புதுடில்லி, ஜூலை 2– ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, அஞ்சல் நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ந்து 9ஆவது காலாண்டாக மாற்றமின்றி நீட்டிக்கப்பட்டுள்ளன.
அரசுத் தரப்பில் கடைசியாக கடந்த 2023-2024 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போதைய ஜூலை – செப்டம்பர் காலாண் டிலும் வட்டி விகிதங்கள் அப்படியே தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங் களுக்கான தற்போதைய வட்டி விகித விவரங்கள் பின்வருமாறு:
சுகன்யா சம்ரிதி திட்டம் (பெண் குழந்தைகள் சேமிப்பு) 8.2 சதவீதம் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) 7.7 சதவீதம் கிசான் விகாஸ் பத்திரம் (KVP) (115 மாதங்களில் முதிர்வடையும்) 7.5 சதவீதம் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) 7.4 சதவீதம் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) 7.1 சதவீதம் 3 ஆண்டு கால வைப்புத்தொகை (FD) 7.1 சதவீதம் அஞ்சலக சேமிப்பு கணக்கு 4.0 சதவீதம் பிரபலமான பிபிஎப் (PPF) மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1 சதவீதம் மற்றும் 4 சதவீதம் ஆக மாற்றமின்றி தக்க வைக்கப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் வழக்கமான லாபத்தை தொடர்ந்து பெற முடியும் என நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
