காரைக்கால் மாங்கனி விழா
கதையைக் கேளுங்கோ! கேளுங்கோ!!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மாங்கனி திருவிழாவாம்!
ஒரு நாளல்ல, இரு நாட்கள் அல்ல – ஒரு மாதம் இந்தத் தெருக் கூத்தாம்.
எதற்குத்தான் புராணப் புழுதிகள் இல்லை – இதற்கும் தாராளமாகவே உண்டு. ஆனால் நம்புவதற்கோ ஒரு சிறிதும் இல்லை. கதையைக் கேட்கலாம்…!
- இரண்டு மாங்கனிகள்
காரைக்காலில் வாழ்ந்த தனதத்தன் என்ற பெரும் வணிகரின் மகள் புனிதவதியார். இவர் சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டவர். இவருக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்ற வணிகருக்கும் விவாக சுபமுகூர்த்தம் நடைபெற்றது.
ஒருநாள், பரமதத்தன் தனது கடைக்கு வந்த ஒருவரிடமிருந்து இரண்டு மாங்கனிகளைப் பெற்று, அவற்றை வீட்டிற்குக் கொடுத்து அனுப்பினான். புனிதவதியார் அவற்றை பத்திரமாக எடுத்து வைத்தார்.
- சிவனடியாரின் வருகை
மதிய உணவுக்குச் சற்று முன்பு, பசியோடு ஒரு சிவனடியார் புனிதவதியாரின் இல்லத்திற்கு வந்தார். சிவனடியாரை சிவனாகவே பாவித்த புனிதவதியார், அவருக்கு அன்போடு உணவளித்தார். அப்போது, வீட்டில் சமைத்த காய்கறிகள் முழுமையாகத் தயாராகாததால், தன் கணவர் கொடுத்து அனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒன்றை அடியாருக்குப் பரிமாறினார். அடியாரும் பசி ஆறி, அம்மையாரை வாழ்த்திச் சென்றார்.
- கணவனின் கேள்வி
மதியம் உணவருந்த வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு புனிதவதியார் உணவு பரிமாறினார். மீதமிருந்த ஒரு மாங்கனியையும் அவருக்கு வைத்தார். அந்த மாம்பழத்தின் அசாத்திய சுவையில் மயங்கிய பரமதத்தன், “மற்றொரு மாங்கனியையும் எடுத்து வா” என்று கூறினான் (ஏன் இன்னொன்றை மனைவி புசிக்கக் கூடாதோ!).
புனிதவதியார் என்ன செய்வதென்று தெரி யாமல் திகைத்தார். கணவனுக்கு உண்மை தெரிந்தால் அடியாருக்கு உணவு கொடுத்ததை தவறாக நினைத்துவிடுவாரோ என்று அஞ்சி, சமையலறைக்குள் சென்று சிவபெருமானை உருகி வேண்டினார் (உண்மையைச் சொல்ல சிவபக்தைக்கு அச்சமோ!).
- ‘தெய்வீக மாங்கனி’யாம்
அம்மையாரின் பக்திக்கு உருகிய சிவபெருமான், அவர் கைகளில் ஒரு மாங்கனி தோன்றுமாறு அருளினார். அந்த தெய்வீக மாங்கனியை புனிதவதியார் தன் கணவருக்குப் பரிமாறினார். கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் நம்பித் தொலைத்து நாசமாவது தானே பக்தி!).
முதலில் சாப்பிட்ட கனியை விட இது பல மடங்கு சுவை யாகவும், அமுதமாகவும் இருந்ததால் பரமதத்தனுக்கு சந்தேகம் வந்தது. “இது நான் வாங்கி அனுப்பிய கனி அல்ல, மூவுலகிலும் கிடைக்காத சுவை உடையது. இதன் உண்மை என்ன?” என்று கேட்டார். (மூவுலகை இவர் சென்று பார்த்தாரோ!) புனிதவதியாரும் நடந்த உண்மையை அப்படியே கூறினார்.
- பரமதத்தனின் சோதனை
பக்தி இல்லாத பரமதத்தனால் அதை நம்ப முடியவில்லை. “இது இறைவனின் அருள் என்றால், என் கண் முன்னால் மற்றுமொரு கனியை வரவழைத்துக் காட்டு” என்று சவால் விட்டானாம்.
மீண்டும் சமையலறை சென்ற அம்மையார், “இறைவா, நீ கனியைத் தராவிட்டால் என் கணவர் என்னை பொய்யர் என்பார், உனது அருளும் வீணாகும்” என்று வேண்ட, மீண்டும் அவர் கையில் ஒரு மாங்கனி வந்தது. அதை அவர் கணவனிடம் கொடுத்த மாத்திரத்தில், அந்தக் கனி பரமதத்தன் கைகளில் இருந்து மறைந்து போனது. (கப்சாவுக்கும் ஓர் அளவு இல்லையா!).
- அம்மையார் கோலம் பூணுதல்:
இந்த அதிசயத்தைக் கண்ட பரமதத்தன், தன் மனைவி சாதாரண பெண் அல்ல, ஒரு தெய்வீகப் பிறவி என்பதை உணர்ந்தானாம். அவளோடு வாழ அஞ்சி, அவளை விட்டுப் பிரிந்து பாண்டிய நாட்டுக்குச் சென்று வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டானாம். பின்னாளில் கணவர் தன்னை தெய்வமாக வணங்குவதைக் கண்ட புனிதவதியார், இந்த அழகிய பெண் உடலே எனக்கு வேண்டாம் என்று சிவனிடம் வேண்டி, “பேய் வடிவம்” (எலும்பு உருவம்) பெற்று தில்லை நடராஜனையும், கயிலை நாதனையும் தரிசிக்கச் சென்றாளாம் (பேய்க்குத்தான் உருவம் கிடையாதே – எப்படி எலும்பு உருவம் கொண்டாளாம்?).
தலையாலேயே நடந்து சிவபெருமான் இருக்கும் (?) கைலாயம் சென்றாளாம். (‘பெண்ணுருவில் தலையால் நடந்து சென்றாள்’ என்று சொல்லுவது – எத்தகைய ஆபாசம்).
இப்பொழுது பக்தை என்று சொல்லி இப்படி சென்றால் ஏற்பார்களா!
- சிவன் அருளாள் மாங்கனித் திருவிழாவாம்!
இறையருளால் அம்மையார் மாங்கனி பெற்ற (?) இந்த அற்புத நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் காரைக்காலில் ஆனி மாதம் பவுர்ணமி அன்று திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
- மாங்கனி இறைத்தல்:
விழாவின் முக்கிய நாளான மூன்றாம் நாளில், பிச்சாண்டவர் (சிவபெருமான்) வீதி உலா வரும்போது, பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறவும், இறை அருள் பெறவும் தங்கள் வீடுகளின் மாடிகளிலிருந்தும், வாசல்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாம்பழங்களை வாரி இறைப்பார்கள் – இறைத்தும் வருகிறார்கள். பசித்தவயிற்றுக்குத் தேவையான மாங்கனி தெருக்களில் பாழாய்ப் போகும் கொடுமையை என்னவென்று சொல்லுவது!
மக்கள் அந்த மாங்கனிகளைச் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு எல்லாம் பேறு கிட்டும், நோய்கள் நீங்கும் என்பதும் பக்தர்களின் பலத்த நம்பிக்கையாம்.
பக்தி என்றால் புத்தி பாழ்! பொருள் பாழ்!! காலம் பாழ்!!! இவையெல்லாம் பாழாய்ப் போவதற்கு காரணமான பக்தி பாழாக வேண்டுமானால் – அது பகுத்தறிவினால் மட்டுமே!
