மேலூர், ஜூன் 15 தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று (14.6.2026) மதுரை மாவட்டம், மேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தி யாளர்கள் தமிழ்நாட்டில் தொடர் மின் தடை ஏற்படுவதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப் பினார். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், மின்சாரக் கட்ட மைப்புகள் பல ஆண்டுகளாகப் பின்தங்கிய நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
“மாநிலம் முழுவதும் சுமார் 4 லட்சம் மின்மாற்றிகள் (Transformers) உள்ளன. பல ஆண்டுகள் பழமையான இந்த மின்மாற்றிகள் மற்றும் மின் உபகரணங்களை வைத்தே இதுவரை மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அவை தங்களின் திறனை (சக்தியை) இழந்துவிட்டதே தொடர் மின்தடை ஏற்படுவதற்கான முக்கியக் காரணம்” என்று அவர் விளக்கமளித்தார்.
மேலும், தமிழ்நாடு மின்சாரத் துறையின் தற்போதைய உண்மை நிலை குறித்துப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், விரைவில் வெள்ளை அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் உறுதி யளித்தார்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்துப் பேசிய அவர், மக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் தவறான முடிவுகளை யார் எடுத்தாலும் அதை ஏற்க முடியாது என்றார்.
மக்களின் அமைதிக்கே அரசு 100 சதவீதம் முன்னுரிமை தரும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நீதிமன்றத்தை நாடி, சட்டப் பூர்வ மாகவும் மக்களின் அமைதியைக் கருத்தில் கொண்டும் இந்த விவகாரத்திற்கு சுமுகத் தீர்வு காணப்படும் என்றார். மேலும், “முன்பு என்ன நிலை இருந்ததோ, அதே நிலைதான் தொடர வேண்டும். மதத்தை வைத்து அரசியல் செய்வதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
