கி.இரா.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ‘கும்பாபிஷேகம்’ எனப்படுகின்ற குடமுழுக்கை ஒருவழியாக நடத்தி (17.9.2026) முடித்துள்ளனர். கோயிலின் இராஜகோபுரம் உள்ளிட்டப் பல இடங்களில் திருப்பணிகள் என்று மட்டுமே ரூ.25 கோடிக்கும் மேல் செலவு!
குடமுழுக்குத் தள்ளிப் போனது – ஏன்?
“12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘கும்பாபிஷேகம்’ நடத்தப்பட்டாக வேண்டும்” என்கின்ற ஆகம விதியோ புறந்தள்ளப்பட்டுவிட்டது. ஏன், எதனால் என்பது தெரியுமா? பக்தர்களோ, சர்வசக்தி மிக்க மீனாட்சி அம்மன் மதுரையில் குடிகொண்டு உலகாட்சிச் செய்வதாகக் கூறிக் களிப்பில் ஆழ்கின்றனர். ஆனால், இக் கோயிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் 2018இல் தீ விபத்து ஏற்பட்டது. விளைந்த பெரும் சேதத்தைச் சீரமைக்கும் பணிகளோ நீண்டன. இதனால், 2021ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய குடமுழுக்கை இந்த ஆண்டில் (2026) நடத்தியுள்ளனராம். இந்த வீரவசந்தராயர் மண்டபத்தின் சீரமைப்புப் பணிகளில் குறிப்பிட்டனவற்றுக்கு மட்டுமே செலவோ ரூ.38.3 கோடியில்! இக்குடமுழுக்கிற்காக மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சிலைகட்கு மட்டுமா? இக்கோயிலில் உள்ள 450-க்கும் மேற்பட்ட சிலைகளுக்கும் மருந்துக் கலவை சாற்றப்பட்டதாம். என்ன மருந்து தெரியுமா? தேன்மெழுகு, குங்குலியம், செம்பஞ்சி, வெண்ணெய், சுக்கான்தான், கற்காவி, கொம்பரக்கு, ஜாதிலிங்கம் ஆகிய 8 மூலிகைகள். இவற்றைச் சரியான எடையில் ஒன்றாக்கி, 7 இடியலில் இடித்துப் பொடியாக்கி அஷ்டபந்தனக் கலவைத் தயாரிக்கப்பட்டதாம்.
எதற்கிந்த மருந்து?
இப்படித் தயாரிக்கப்பட்ட இந்தக் கலவை மருந்தோ எதற்காகத் தெரியுமா? கடவுள் சிலைகளின் பீடத்தில் பதிக்கப்பட்டுள்ள எந்திரத் தகட்டில் இம்மருந்துக் கலவையைப் பூசுவதால்தான் அந்தத் தகடு பாதுகாக்கப்படுமாம். அது மட்டுமா? கடவுளர் சிலைகளையும், பீடத்தையும் அசையாமல் ஒன்றாக நிலை நிறுத்தியாக வேண்டுமல்லவா? அவற்றிலும் இந்த மருந்துக் கலவையைச் சாற்றுகின்றனராம். ஆக மொத்தத்தில் மதுரை மீனாட்சி அரசாட்சி நடத்துவதாகக் கூறப்படும் கடவுளச்சியின் சிலை ஆட்டம் கண்டுவிடக் கூடாதென்பதற்கே – இத்தகைய மருந்துச் சாற்றுதலாம்.
சுக்கல் நூறானது
மதுரையின் வடக்கு ஆடி வீதியிலோ – 84 குண்டங்களுடன் அமைக்கப்பட்ட பிரமாண்டமான யாக சாலைகள். இதற்காக செலவிடப்பட்டதோ ரூ.25 இலட்சமாம்! நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் 12ஆம் கால யாக பூஜை வரை பல நாள்களில் அவ்வப்போது நடத்தி நல்ல வருமானம் தேடிக் கொண்டதுதான் மிச்சம். ஏனெனில், யாக சாலை பூஜைகளின் அர்த்தமற்றச் சடங்குச் சமாச்சாரங்கள் முடிவடைந்தவுடன் அத்தனை ஏற்பாடுகளும் சுக்கல் நூறாகப் பிய்த்தெறியப்பட்டு விடப்பட்டனவாம். வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், உள்ளூர் வரைத் திரட்டப்பட்டு வரவழைக்கப்பட்ட 5 ஆயிரம் கிலோ அளவிற்கான பல விதமான மலர்க் குவியல்கள். அத்தனையும் அலங்கரிப்புக்கு என்று பாழடிக்கப்பட்டன. அதற்குமொருப் பண விரயம்!
பாதுகாப்புப் பணிக்கென்றோ 6,500 காவலர்கள் குவிப்பு! மதுரை மாவட்ட மக்களுக்கோ ஒரு நாள் அரசு விடுமுறை. இதிலும் மதுரை மாநகரின் முக்கியப் பள்ளிகள் 24-க்கிற்கு மட்டும் இரு நாள் விடுமுறை. ஏன் தெரியுமா? காவலர்கள் தங்கிக் கொள்வதற்காம். இதற்கென்று பள்ளிகள்தான் கிடைத்தனவா? கடவுள் – கோயில் – பக்தி என்று வந்துவிட்டால் வரைமுறை – நெறிமுறைகட்கு எதற்கும் இடம் இல்லை என்பார்கள் போலும்!
கடவுள் பார்த்துக் கொள்வார் – எதற்குக் கண்காணிப்புப் படக் கருவிகள் என்று விட்டனரா என்றால் – அதுதான் இல்லை. ஆங்காங்கு நூற்றுக்கணக்கில் கண்காணிப்புப் படக் கருவிகளை நிறுவித் தள்ளினர். கடவுளை நம்பி வந்தவர்களிடம் களவு செய்திடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடாம்!
தங்கக் குடங்களில் புனித நீராம்!
கங்கை – யமுனை – காவிரி – வைகை – தாமிரபரணி உள்ளிட்டப் பல ஆறுகளின் நீரைத் தங்கக் குடங்களில் ஒருங்கே சேர்த்து – அதுவே ‘புனித நீராம்’. அந்த நீரைத் கோபுரக் கலசங்களின் மீதும், கோயில் பிரகாரங்களில் பட வைத்தும் ‘கும்பாபிஷேகம்’ நிறைவேறியதாம். ஆறுகளில் இருந்துக் கொணர்ந்து தங்கக் குடங்களில், ஒன்று சேர்த்த நீரைப் ‘புனித நீர்’ என்று போற்றிக் குடமுழுக்கின்போதும், குழுமியுள்ள பக்தர்கள் மீது தெளிப்பதற்கும் பயன்படுத்துகின்றனரே – அது எப்படிப் புனித நீராகின்றது? இந்திய ஆறுகளின் தூய்மைத் தன்மை என்ன என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தால் என்ன குறைந்துவிடப் போகின்றது?
மதச் சடங்கின் அவலம்
இந்தியாவில் உள்ள ஆறுகளில் கங்கை – ‘புனித கங்கை’ எனப் பூஜிக்கப்படுகின்றதே அங்கு செல்லும் பக்தர்கள் அன்றாடம் அந்த ஆற்றில் குவிக்கின்ற அசுத்தங்கள்தான் எவ்வளவு? உயிரற்ற உடல்கள் மதச் சடங்கு என்ற பெயரால் கணக்கிலடங்காதவை அப்படியே ஆற்றில் தள்ளப்படுகின்றனவே. நாள்தோறும் கங்கைக் கரையில் உயிரற்ற உடல்கள் பாதி எரிக்கப்பட்ட நிலையில், மிகுதியானவை ஆற்றில் வீசப்படுகின்றனவே. மதம் சார்ந்த ஒரு சடங்கு என்பதற்காக பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் இந்த அசுத்தமானக் கொடூரச் செயலுக்கு முடிவுதான் எப்போது? இத்தகைய ஆற்றின் நீரா – புனித நீர்? கங்கையின் உற்பத்தி இடமான கங்கோத்திரியில் நாளும் நடப்பது என்ன? அங்குத் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்கள் உள்ளிட்டப் பலவற்றை இலட்சக்கணக்கில் அங்கு கூடுகின்ற பக்தர்கள் ஆற்றிலும் வீசி – ஆற்றங்கரைகளையும் அசுத்தப்படுத்திச் செல்கின்றனரே – இப்படிப்பட்ட நிலையில் அந்த ஆற்றில் நல்ல தண்ணீர் எப்படி இருக்க முடியும்?
உத்தராகண்ட் மாநிலத்தின் கங்கை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள நகரம் அரித்துவார். புனிதமான மாதமென்று இந்த ஆண்டின் ஷராவண மாதத்தில் நடையாய் பல நூறு கிலோ மீட்டர்களும் நடந்துக் கடந்து இந்த ஆற்றின் நீரை மொண்டுச் செல்வதற்கென்று வருகின்ற பக்தர்கள் மட்டும் விட்டுச் செல்கின்ற கழிவுப் பொருள்கள் 7,000 டன்களுக்கும் மேல் இருக்கும் என்கின்றதே புள்ளி விவரம். எண்ணிப் பார்ப்பார்களா? உத்தரப்பிரேதேச மாநிலத்தில் கங்கை ஆற்றின் கரையோரம் உள்ள பிரயாக்ராஜ் நகரம், கடந்த ஆண்டில் அங்குக் கும்பமேளா நடைபெற்றபோது குவிந்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 60 கோடிப் பேர் என்கின்றனர். இவ்வளவு பேர் கூடியதால் அங்கு 30 ஆயிரம் டன் கழிவுப் பொருள்கள்தான் இறுதியில் குவிந்தன. எங்கே உள்ளது புனிதமும் – தூய்மையும்? எப்படி இருக்க முடியும்?
மாசுபடுத்தினால் தண்டனை
அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை சிறப்பு மிகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரை சார்ந்த கல் மண்டபத்தின் உரிமை கோரி தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் நிறைவில் வழங்கிய அந்தத் தீர்ப்பில் (30.7.2026) என்ன கூறப்பட்டது? அதன்படித் தனக்கெனத் தனி உரிமைகள் கொண்ட ஓர் உயிராக தாமிரபரணி ஆற்றை அங்கீகரித்து – மதச் சடங்கு என்ற போர்வையில் ஆற்றிலும் – ஆற்றின் கரையோரங்களிலும் மாசுபடுத்துவது கடுந் தண்டனைக்கும் – அபராதத்திற்கும் உரிய குற்றமென்று அத் தீர்ப்பில் குறிப்பிடவில்லையா? தயவு தாட்சண்யம் பாராது மாவட்ட நிர்வாகமும் – காவல் துறையும் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மதச் சடங்குகள் என்கிற பெயரால் ஆறுகள் மாசுபடுத்தப் படுவது தொடரும் நிலையில், நீதிமன்றங்களும் அதனைத் தெளிவாகச் சுட்டிக் காட்டி குமுறலை வெளிப்படுத்தும்போது – ஆறுகளின் நீரைப் புனித நீரென்பது மத மயக்கத்தில் உள்ள மக்களை எளிதில் முட்டாள்களாக்குவதன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? மதுரையில் நடைபெற்ற குடமுழுக்கின்போது அந்தப் ‘புனித நீரை’ ஸ்பிரே, டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீதும் தெளித்தனராம். அந்த நீரின் துளிகள் தங்கள் மேல் படவேண்டும் என்பதற்காக ‘பக்தப் பெருமக்கள்’ அலைபாய்ந்துத் தவியாய்த் தவித்ததும் அங்கொரு காட்சி! என்னே மடமை!!
இந்தக் கும்பாபிஷேகக் கூத்தடிப்புகளில் சமஸ்கிருத வேத மந்திரங்களை மறந்து விடுவார்களா என்ன? குடமுழுக்கின்போது 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்று -சமஸ்கிருத வேத பாராயணங்களைக் ‘கத்தோ – கத்தென்று’க் கத்தி ஓய்ந்தே போய் விட்டனராம். சமஸ்கிருத வேத மந்திரங்கள் சொல்லி முடிக்கப்பட்ட பின்பே – தேடிப் பிடிக்கப்பட்டத் தமிழ் ஓதுவார்கள் 24 பேரை வைத்துத் தேவாரம், திருவாசகம், திருமுறைப் பாடல்களைப் பாட வைத்தனராம்!
தமிழ் ஓதுவார்களின் ஆர்ப்பாட்டம்
தமிழ் ஓதுவார்களுக்கு உரிய முக்கியத்துவம் தரக் கோரியும், ஓதுவார்களைக் கருவறைக்குள் அனுமதிக்க மறுத்து பாகுபாடு காட்டுகின்ற ஆணவத்தைக் கண்டித்தும் சேலம் சத்யபாமா ஓதுவார் தலைமையில் மீனாட்சி அம்மன் கோயிலின் எதிரே – கிழக்கு சித்திரை வீதியில் தமிழ் உணர்வாளர்களின் உணர்ச்சிப் பேராதரவோடு ஆர்ப்பாட்டம் நடந்தது (16.9.2026). பிரச்சினைக்குரிய தீர்வு காணாமல், அமைச்சரும், சில அதிகாரிகள், காவல் துறையினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர் களிடம் சாதுர்யமாகப் பேசி அவர்களை அப்புறப்படுத்தினர்.
தமிழர் தலைவர் கண்டனம்!
‘திராவிட மாடல்’ ஆட்சியின்போது நடந்த குடமுழுக்கு நிகழ்வுகளின்போது தமிழ் ஓதுவார்களுக்குத் தரப்பட்ட உரிமை இப்போது மதுரையில் நடந்த குடமுழுக்கின்போது தரப்பட்டதா? தரப்படாதது ஏன்? செம்மொழியாம் தமிழ் மொழிக்குத் தடையா எனக் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் ஓதுவார்கள் மீது காவல் துறையின் கெடுபிடியா? தமிழ்ச் சங்கங்கள் பலவும் கண்ட மதுரை மண்ணிற்கு இவை ஏற்புடையதுதானா? என வினாக்களை எழுப்பித் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டனம் செய்துள்ளதும் முக்கியத்துவம் உடையதாகும். இப்படிப் பலவற்றோடு நடந்ததில் இன்னொன்றும் கவனிக்கத் தக்கதாகும். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு – விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மொத்தமாக ரூ.5 கோடிக்கு விபத்துக் குழுக் காப்பீடு என்று அண்மையில் செய்யப்பட்டுள்ளதே! இதனை எந்த வகையில் எடுத்துக் கொள்வது? மீனாட்சி அம்மன் மீது நம்பிக்கையில்லை என்றுதானே பொருள் கொள்ள வேண்டியுள்ளது?
கும்பாபிஷேகத்தின் அவசியம் என்ன?
“ஆங்காங்கு உள்ள சிறு – பெரு கோயில்களில் ‘கும்பாபிஷேகம்’ நடத்திட வேண்டுமென்று பார்ப்பனர்கள் துடியாய்த் துடித்துத் தூண்டி விடுவது ஏன்? இதற்குக் காரணம் என்ன என்பதை ஒரு பார்ப்பனர் மற்றொரு பார்ப்பனரிடம் கூறுவதாகத் தந்தை பெரியார் ஓர் உரையாடலில் படம் பிடித்துக் காட்டுகிறார். “கும்பாபிஷேகம் பண்ணினாக்கா உனக்கும் பணம் கிடைக்கும், எனக்கும் பணம் கிடைக்கும். இன்னும் மத்த பிராமணாளுக்கும் தட்சணை, வேட்டி, சமாராதனை இதெல்லாம் கிடைக்கும். ஒரு வாரம் எப்படியும் தாட்டிகிலாம். தட்சணை, வேட்டி, குடம், சொம்பு முதலானது எல்லாம் மாசக்கணக்கா வரும். அப்பறம் இதை மாதிரி ஒவ்வொரு ஊரிலேயும் பண்ணச் சொன்னாக்க இந்த வருஷத்து சங்கதி முடிஞ்சு போகும்; மேலேக்குப் பாத்துக்கலாம்.”
– தந்தை பெரியார், ‘குடிஅரசு’ 29.05.1927
பார்ப்பனர்களின் கும்பாபிஷேக ஆட்டத்துக்குக் காரணம் இவையே என்பதைத் தந்தை பெரியார் குறிப்பிட்டுக் – கோடிட்டுக் காட்டியுள்ளதைக் கண்ட பிறகும் கும்பாபிஷேக மோகத்தில் அலைகின்ற பக்தர்களை நாம் என்ன செய்ய முடியும்?
