கி.இரா.
மனித வாழ்க்கையில் திருமணம் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விழாவாகும். அவ் விழாவில் மணமக்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சார்ந்த பகுதியில் வசிப்போர் என அனைவரும் ஒருசேரக் குழுமி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள். விருந்தும் நடைபெறுவது வழக்கமான ஒன்றே!
ஒரே நேரத்தில் 90 திருமணங்கள்
ஆனால், இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு ஏக களேபரம், குழப்பங்களோடு ஒரே நாள், ஒரே இடம், ஒரே நேரத்தில் 90 திருமணங்கள் நடந்துள்ளன என்பதுதான் கவனிக்கத்தக்க ஒன்றாக ஆகியுள்ளது.
சேலம் மாவட்டம் – வாழப்பாடி அருகே பேரூர் தான்தோன்றீசுவரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் பஞ்சபூதத் தலங்களில் மிக முக்கியமான தலம் என்கின்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதனால் முகூர்த்த நாள்கள் எனப்படுகின்ற நாள்களில் அதிகப்படியான திருமணங்கள் நடைபெறும்.
கூட்டம் அலைமோதியது
வைகாசி மாதம் வளர்பிறை கடைசி முகூர்த்தம் என அன்று (30.5.2026) ஒரு நாளில் மட்டும் 90 திருமணங்கள் நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இதனால் அந்த 90 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது.
அதிகாலை விசேட பிரம்ம முகூர்த்தத்தின் முதல் முகூர்த்த நேரம் முடிவதற்குள்ளாக தாலி கட்டுவதை முடித்துவிட வேண்டுமென்று அக் கோவிலில் ஏராளமாகக் குழுமிய குடும்பத்தவர்களிடையே கடும் போட்டி!
வாய்த்தகராறு, கை கலப்புகள்!
அந்தக் கோவிலில் இடத்தைப் பிடிப்பதற்கும், பாய் போடுவதற்கும் முண்டியடித்ததில் தொடங்கி, பார்ப்பனப் புரோகிதர்களைக் கொண்டு மணவிழா சடங்குகளை நடத்திக் கொள்வது வரை மணமக்கள் குடும்பத்தினர்களிடையே ஏராளமான சச்சரவுகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமில்லை. தாலி கட்டிக் கொள்ளும் அந்த நிகழ்வைக் குறிப்பிட்ட நல்ல நேரத்திற்குள்ளாக முடித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக பிரம்ம முகூர்த்தமும், இட நெருக்கடியும் ஏற்படுத்தி வைத்தக் கொடுமைகள்தான் வாய்த் தகராறு, கைகலப்புகள்!
பரிதாபத்திற்குரிய மணமக்கள்
5 நிமிடங்களுக்குள்ளாகவே நடந்து முடிந்துவிட்ட தாலி கட்டிக் கொண்டதை காண வேண்டுமென்பதற்காக வந்திருந்த ஒவ்வொரு குடும்பத்தினரும் முண்டியடித்தனர். இந்த நெரிசல் சிக்கலில் சிக்கிக் கொண்ட மணமக்கள் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியதானது. மணவிழாவைக் காண முடியாதவர்களின் வயிற்றெரிச்சல், புலம்பல்கள்! அடுத்துத் தங்களது இல்லத் திருமணத்தை நடத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக இடம் பிடிப்பதற்கு அவரவர் நடத்திய ஆர்ப்பாட்டங்களும் அநேகம்!
இந்தக் கோவிலில்தான் என்றில்லை; பார்ப்பனப் புரோகிதக் கூட்டத்தார், ஜோதிடப் புளுகர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அந்த சில நாள்களில், குறித்த நேரத்தில் திருமணங்களை நடத்துகின்றபோது பல இடையூறுகள் திருமணங்களை நடத்திக் கொள்கிறவர்களுக்கு ஏற்படுவது இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டது. இதில் கோவிலுக்கு ஒரு திருமணத்திற்கு வந்தவர் வேறொருவர் வீட்டின் திருமணத்தில் கலந்துகொண்டு ஏமாளியாவதும் நடக்கின்றது.
பிரம்ம முகூர்த்தமாம்!
சூரியன் உதிக்கின்ற காலத்தைப் பொருத்து பிரம்ம முகூர்த்த நேரம் கணிக்கப்படுகின்றது. அவ்வாறு சூரியன் உதிக்கின்ற நேரம் ஒவ்வொரு கண்டம், நாடு, ஊர்களுக்கும் கூட மாறுபடுகின்றது. ஆதலால், ஊருக்கு ஊர் இந்த பிரம்ம முகூர்த்தம் எனப்படுகின்ற நேரம் என்பது வித்தியாசப்படும். இந்த நேரத்தில் எந்த ஒரு விசயத்தைச் செய்தாலும் அதன் பலன் பல மடங்காகப் பெருகும் என்கின்ற குருட்டுத்தனமான ஒரு நம்பிக்கையே இவ்விதக் கேடுபாடுகள், குழப்பங்களுக்குமானக் காரணம்!
காலில் போட்டு மிதியுங்கள்!
“24 மணி நேரமும் நல்ல நேரமே!” என்று பகுத்தறிவாளர்கள் பொறுப்புணர்ச்சியோடு நேரத்தின் அருமையைப் பெரிதும் மதித்துக் கடமையைச் செய்து முடிப்பதைக் கண்ட பிறகும் மக்கள் குருட்டு நம்பிக்கைகளை மதித்துக் கடைப்பிடிப்பது ஏனோ? காலில் போட்டு மிதிக்க வேண்டாமா?
கெட்ட காலம் என்று காலத்தைப் பாகுபடுத்தும் மனப்பான்மை பகுத்தறிவாளர்களிடம் துளியும் இல்லாததைப் பார்த்தாவது அறிவுத் தெளிவு பெறத் தயங்குவது ஏன்?
இன்னல்படுவதா?
நல்ல நேரம், கெட்ட நேரம், இராகு காலம், எமகண்டம், குளிகை, முகூர்த்த நேரம், பிரம்ம முகூர்த்தம் இன்னோரன்ன ஆரியப் புரட்டுப் பார்ப்பனப் பித்தலாட்டக் காலப் பாகுபாடுகளை முற்றிலுமாகப் புறந்தள்ளி நடக்கின்ற சுயமரியாதைத் திருமணங்கள் – இல்வாழ்க்கை இணையேற்பு விழாக்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? அத்தகைய வாழ்க்கை ஒப்பந்த விழாக்கள் ஏராளமாக நடக்கின்ற தமிழ்நாட்டில் இத்தகைய அறியாமைக்கு இடம் கொடுத்து இன்னல்படுவதா?
இராகு காலம் என நேரம் வகுத்து மிகவும் கெட்ட நேரம் என்று ஒதுக்கி வைத்துள்ளார்களே! அந்த இராகுகாலத்தில்கூட பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகக் குடும்பத்தினர் வாழ்விணையர் ஏற்பு விழாவை நடத்திக் கொள்கிறார்களே! அவர்கள் வாழ்க்கை நல்ல முறையில்தானே அமைந்துள்ளது.
காலங் கடத்தலாமா?
இத்தகைய ஆரியர் வழியிலான புரட்டுகள் அத்தனையையும் புட்டுப்புட்டு தந்தை பெரியார் பேசியும், நூல்களில் எழுதியும் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தினாரே! அவர் வகுத்தப் பாதையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் இன்றும் திராவிடர் கழகத்தின் அறிவு கொளுத்துகின்ற பிரச்சாரம் நடத்துவதைக் கண்டும் காணாதவர்களைப் போன்று இனியும் காலங்கடத்தலாமா? உணர்ந்தும் உணராதவர்களைப் போன்று பழைய குருட்டுத்தன சாக்கடைக் குட்டையில் புரளுவது ஏன்? சிந்திப்பீர்களாக!
