* முழுமையான, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்! தமிழ்நாட்டில் ஒருபோதும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு அனுமதிக்கப்படவே கூடாது!

10 Min Read
* அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் நடந்துள்ளது மட்டுமல்ல – 
‘‘உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு’’ என்பதே அடிப்படைச் சட்ட விரோதம்; நியாய விரோதம்! 

அய்..எஸ், அய்.பி.எஸ், உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் நடந்துள்ளது மட்டுமல்லஉயர்ஜாதி ஏழை களுக்கான இடஒதுக்கீடு என்பதே அடிப்படைச் சட்ட விரோதம்; நியாய விரோதம்முழுமையான, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்! தமிழ்நாட்டில் ஒருபோதும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு அனுமதிக்கப்படவே கூடாதுஎன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

காலங்காலமாக உரிமை மறுக்கப்பட்டிருந்த அனைவருக்கும் சமூகநீதி கிடைத்திட வழியமைத்த ‘சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை’ ஒழிக்கும் சூழ்ச்சியாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – பார்ப்பனியத்தால்  கொண்டு வரப்பட்டதே ‘பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கான’ (EWS)  இடஒதுக்கீடு என்பதாகும்.

இடஒதுக்கீடு என்பதையே பொருளாதார அடிப்படை யில் கொண்டு வரவேண்டும் என்ற வாதத்தை அரசிய லமைப்பு விவாதங்களின் போதிலிருந்தே பல காலமாக முன்வைத்து வருகின்றனர். ஆனால், அது பொருத்தமற்றது; சமூகநீதிக்கான நோக்கத்தை நிறைவேற்றுவதற்குச் சரியானதாக இருக்காது என்பதால்தான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டக் கர்த்தாக்கள் நீண்ட விவா தத்திற்குப் பிறகு நிராகரித்து “சமூக ரீதியாக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்கள்” (Socially Educationally Backward) என்ற அளவுகோலைச் சட்டமாக்கினர்.

ஆனால், இடஒதுக்கீட்டுக்குள் இந்தப் பொருளாதார அளவுகோலைத் திணித்து சமூகநீதியை நாசமாக்கச் சட்டம் இயற்றுமிடம் (சட்டமன்றம் / நாடாளுமன்றம் – Legislature), சட்டத்தைச் செயலாக்குமிடம் (ஆட்சித் துறை – Executive), அது சரியா என்று கண்காணிக்கும் இடம் (நீதிமன்றம் – Judiciary) ஆகிய மூன்றின் மூலமும் கடுமையாக முயற்சி செய்து வந்தனர். அதில், அவர்களால் வெல்ல முடியாவிட்டாலும் தொடர்ந்து கருத்துருவாக்கம் செய்யத் தவறவில்லை. அது நியாயம் என்பது போன்ற எண்ணத்தை உருவாக்க முயன்று கொண்டே இருந்தார்கள்.

சமூகநீதியைக் குலைப்பதற்கான முயற்சிகளே!

தமிழ்நாட்டில் மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் கொண்டுவரப்பட்ட 9000 ரூபாய் உச்ச வரம்பாக இருந்தாலும்,  பிரதமர் நரசிம்மராவ் தலைமை யிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்து உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட 10% பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடாக இருந்தாலும், மண்டல் கமிஷன் அமுலாக்கம் தொடர்பான இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத – உச்சநீதிமன்ற நீதிபதிகளால் திணிக்கப்பட்ட ‘கிரீமிலேயர்’ என்ற வடிகட்டலாக இருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில்  (தமிழ்நாடு தவிர) இருக்கும் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான (EWS) (பார்ப்பன, உயர்ஜாதியினருக்கு மட்டுமே கொண்டு வரப்பட்ட) 10 சதவிகித இடஒதுக்கீடாக இருந்தாலும் இவையனைத்தும் சமூகநீதியைக் குலைப்பதற்கான முயற்சிகளே! நேரடியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாமல், மறைமுகமாக ஒழிப்பதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சிகளே! இடஒதுக்கீட்டை அடிப்படையைத் தகர்க்கும் ஆர்.எஸ்.எஸ். (ஆரிய) சூழ்ச்சித் திட்டம் இது!

இவற்றில் 9000 ரூபாய் உச்சவரம்பு, திராவிடர் கழகத்தா லும், திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் மக்கள் மன்ற ஆதரவைத் திரட்டி முறியடிக்கப்பட்டது. கிரீமிலேயர் வடிகட்டலை உச்சநீதிமன்றம் நுழைத்தது, நரசிம்மராவ் செய்த முயற்சியை உச்சநீதிமன்றம் நிராகரித்தது, நரேந்திர மோடி செய்த முயற்சி நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் இரண்டே நாட்களில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு, அடுத்த மூன்று நாட்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று, உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்து, முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாக, உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலையும் (3-2 என்ற விகிதத்தில்) பெற்றுவிட்டது.

நியாயத்திற்குப் புறம்பாகவே எல்லா நியமனங்களும் இருந்து வந்தன!

தற்போது “பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியின ருக்கான இடஒதுக்கீட்டில்” மோசடி நடந்துள்ளதாகப் புதிதாகச் செய்தி வந்துள்ளது. பொருளாதாரத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பதே மோசடியானது; அதை உரிய விவாதங்களின்றி, அவசர கதியில் நிறை வேற்றியதே மோசடியானது; பொருளாதாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதே எளிதான மோசடிகளுக்கு வழிவகுக்கக் கூடியது. மோசடிகள் நடந்தும் வந்தன. நியாயத்திற்குப் புறம்பாகவே எல்லா நியமனங்களும் இருந்து வந்தன. எனவே, இது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை; மோசடி வெளிப்பட்ட வரைக்கும் மகிழ்ச்சியையே அளிக்கிறது.

நாம், முன்பு எந்த அடிப்படையில் சொன்னோமோ, அது இன்றைக்கு நடந்திருப்பது அம்பலப்பட்டுள்ளது அவ்வளவே!

கோட்டைக்குள் ஒரு பெரிய ஓட்டையை உருவாக்கி விட்டு, அதன் வழியாகக் கோட்டையைச் சிதைக்கும் வேலை நடக்கிறது என்று வருத்தப்பட்டால் போதுமா?

  1. இந் நாட்டில், பிறப்பினால் ஜாதி ஏற்றத் தாழ்வு பார்க்கப்படுகிறது; ஜாதி அடிப்படையிலேயே தீண்டாமை நிலவுகிறது – கல்வி மறுக்கப்படுகிறது – பொது உரிமை மறுக்கப்படுகிறது.
  2. பொருளாதாரம் என்பது நிலையான அளவுகோல் அல்ல; இன்றைய பணக்காரன் – நாளை ஏழை ஆகலாம். இன்றைய ஏழை – நாளையே பணக்காரன் ஆகலாம்!
  3. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. (Not a Poverty Alleviation Scheme). பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு பொருளாதார உதவிகள் தான் அவசியமே தவிர, இடஒதுக்கீடு அல்ல.
  4. அதையும் கடந்து பொருளாதார ரீதியில் நலிந்தோ ருக்கு இடஒதுக்கீடு என்று சொல்லும்போது, அதில் ஏன் ஜாதிப் பாகுபாடு? ஏழ்மை – உயர்ஜாதியில் மட்டுமா இருக்கிறது? ஏழைகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போர் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் தானே அதிகம்.
  5. அப்படியும் பொருளாதாரத்தில் நலிவு என்பது மாதம் ரூ.66,000 வருமானம் பெறுவதா? ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் என்பது ஏழ்மைக்கான அளவுகோலா? இச் சட்டம் வரும்போது 5 லட்ச ரூபாய்க்கு அதிகம் வருமானம் உடையோர், வருமான வரி செலுத்த வேண்டும் என்பது சட்டமாகும். அப்படி (ரூ.8 லட்சம் வருமானம் உடைய) வருமான வரி செலுத்துவோரைக் கூட, “ஏழைகள்” என்று வரையறுத்தது அறிவுக்கும், சட்டத்துக்கும் ஏற்புடையதா என்று நாம் எழுப்பிய கேள்விக்குப் பதில் உண்டா?
  6. வறுமைக் கோடு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டோ ருக்கு வேறு; உயர்ஜாதியினர் என்போருக்கு வேறா? கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு 32 ரூபாய், நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு 47 ரூபாய் என்பது வறுமைக்கோட்டுக்கான அளவுகோல் என்று ரங்கராஜன் கமிட்டி முடிவு செய்திருக்கிறதே! இது பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோருக்கு மட்டும் தானா? உயர்ஜாதியினர், பார்ப்பனர்கள் நாளொன்றுக்கு ரூ.2200 வருமானம் பெற்றாலும் அவர்கள் ஏழைகளா?

உண்மையான சமூகநீதியைக் கேள்விக்குள்ளாக்கியது!

இப்படி ஏராளமான நியாயமான கேள்விகள் முன் வைக்கப்பட்டபோதும், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, 10 சதவிகிதம் உயர்ஜாதியினருக்கு, குறிப்பாக பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் நாடாளுமன்றமும், ஆட்சித் துறையும், நீதிமன்றமும் மும்முரமாக இருந்தன. அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான இந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றது. அத்துடன் உண்மையான சமூகநீதியைக் கேள்விக்குள்ளாக்கியது. கல்வி, சமூக ரீதியாகப் பிற்படுத் தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோரை விட, குறைவான தகுதி மதிப்பெண்கள் போதுமானவை என்று இந்த அரியவகை ஏழைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது. (பல்வேறு வங்கித் தேர்வு சான்றுகள் உண்டு).

அதுவரை ‘‘தகுதி – திறமை முக்கியமில்லையா?’’ என்று மூக்கைச் சிந்தியவர்கள், அரிய வகை ஏழை உயர்ஜாதியினருக்கான தகுதி என்பது ‘பாஸ் மார்க்கை’ விட பாதிதான் என்றாலும் பல்லைக் காட்டினார்கள்.

எளிதில் மறைக்கத்தக்க ‘வருமானத்தை’ அடிப்படை யாகக் கொண்ட இந்த ‘அரிய வகை உயர்ஜாதி ஏழை களுக்கான’ (EWS) இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, பணக்காரர்கள், தொழிலதிபர்கள், பல லட்சம் கட்டி கல்வி பயிலும் வசதி மிக்கோர் இந்தியாவின் அதிகாரப் பதவிகளை அடைவதற்கான ‘ஒன்றிய பணியாளர் தேர்வாணையம்’ (UPSC) நடத்தும் அய்.ஏ.எஸ்.,
அய்.பி.எஸ். போன்ற குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இடம்பிடித்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில், ஷியாம்லால் யாதவ் என்பவர் வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்த மோசடி ‘வெள்ளிடை மலை’.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பணிகளுக்கான குடிமைப் பணிகள் தேர்வு 2025 இல் EWS (பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவு) இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வான 104 பேரை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆய்வு செய்துள்ளது. இதில் அய்.அய்.டி. பட்டதாரிகள்,  ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான கட்டணம் வசூலிக்கும் நகரத்தின் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மற்றும் வணிகக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பிரபலமான குடிமைப்பணிப் பயிற்சி மய்யங்களில் (64.4%) பயின்றவர்கள், தனியார் பள்ளிகளில் (44.4%) படித்தவர்கள், தொழில் நடத்தும் பெற்றோர்களைக் கொண்டவர்கள் (26.9%) மற்றும் பெருநிறுவனத் துறையில் (9.6%) பணிபுரிந்தவர்கள் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வில் 958 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.அதில் உயர்ஜாதி ‘ஏழை’களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தேர்ச்சி பெற்ற 104 விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகப் பக்கங்கள், பயிற்சி மய்யப் பதிவுகள் மற்றும் பள்ளி-கல்லூரி விவரங்களை இந்த நாளிதழ் ஆய்வு செய்தது.

அதிர்ச்சியளிக்கும் அதன் முக்கியக் கண்டறிதல்கள் இதோ:

குறைந்தது 67 விண்ணப்பதாரர்கள் டில்லி மற்றும் பிற நகரங்களில் உள்ள பிரபலமான பயிற்சி மய்யங்களில் (எ.கா: வஜிராம் & ரவி, வஜிராவ் & ரெட்டி, மற்றும் திருஷ்டி அய்ஏஎஸ்) பயின்றுள்ளனர்; இங்கு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ. 2.65 லட்சம் வரை இருக்கலாம். மொத்தத்தில், 104 விண்ணப்பதாரர்களில் குறைந்தது 84 பேர் முறையான குடிமைப்பணிப் பயிற்சியைப் பெற்றுள்ளனர்; இவர்களில் பலர் ஃபோரம் அய்.ஏ.எஸ், நெக்ஸ்ட் அய்.ஏ.எஸ், கிங் மேக்கர்ஸ் அய்.ஏ.எஸ் மற்றும் யூபிஎஸ்சி வாலா போன்ற பல பயிற்சி மய்யங்களில் பயின்றுள்ளனர். அரசு அல்லது பல்கலைக்கழகம் நடத்தும் பயிற்சித் திட்டங்களில் கலந்துகொண்டவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. சில பயிற்சி மையங்கள் கல்வி உதவித்தொகைகளை வழங்கினாலும், அவை வரையறுக்கப்பட்ட அளவிலேயே உள்ளன.

குறைந்தது 46 விண்ணப்பதாரர்கள் தலைநகர் டில்லியைச் சுற்றிய பகுதிகளிலும், லக்னோ, ராய்ப்பூர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற மாநிலத் தலைநகரங்களிலும் உள்ள தனியார் பள்ளிகளில் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்துள்ளனர். இப்பள்ளிகளின் ஆண்டுக் கல்விக் கட்டணம் ரூ. 45,000 முதல் ரூ. 1.5 லட்சம் வரை உள்ளது என்பதை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு கண்டறிந்துள்ளது.

