பெங்களூரு, ஜூன் 24- ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா என்று கேள்வி எழுப்பியிருந்தேன். நிதி ஆதாரங்கள் குறித்து கேட்டிருந்தேன். இதற்குரிய ஆவணங்களை அவர்கள் காட்டாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருநாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது. அது பதிவு செய்யப்பட்ட அமைப்பா?. அதற்கான நிதி எங்கிருந்து வருகிறது. அதன் வரவு செலவுக் கணக்குகள் என்ன என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நான் கேட்டிருந்தேன்.
ஆவணங்கள் இல்லை
அவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. நான் கேட்டு ஒருவாரம் ஆகிவிட்டது. நூற்றாண்டு கால இந்திய வரலாற்றில் அவர்கள் ஒன்றும் தியாகிகள் இல்லை. எனவே அந்நிறுவன நிர்வாகிகள் நாக்பூரில் இருந்தோ, பெங்களூரு தலைமையகம் கேசவ கிருபாவில் இருந்ேதா நான் கேட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். நூற்றாண்டு பழமை வாய்ந்த அமைப்பு என்பதால் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டுமா?. சரி கொடுப்போம். ஏனென்றால் ஆவணங்கள் இல்லை என்றால் உருவாக்க வேண்டும் இல்லையா?.
அவர்களால் எந்த ஆவணங்களையும் காட்ட முடியாது. அதற்கு காரணம் அவர்கள் வெளிப்படை யாக இருக்க விரும்பவில்லை. சட்டத்தில் தனி அளவுகோலை கொண்டு அமைப்பை இயக்குகிறார்கள். அவர்களிடம் ஆவணங்கள் இருந்தால் என் முகத்தில் வீசி எறியட்டும். சட்டத்தை மீற நான் விடமாட்டேன். நான் அவர்களது அமைப்பு பதிவு தேதியை தெரிந்து கொள்ள கேட்கவில்லை. ஆர்எஸ்எஸ் யார் என்று தெரிந்து கொள்ள கேட்கிறேன். அவர்களுடன் நெடிய விவாதத்துக்கும் நான் தயார்’ என்றார்.
காணிக்கைத் திருட்டால் அதிரும் அயோத்தி!
அயோத்தி, ஜூன் 24 அயோத்தி ராமன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் தங்கம் மற்றும் பண வடிவிலான காணிக்கைகள் பெருமளவில் திருட்டுப் போவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கோவிலின் முன்னாள் கணக்காளர் மகிபால் சிங், தனது பணியின்போதே ரூ.5 லட்சம் திருடப்பட்டதாகவும், இது குறித்துப் புகார் அளித்ததாலேயே தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கிடையே, செய்தியாளர்கள் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷணிடம் இது பற்றிக் கேட்டபோது, “நான் உண்மையைச் சொன்னால் பெரிய ஆபத்து வரலாம்.
தவறு செய்தவர்கள் மிகப் பெரிய மனிதர்கள், அவர்கள் குறித்துப் பேச எனக்குத் தைரியம் இல்லை” எனக் கூறியுள்ளார். பாபர் மசூதி இடிப்பு, அத்வானியின் ரத யாத்திரை, சங்கராச்சாரியார்களின் எதிர்ப்புகளுக்கு இடையே மோடி முன்னின்று நடத்திய கோவில் திறப்பு எனப் பல அரசியல் பின்னணிகளைக் கொண்ட இக்கோவிலில், பா.ஜ.க. தலைவரே ஊழலை ஒப்புக்கொள்ளும் வகையில் பேசியிருப்பது, ராமன் கோவிலில் என்னதான் நடக்கிறது என்ற பலத்த கேள்வியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சினைக்குச் சுமுக முடிவு ஏற்படாவிட்டால், வரவிருக்கும் தேர்தலில் தங்களின் வெற்றி வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும் எனப் பா.ஜ.க.வின் மாநில மற்றும் மத்தியத் தலைமை கவலை அடைந்துள்ளது.
