சென்னை, ஜூன் 22- அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
காலி பணியிடம்
அரசுப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் தொடர்ந்து நீடித்து வருவதை பார்க்க முடிகிறது.
அந்தவகையில் ஜூன் மாதம் 11ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 248 ஆக இருக்கும் நிலையில், அதில் 96 ஆயிரத்து 141 இடங்கள் நிரப்பப்பட்டு, 18 ஆயிரத்து 107 இடங்கள் காலியாக இருப்பது பள்ளிக்கல்வித்துறையின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
இந்த புள்ளி விவரங்களில் அதிக பட்சமாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்தான் இருக்கின்றன. அதில் 7,252 இடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
அதற்கடுத்தபடியாக 2,833 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு பள்ளியை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 1,214 என்ற எண்ணிக்கையில் காலியாக இருக்கிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 என்ற எண்ணிக்கையில் காலி இடங்கள் இருக்கின்றன.
கவனம் செலுத்த வேண்டும்
குறிப்பிட்ட பாடத்திற்கு ஆசிரியர் கள் இல்லாதபோது, மாணவர்கள் அந்தப் பாடத்தின் அடிப்படை தத்துவங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறுவார்கள். காலியாக உள்ள பணியிடங்களால், பணியில் இருக்கும் மற்ற ஆசிரியர்கள் கூடுதல் வகுப்புகளையும், பிற பாடங்களையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதனால் அவர்களுக்கு மன அழுத்தமும், பணிச்சுமையும் கூடும். எனவே பள்ளிக்கல்வித்துறை இதில் தீவிர கவனம் செலுத்தி காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்று கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள். பெற்றோர்கள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளனர்.