குறைந்தது 28 விண்ணப்பதாரர்களின் பெற்றோர்கள் சொந்தமாகத் தொழில் நடத்துகின்றனர். கடைகள் மற்றும் வர்த்தகம் முதல் எஃகு உற்பத்தி (steel fabrication), ஜவுளி மற்றும் இனிப்புத் தயாரிப்பு வரை பல்வேறு தொழில்கள் இதில் அடங்கும். இக்குடும்பங்களில் குறைந்தது அய்ந்து குடும்பங்கள் தேசியத் தலைநகர் பகுதியிலும், ஒன்று மாநிலத் தலைநகரிலும், மற்ற எட்டு குடும்பங்கள் பல்வேறு மாவட்டத் தலைமையிடங்களிலும் உள்ளன. யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராவதற்கு முன்பு, குறைந்தது 10 பேர் தனியார்த் துறையில் (பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய மென்பொருள், கட்டுமான நிறுவனங்கள் உட்பட) பணிபுரிந்து வந்தனர்; இவர்களில் சிலர் நல்ல ஊதியத்தைப் பெற்று வந்தனர்.

தேர்ச்சிப் பெற்ற 104 பேரில் குறைந்தது 14 பேர் அய்.அய்.டி.களிலும், குறைந்தது மூவர் தேசிய தொழில்நுட்பக் கழகங்களிலும் (NIT) இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் ஆவர். குறைந்தது 27 பேர் டில்லி பல்கலைக்கழகத்திலும், குறைந்தது மூவர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (JNU) பயின்றவர்கள் என்று ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனம் தரும் தகவல் கூறுகிறது.

வரலாற்றில் நடந்த தவறுகளில் ஒன்று!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை மீறி, உருவாக்கப்பட்ட இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு தான் உறுதியாக நின்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தான் இதில் தெளிவாக இருந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தெளிவான முடிவெடுத்தது. சமூக நீதியில் அக்கறை கொண்ட சில அமைப்புகள் எதிர்த்தன. ஆனால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட இதில் பா.ஜ.க.வின் சட்ட மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர் என்பது வரலாற்றில் நடந்த தவறுகளில் ஒன்று. அதனுடைய விளைவு தான் இன்று நடந்திருப்பது.

‘அரிய வகை உயர்ஜாதி ஏழைகளுக்கான’ இடஒதுக்கீடு முறியடிக்கப்பட வேண்டும்!

குடிமைப் பணித் தேர்வுகளில் நடந்துள்ள இந்த மோசடி குறித்து விசாரிக்க வேண்டுமென்று கல்வியாளர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இது மட்டுமல்ல, பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு என்பதே சமூகநீதித் தத்துவத்துக்கு விரோதமானது என்பதை அவர்கள் உணர வேண்டும். சட்டப்படி இந்த ‘அரிய வகை உயர்ஜாதி ஏழைகளுக்கான’ இடஒதுக்கீடு முறியடிக்கப்பட வேண்டும்.

இப்போது அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ்., தேர்வுகளில் நடந்துள்ள இந்த மோசடி குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏமாற்றியவர்களின் தேர்ச்சி ரத்து செய்யப்பட வேண்டும். இவர்கள் தான் நாளை இந்த ஆட்சியை நடத்தக் கூடிய பொறுப்பை ஏற்கக் கூடியவர்கள் என்பது பொது ஒழுக்கத்துக்கு உகந்ததா? கடந்த 7 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ள நியமனங்கள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் நுழைய விடாமல்
உறுதியாக இருந்த தி.மு.க. அரசு!

இது நீட் தேர்வை விட மோசமானது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை நசுக்கும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை எந்த விதக் குழப்பத்திற்கும் இடம்கொடாமல் ஒழித்துக்கட்ட வேண்டும்.

கடந்த அய்ந்தாண்டுகள் நடைபெற்ற தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் “திராவிட மாடல்” அரசு இந்தப் பிரச்சினையில் மிகவும் உறுதியாக நின்று சரித்திரம் படைத்தது. ஒருபோதும் தமிழ்நாட்டில் உயர்ஜாதியினருக்கான பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு இடமே இல்லை என்பதில் உறுதியாக இருந்தது.

தமிழ்நாட்டு புதிய அரசு
ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது!

அந்த நிலைப்பாட்டிலிருந்து தற்போதைய தமிழ்நாடு அரசும் கொஞ்சமும் மாறிவிடக் கூடாது! இது வெகுமக்களான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் பிரச்சினை! ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது, இதில் மாற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று பார்ப்பன உயர்ஜாதியினர் குறியாக இருக்கின்றனர். இது எப்படி மோசடிக்கு வழிவகுக்கக் கூடியது என்பதற்குக் கண் முன்னே இன்று ஆதாரம் கிடைத்துள்ளது. எனவே, மிகுந்த கவனத்துடன் இந்த அரசும், குறிப்பாக முதலமைச்சர் மாண்புமிகு .ஜோசப் விஜய் அவர்களும் மக்கள் விரோத நிலைப்பாட்டை எடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டுவது அவசியமாகும்!

கி.வீரமணி

     தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

22.6.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *