இந்நாள் – அந்நாள்

“இங்கிலாந்தில் தொழிலாளர் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் முழக்கம்!” இன்று (20.6.1932)

தொழிலாளர் கூட்டம் ஒன்று மேக்ஸ்ப்ரேதா (பான்சிலே) லேக்பார்க்கில் 20.6.1932 ஆம் தேதி கூடியது. கூட்டத்தில் சுமார் 20, 30 ஆயிரம் பேர்கள் இருந்தார்கள். பக்கத்தில் பிரிட்டிஷ் தொழில் கமிட்டி தலைவர் தோழர் லான்ஸ்பரி அவர்கள் பேசினார். அதற்கு பதில் என்கின்ற முறையில் தந்தை பெரியார் (ஈ.வெ.ராமசாமி) அவர்களால் இந்த உபன்யாசம் செய்யப்பட்டதாகும்.

தோழர்களே…!

இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழில் கட்சியை மிக மிகப் பரிகசிக்கத்தக்க விஷயமாய் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஏனெனில், தொழில் கட்சித் தலைவராகியத் தோழர் லான்ஸ்பரி அவர்கள் சிப்பாய்கள் சுடுவதையும், கொல்லுவதையும் தாம் சிறிதும் விரும்புவதில்லை என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார். ஆனால் எங்கள் கார்வாத் (Gharwath) சேனைகள் நிராயுதபாணி களான மக்களைச் சுடுவதற்கு மறுத்தற்காகத் தோழர். லான்ஸ்பரியின் தொழிற்கட்சி கவர்ன்மெண்டானது அந்தச் சிப்பாய்களுக்கு 15 வருட கடின காவல் தண்டனை விதித்திருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

  1. தொழிலாளர் சங்கமாகிய டிரேட் யூனியனை ஆதரிப்பதாகவும், அதில் சேர்ந்து உழைப்பதாகவும் பறை சாற்றுகிறீர்கள். ஆனால், எங்கள் ஏழை இந்திய சுரங்க வேலைக்காரர்களும் மற்ற தொழிலாளர்களும் சேர்ந்து ஒரு ட்ரேட் யூனியன் சங்கம் ஸ்தாபித்ததற்காக அதன் அதிகாரிகளையும், அதற்கு உதவி செய்த பிரிட்டிஷ் தோழர்களையும் வெளியில் இருக்க விடாமல் உங்கள் தொழில் கட்சி அரசாங்கமானது மீரத்து சிறையில் அடைத்துப் போட்டு விட்டது.
  2. தோழர் லான்ஸ்பரி அவர்கள் இந்தியர்கள் விஷயத்தில் மிக்க அனு தாப மிருப்பதாகவும், இந்தியர்கள் சுடப்படுவதையும் அடிக்கப்படு வதையும், சிறையில் அடைக்கப்படு வதையும், தாம் விரும்புவதில்லை என்றும் சொல்லிக் கொள்வதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் தோழர் லான்ஸ்பரியுடைய தொழில் கட்சி அரசாங்க கேபினட்டானது சுமார் 80,000 பேர் வரை இந்திய ஆண் பெண்களை ஜெயிலில் அடைத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது.

ஆப்பிரிக்கன் கிராமங்களின்மீது ஆயிரக் கணக்கான தடவை ஆகாயப்படை மூலம் கொடுமை செய்யப்பட்டிருக்கிறது.

நூற்றுக்கணக்கான பர்மியர்களையும் கிராமத் தாரையும் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?

  1. இந்திய சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு 8 அணா கூலிக்கு இந்தியர்களிடம் வேலை வாங்கப் படுகின்றது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் அய்ந்தணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த கொடுமையையும், ஆபாசத்தையும் நிறுத்த தொழில் கட்சி அரசாங்கம் என்ன செய்தது?

  1. தோழர் லான்ஸ்பரி அவர்கள் இங்கிலாந்தில் தொழிலாளிகளை ஆதரிக்க வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் இந்திய விஷயத்தில் தோழர் காந்தியையும், இர்வின் பிரபுவையும் கொடுமையான வட்ட மேஜை மகாநாட்டையும் ஆதரிக்கிறார். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் இந்தியாவானது இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும், முதலாளி மார்களும், அய்ரோப்பிய வியாபரிகளுமே ஆதிக்கம் வகிக்கும் படியானதும் தொழிலாளிகளுக்கும் குடித்தனக்காரர்களுக்கும் பாத்தியமும் – பொறுப்பும், இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் இந்திய நிர்வாகம் நடக்கும் படியான காரியத்திற்கு உதவி செய்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?
  2. தோழர் லான்ஸ்பரி அவர்கள் யுத்தத்தையும். யுத்த மூஸ்தீபையும் வெறுக்கிறதாகசொல்லுகிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் துருப்பு களையும், பிரிட்டிஷ் வைசிராயையும் திருப்பி அழைத்துக் கொள்ள மறுக்கிறார்.
  3. கடைசியாக இருந்த தொழிற் கட்சி அரசாங்க மானது இரண்டு வருஷகாலத்தில் அனுப்பிய ஆகாய சண்டைக் கப்பல்களையும், வெடிகுண்டுகளையும், மோட்டார் பீரங்கி வண்டிகளையும் கவசார் செய்த மோட்டார் வண்டிகளையும், யந்திரத் துப்பாக்கி களையும், பிரிட்டிஷ் பட்டாளங்களையும் கணக்கு பார்த்தால் பால்ட்வின் அரசாங்கமானது தனது 5 வருஷம் ஆட்சியில் அனுப்பப்பட்டதை விட அதிகமாகவே இருக்கிறது. தோழர்களே!! இவற்றிலிருந்து பிரிட்டிஷ் தொழிலாளர் பார்ட்டி என்று சொல்லப்படும் சமதர்ம பார்ட்டி யின் யோக்கியதையை அறிந்து கொள்வது என்பது எங்களுக்கு மிக கஷ்டமாகவே இருக்கிறது.

ஆதலால் யாக்ஷையார் தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலி கட்சிகளையும், கொள்கைகளையும், நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்துக்கும் சமத்துவத்திற்கும் உண்மையாகவே போராட உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர் நோக்கிக் கொண்டிருங்கள்.

 

‘உலக அகதிகள் நாள்’ இன்று (20.6.2026)

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20 ஆம் தேதி,  ‘உலக அகதிகள் நாள்’ என உலகம் கொண்டாடுகிறது,

இது வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக நாளாகும்.

ஒன்றாக, பாதுகாப்பைத் தேடுவதற்கும், அவர் களின் பொருளாதார மற்றும் சமூகச் சேர்க்கைக்கான ஆதரவைக் கட்டியெழுப்புவதற்கும், அவர்களின் அவலநிலைக்குத் தீர்வுகாண வாதிடுவதற்கும், அவர்களின் உரிமையை வென்றெடுக்கவும் இந்த நாள் அறைகூவல் விடுக்கிறது.

அகதிகளின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நாடு முழுவதும் உள்ள உள்ளடக்கிய பள்ளிகளில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

‘உலக அகதிகள் நாள்’ என்பது அய்க்கிய நாடுகள் அவையால் உலகெங்கிலும்  அகதிகளை சிறப்பிக்கும் ஓர் உலக நாளாகும்.

போரினால் ஏற்படும் மோதல் அல்லது துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களின் வலிமையையும்,  தைரியத்தையும் இந்த நாள் கொண்டாடுகிறது.

உலக அகதிகள் நாள் அகதிகளின் உரிமைகள், தேவைகள் மற்றும் கனவுகளின் மீது ஒளி வீசுகிறது, அரசியல் விருப்பத்தையும், வளங்களையும் திரட்ட உதவுகிறது, எனவே அகதிகள் உயிர்வாழ்வது மட்டுமல்லாமல் செழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடிகிறது. ஒவ்வொரு நாளும் அகதிகளின் வாழ்க்கையைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் முக்கியம் என்றாலும், உலக அகதிகள் நாள் போன்ற பன்னாட்டு  நாள்கள், மோதல் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகி தப்பியோடுபவர்களின் அவலநிலையில் உலகளாவிய கவனத்தைச் செலுத்த உதவுகின்றன.

இந்நாள் - அந்நாள்

‘உவமைக்கவிஞர் சுரதா’ அவர்களின் நினைவுநாள் இன்று (20.06.2006)

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.இவர் தமிழ் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக் கொண்டார். தன் மாற்றுப் பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை ‘உவமைக் கவிஞர்’ என்று சிறப்பித்துக் கூறுவர்.

புரட்சிக்கவிஞர் உடனிருந்து பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் புரட்சிக்கவிஞர் அவர்களுடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.

சுரதாவின் ‘சொல்லடா’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘பொன்னி’ என்னும் இதழ் 1947 ஏப்ரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.

பாவேந்தரின் ‘புரட்சிக்கவி’ நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது, அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.

நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார்.

கவிஞர் திருலோக சீதாராமின் ‘சிவாஜி’ இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

சுரதா அவர்களின் இந்த நினைவு நாளில் (20.6.2006) அவரைப் போற்றுவோம்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *