சென்னை, ஜூன் 19- இந்தியாவில் நிதி வர்த்தகத்தில் முன்னணி இடத்தை வகித்து வரும் சிறீராம் குழும நிறுவனங்களின் ஒரு அங்கமாகிய சிறீராம் இலக்கியக் கழகம், வரும் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 30 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவியரிடையே திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்த இருக்கிறது.
இப்போட்டிகள், 12 மய்யங்களில் நடத்தப்படும். சென்னையில், ஆகஸ்ட் 29 அன்று அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.அய். ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ஆகஸ்ட் 30 அன்று பல்லாவரத்திலுள்ள வேல்ஸ் வித்யாஷ்ரத்திலும் நடைபெறுகிறது. சென்னை தவிர, ஜூலை 18 சேலத்திலும், ஜூலை 19 வேலூரிலும், ஜூலை 25 திருவாரூரிலும், ஜூலை 26 புதுச்சேரியிலும், ஆகஸ்ட் 1 ஈரோட்டிலும், ஆகஸ்ட் 2 கோவையிலும், ஆகஸ்ட் 8 தஞ்சாவூரிலும், ஆகஸ்ட் 9 திருச்சியிலும், ஆகஸ்ட் 22 மதுரையிலும், ஆகஸ்ட் 23 நெல்லையிலும் நடைபெறவுள்ளது.
இடைநிலை (6 – 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 – 12 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் பங்கு பெற விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை அருகிலுள்ள சிறீராம் சிட்ஸ் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.shriramchits.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துக்களைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், வரையும் திறனை ஊக்குவிக்கவும் கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் சிறீராம் இலக்கியக் கழகம் இப்போட்டியினை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
