கராகஸ், ஜூன் 27– வெனிசுலா பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம் 2 விமானங்களில் 35 டன் நிவாரணப் பொருட்களை வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவின் ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ – வெனிசுலாவில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு உதவுவதற்காக இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ தொடங்கப்பட்டு உள்ளது. (‘அமிஸ்டாட்’ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ‘நட்பு’). இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘இந்திய விமானப் படையின் சி17 ரக சரக்கு விமானங்கள் மூலம் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உட்பட 35 டன் நிவாரணப் பொருட்கள் வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தை சேர்ந்த 9 மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உட்பட 41 மருத்துவப் பணியாளர்களும் வெனிசுலாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சைகளை அளிப்பார்கள் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் சார்பில் வெனிசுலாவில் இலவசமாக இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் தகவல் தொடர்பு சீரடைந்திருக்கிறது. ஆனால் மின் விநியோகம், குடிநீர் விநியோகம், சமையல் காஸ் விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பூகம்ப பாதிப்புகள் குறித்து மீட்புப் படை வீரர்கள் கூறியதாவது: அடுத்தடுத்து ஏற்பட்ட 2 பூகம்பங்களால் லா குய்ராவின் மலைப் பகுதிகளில் கட்டப்பட்டிருந்த அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளும் நொறுங்கி சரிந்துள்ளன. தலைநகர் கராகஸிலும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்துள்ளன.
வெனிசுலா பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்களும் மீட்புப் பணிகளில் உதவி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மோப்ப நாய்களின் உதவியுடன் அதிதீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
