெற்றோர்களை வீதிக்குக் கொண்டுவந்தது.

விளைவு

இரண்டு மாதங்களுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் முடங்கின. அரசின் தவறான கொள்கைகளுக்கும், மத வழிபாட்டுத் திணிப்பு தனிநபர் சுதந்திரம் பறிப்பு மற்றும் பாதுகாப்பற்ற விடுதி சூழலுக்கும் எதிராக மக்கள் திரண்டனர். இது யூரேசியப் பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி, அரசின் கொள்கை மாற்றங்களுக்கு வழிவகுத்தது.

இந்திய யதார்த்தம்:  ‘நீட்’ தேர்வும் தொடரும் பலிகளும்!

உலக நாடுகள் மாணவர் மரணங்களைக் கண்டு கொதித் தெழுந்த வரலாற்றைக் கொண் டுள்ள நிலையில், தற்போதைய இந்தியாவின் நிலை கெட்ட வாய்ப்பாக வேறுபாட்டுக் காணப் படுகிறது.

இந்தியா, ஞாயிறு மலர்

10 நாட்களில் 20 மரணங்கள்:

இந்தியாவில் நீட் தேர்வு என்ற ஒற்றை முறை கொண்டு வரப்பட்டதில் இருந்து மாணவர்களின் உயிர்கள் கிள்ளுக்கீரையாகி வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் ஒரே வாரத்தில் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2017-இல் அனிதாவின் மரணத்தோடு தொடங்கிய இந்தத் துயரம், இன்றுவரை தமிழ்நாட்டில் மட்டுமே 73-க்கும் மேற்பட்ட சிறந்த மாணவர்களின் உயிரைக் காவு வாங்கியுள்ளது.

மக்களின் கவனம் திசைதிருப்பப்படுவது எப்படி?

தென்கொரியாவிலும் துருக்கியிலும் மக்கள் ஓரணியில் திரண்டு அரசைப் பணிய வைத்தனர். ஆனால் இந்தியாவில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தாரும், சில மாணவர் அமைப்புகளும் மட்டுமே ஆங்காங்கே போராடிவிட்டுத் துயரத்தோடு கலைந்து போகும் சூழல் உள்ளது. மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்காமல் இருக்க, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகள் கையாளப்படுகின்றன.

மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, மாணவர் மரணங்கள் போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளை நோக்கி ஒன்றுதிரளக் கூடாது என்பதற்காக, சமூகத்தில் எப்போதும் ஏதாவதொரு விவாதம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

மதவாத அரசியல்: ‘இந்து-முஸ்லிம்’, ‘மசூதி-கோவில்’, ‘பசு மாடு’, ‘பாகிஸ்தான்’ போன்ற உணர்வுப் பூர்வமான தலைப்புகளை முன்னிறுத்தி, மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக் குரலும் ஒன்று சேரவிடாமல் சிதறடிக்கப்படுகிறது.

தென்கொரியாவின் லீ ஹான்-யோல், துருக்கியின் எனெஸ் காரா போன்றோரின் மரணங்கள் அந்தந்த நாட்டு சமூகங்களின் ஆழ்ந்த வலிகளையும், அமைப்பின் தோல்விகளையும் வெளிச்சமிட்டுக் காட்டின. அதேபோல், இந்தியாவின் நீட் தேர்வு மரணங்கள் நம் கல்வி முறையின், சமூகத்தின் தோல்வியையே காட்டுகின்றன.

அரசியல் திசைதிருப்பல்களைக் கடந்து, மக்களின் உண்மையான கோபமும் ஏமாற்றமும் ஒரு புள்ளியில் இணையும் போதுதான், மாணவர்களின் உயிர்களைப் பலிவாங்கும் இத்தகைய கல்விச் சுரண்டல் முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கல்வி என்பது சமத்துவத்திற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, மாணவர்களின் மரணத்திற்குப் பின் கல்லறைகளின் மேல் கட்டப்படும் வணிகக் கோபுரமாக இருக்கவிடக் கூடாது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *