இட்டாநகர்/மும்பை, ஜூன் 25 நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மகாராட்டிரா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அருணாச்சலில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 5 பேரை காணவில்லை. மகாராட்டிராவில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப்பிரதேசத்தின் கெயி பன்யோர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததுடன், பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை வெள்ளத்தின் சீற்றம் காரணமாக சுமார் 18 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. யாசலி வட்டத்திற்குட்பட்ட பூசா அருகே உள்ள நீப்கோ (NEEPCO) திட்டக் குடியி ருப்பில் புகுந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 5 பேரை காணவில்லை. இதில் ஒருவரது சடலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
கனமழையால் கட்டுமானத்தில் இருந்த தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில், அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. மேலும், போடின் மற்றும் ஹோஜ் ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மூன்று முக்கியப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையிலேயே சிக்கித் தவிக்கின்றன.
மகாராட்டிராவில் 300 மி.மீ மழை
இதேபோல், நாட்டின் மேற்குப் பகுதியான மகாராஷ்டிராவிலும் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. மல்ஷேஜ் காட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பரவலாக மரங்கள் வேரோடு சாய்ந்ததன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் பருவமழை தொடங்கிய மறுநாளே, சில இடங்களில் 24 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இந்த அதிதொடர் மழையினால் நகரின் முக்கியச் சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் வெள்ளநீர் சூழ்ந்து, ஒட்டுமொத்த சாலை மற்றும் ரயில் போக்குவரத்துச் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
