புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு குறைந்தது! சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

சென்னை, ஜூன் 17- புழல், பூண்டி உள்ளிட்ட முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு குறைந்தது. இதனால் சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

புழல், பூண்டி நீர்த்தேக்கங்கள்

சென்னையின் குடிநீர் ஆதாரமாக புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள் விளங்குகின்றன. இதில் தற்போது புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் 50 சதவீதமாக நீர் இருப்பு குறைந்துள்ளது.

செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்பு தற்போது 6,148 மில்லியன் கன அடியாக உள்ளது. இது அவற்றின் மொத்த கொள்ளளவில் கிட்டத்தட்ட 52 சதவீதமாகும். புழல் மற்றும் பூண்டி நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு முறையே கிட்டத்தட்ட 51 சதவீதம் மற்றும் 34 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் இந்த நீர்த்தேக்கங்களில் வறண்ட நிலப்பரப்பு தெளிவாக தெரிகின்றது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னை மக்களுக்கான முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் மற்றும் பூண்டி நீர்த்தேக்கத்தில் வறண்ட பகுதிகள் உருவாகியுள்ளன. இங்கிருந்துதான் மற்ற நீர்த்தேக்கங்களுக்குத் தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. நீர்நிலைகளின் சேமிப்புத் திறனை மீட்டெடுக்க, சரியான நேரத்தில் தூர்வார வேண்டியதன் அவசியத்தை அரசு மேற்கொள்ள வேண்டும்.

குடிநீர்த் தட்டுப்பாடு

புழல் அருகே உள்ள சூரப்பட்டு மற்றும் கண்ணப்பசாமி நகர் போன்ற இடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகள் வறண்ட நிலப்பரப்பு தெளிவாகத் தெரிகிறது. மேலும், பாம்மதுகுளம், பாடியநல்லூர் மற்றும் திருமுல்லைவாயலில் உள்ள வெங்கடாசலம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது. அதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து வினாடிக்கு சுமார் 210 கன அடி கிருஷ்ணா நதிநீர் வருகிறது. இது செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டு, நீர் மட்டத்தை உயர்த்தி நகரின் விநியோகத்தை எளிதாக்குகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டில், முக்கிய நீர்த்தேக்கங்களைத் தூர்வாரும் திட்டத்தை வருவாய் ஈட்டும் மாதிரியாகச் செயல்படுத்த நீர்வளத்துறை முடிவு செய்தது.

சோழவரம் நீர்த்தேக்கத்தில் ஓரளவுக்குப் பணிகள் நடந்தாலும், 5 நீர்த்தேக்கங்களிலும் சேர்த்து சுமார் 1,900 மில்லியன் கன அடி கூடுதல் கொள்ளளவை உருவாக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட இந்த முழுமையான திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் நீர்நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்ததே இதற்கு ஒரு காரணமாகும். இவ்வாறு கூறினர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கிருஷ்ணா நதி நீரால் 450 மில்லியன் கன அடி பூண்டி நீர்த்தேக்கத்தில் உயர்ந்துள்ளது. சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் விடுவிப்பை அதிகரிக்க ஆந்திர அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். தூர்வாரும் பணிகளுக்கு வருவாய் ஈட்டும் மாதிரியை எவ்வாறு மிகவும் பயனுள்ளதாக மாற்றுவது என்பது குறித்தும் துறை ரீதியாக ஆலோசனை நடத்தி வருகின்றோம்,’’ என்றனர். முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *