சென்னை, ஜூன் 16– தமிழ் திரைப்பட நடிகரும், அரசியல் பிரமுகருமான வாகை சந்திரசேகர், ஒன்றிய அரசின் உயரிய உஸ்தாத் பிஸ்மில்லாகான் ‘யுவ புரஸ்கார்’ தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமி இந்த ஆண்டிற்கான விருதுப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட் டுள்ளது. கலை மற்றும் நாடகத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய இளம் மற்றும் சாதனை படைத்த கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
‘யுவ புரஸ்கார்’ தேசிய விருது
திரையுலகில் தனது தனித்துவமான நடிப்புத் திறனால் முத்திரை பதித்த வாகை சந்திரசேகர் ஏற்கெனவே பல மாநில மற்றும் தேசிய அளவிலான அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஒன்றிய அரசின் இந்த தேசிய விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
