புதுடில்லி, ஜூன் 18- தேர்தலில் முதல் முறையாக முக சரிபார்ப்பு தொழில்நுட்பம், மராட்டியத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.
வாக்காளர் முகம்
இந்தியாவில் நடைபெறும் தேர்தல் களில் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங் களைக் காட்டி பூத் ஏஜெண்டுகள் சரிபார்த்த பின்பு வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய தொழில்நுட்ப முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி வாக்குச்சாவடிக்கு வரும் வாக்களாரின் முகம், அங்கிருக்கும் பிரத்யேக கேமரா அல்லது கைப்பேசி செயலி மூலம் ஸ்கேன் செய்யப்படும்.
அந்தப் படம், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் தரவுத்தளத் தில் உள்ள ஒளிப்படத்துடன் நொடிப் பொழுதில் ஒப்பிடப்பட்டு, அவர்தான் அசல் வாக்களரா என்பது கணினி மூலம் டிஜிட்டல் முறையில் உறுதி செய்யப்படும். இதுதான் முகசரிபார்ப்பு முறை தொழில்நுட்பம். இதன் மூலம் ஒரு நபர் மற்றொருவரின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து கள்ள ஓட்டு போடுவது அல்லது ஒரே நபர் வெவ்வேறு வாக்குச்சாவடிகளுக்குச் சென்று போலி ஆவணங்கள் மூலம் பலமுறை வாக்களிப்பது முற்றிலும் தடுக்கப்படும்.
சிறப்புத் தொகுதி
மராட்டியத்தில் நடைபெற உள்ள தேர்தலில் இந்த முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படுகிறது. அதாவது மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகள் தொகுதிக்கான சட்டமன்ற மேலவைத் தேர்தலில் இந்த ‘முக சரிபார்ப்பு’ முறை முதன்முறையாக பரிசோதிக்கப்படுகிறது. இங்கு “உள்ளாட்சி அமைப்புகள் தொகுதி” என்பது, அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மட்டுமே வாக்களிக்கும் ஒரு சிறப்புத் தொகுதியாகும்.
மொத்தம் 619 உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வாக்களிக்கப் போகிறார்கள். வாக்காளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முதன்முறையாக இங்கு சோதனை முயற்சியாக தேர்தல் ஆணையம் வெற்றிகரமாகச் செயல்படுத்திப் பார்க்கிறது. இதில் கிடைக்கும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்துடுத்து வரும் பிற மாநிலத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் நாடு முழுவதும் இந்த முறையை விரிவுபடுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
வேகமான வாக்குப்பதிவு
நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் வாக்காளர்களின் ஆவணங்களை மனிதர்கள் சரிபார்ப்பதை விட, இந்தத் தொழில்நுட்பம் மிகக் குறைந்த நொடிகளில் சரிபார்த்து விடுவதால் வாக்குப்பதிவு வேகமாக நடைபெறும் என்றும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் நீங்கி, நூறு சதவீதம் தூய்மையான முறையில் தேர்தல் நடைபெற வழிவகை ஏற்படும் என்றும் தேர்தல் ஆணையம் நம்புகிறது.
இந்தியாவில் ஏற்கெனவே தெலங்கானா போன்ற சில மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களின் போது மிகக் குறைந்த அளவிலான வாக்குச் சாவடிகளில் இத்தகைய தொழில்நுட்பம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது என்றாலும், மராட்டியத்தில் தான் அதிநவீன வசதிகளுடன் மிகப் பெரிய அளவில் இது அறிமுகப்படுத்தப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இது இந்திய ஜனநாயகத்தை அடுத்த கட்ட டிஜிட்டல் யுகத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு வரவேற்கத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.
