கருஞ்சிறுத்தை
கமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் பிரச்சினை 175 ஆண்டுகளாகத் தொடர்கிறது. 1850இல் அன்றைய மைசூரு அரசு அபிவிருத்திப் பணிகள் என்று தொடங்கியதிலிருந்து, ‘மதறாஸ் மாகாண’ விவசாயிகள் பாதிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து, 42 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் விவசாயப் பகுதிகளுக்குப் பாதிப்பின்றி அபிவிருத்தி(வளர்ச்சி)த் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்று 1892இல் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் 1909இல் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் அணைத் திட்டங்கள், அதன்பிறகு 1924இல் ஒப்பந்தம், மொழிவாரி மாநிலப் பிரிப்புக்குப் பின்னர், மீண்டும் 1960களில் கருநாடக அரசின் அத்துமீறல்கள், உச்சநீதிமன்ற வழக்குகள் என்று நீண்டு, 1974இல் முந்தைய ஒப்பந்தம் போட்டு, 50 ஆண்டுகள் ஆகிவிட்டதால், ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று தன்னிச்சையாக அறிவித்தது கருநாடகா. பிரதமர் இந்திரா காந்தி ஏற்பாட்டில் மீண்டும் பேச்சுவார்த்தை – அதுவும் தோல்வியில் முடிந்ததையடுத்து, மீண்டும் போராட்டங்கள், வழக்குகள்!
இந்தச் சூழலில் தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரியது திராவிடர் கழகம். அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஒன்றிய – மாநில அரசுகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் 1985 அக்டோபர் 30 அன்று மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டையே உணவுப் பஞ்சம் உலுக்கும் ஆபத்து இருப்பதை எடுத்துக்காட்டி எச்சரித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். விவசாயத் தொழிலாளர்கள் உள்ளூர் அகதிகளாகிக் கிடக்கும் அவலத்தைப் படம்பிடித்தார்.
கீழத் தஞ்சை மாவட்டத்தின் 10 தாலுகா பணிமனைகள், மேலத் தஞ்சை மாவட்டத்தின் 11 தாலுகா பணிமனைகள், திருச்சி, லால்குடி வட்ட தாலுகா பணிமனைகள் முன்பு மறியல் முற்றுகை அறப் போராட்டம் என்று அறிவிப்பு விடுத்ததுடன் நில்லாமல், திருவாரூரில் தாமே தலைமையேற்று, பல்லாயிரம் தாய்மார்களுடன் சிறையேகவிருப்பதாக அறிவித்தார். நெற்களஞ்சியம் போர்க்கோலம் பூண்டது!
கிராமம் கிராமமாகச் சென்றார் தமிழர் தலைவர்! “ஆண்களைவிட இம்முறை தாய்மார்களே போராட்டத்திற்கு முன் வரிசையில் நில்லுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்! தலைவரின் சொற்கள் தஞ்சை மாவட்டத்தவர்க்கு வேண்டுகோளாகவா கேட்கும்? கட்டளையாக ஏற்றனர்! அணி அணியாகக் கிராமங்களிலிருந்து கருப்புச் சேலையுடுத்தியவாறு கடமை வேங்கைகள் கிளம்பினர்!
திருவாரூரில் மட்டும் 500 பெண்கள் உள்பட 2000 பேர் கைதாயினர்!
15ஆம் முறையாகச் சிறையேகினார் தமிழர் தலைவர்! அடுத்தடுத்து மாநாடுகள், பிரச்சாரங்கள், மக்கள் இயக்கம் என்று சிறை செல்லும் முன் அறிவித்தார்! (சொன்னபடி அவை இன்றும் தொடர்கின்றன). அதுவரை காணாத திருச்சி மத்திய சிறைச்சாலையைக் கண்டார்! அதற்கு முந்தைய மாதம் ஹிந்தி எதிர்ப்புக்காகக் களம் கண்டு சிறை சென்று மீண்டவர்களும், காவிரிக்காக மீண்டும் களம் கண்டனர் – மீண்டும் சிறை சென்றனர்!
‘‘காவிரிப் பிரச்சினையைத் தீர்க்கச் சட்டப்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும்’’ என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அரிய – உரிய ஆலோசனையை வழங்கினார்.
அதன் பின்னர் தான் நடுவர் மன்றம் அமைக்கும் கோரிக்கை உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது, இந்தியப் பிரதமராக இருந்தார் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்! பின்னரும் ஒவ்வோராண்டும் போராட்டம் – இடையில் ஒரு முறை பெங்களூரில் தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அளவுக்கு நிலைமை மோசமானது. காவிரி நடுவர் மன்றத்தின் முடிவும், அதை அரசிதழில் வெளியிடுவதற்கான போராட்டமும், உச்சநீதிமன்றத்தின் வழக்குகளும் நீண்டு நீண்டு, காவிரியின் நீளத்திற்குப் போட்டி போடுகின்றன. ஒரு வழியாகக் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டு, அங்கே தீர்வு காணலாம் என்னும் சூழல் அமைந்த பின்னும், பிரச்சினையைத் தொடரும் வகையில் இன்னொரு அணை கட்டும் திட்டத்தைத் தூக்கிக் கொண்டு வந்தது கருநாடகா! அதுதான் மேகதாது!
2015 முதல் 11 ஆண்டுகளாக இப் பிரச்சினையின் ஆபத்தை ஒன்றிய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் எடுத்துச் சொல்கிறது தமிழ்நாடு! அரசியல் காரணங்களாலும், அலட்சியப் போக்காலும் தமிழ்நாட்டின் குடிநீர், பாசன உரிமை பந்தாடப்படுகிறது! ‘இது அரசியல் அல்ல; உயிர்நாடிப் பிரச்சினை’ என்று கூறி, ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர்! நெற் களத்திற்குச் செல்ல வேண்டியவர்களைப் போராட்டக் களத்திற்கு இழுக்கிறது கருநாடகா! ‘எப்போதும் அஞ்சோம் – எந்நிலையிலும் துஞ்சோம்’ என, இதோ தலைவரின் கட்டளையேற்றுத் திரளுகிறார்கள் தோழர்கள்!
40 ஆண்டுகளுக்குப் பிறகு அதே திருவாரூர்! வரலாற்றை மீட்டு வீச்சுடன் களத்திற்கு வருகிறார்கள் கருப்புடை தரித்தோர்! இந்தத் தலைமுறையும் பார்க்கட்டும் – இது திருவாரூர் தேர்த் திருவிழா அல்ல; உரிமைப் போர்த் திருவிழா!
