போபால் ஜூன் 15 மத்தியப் பிரதேசத்தில் சங்கிலியை இழுத்து நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் இருந்து இறங்கி, தண்டவாளத்தில் நடந்த பயணிகள்மீது எதிரே வந்த அதிவேக விரைவு ரயில் மோதியதில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
வடமத்திய ரயில்வேயின் ஜான்சி கோட்டத்திற்கு உட்பட்ட ஹேதாம்பூர் – தோல்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மாலை 4:15 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
கஜுராஹோ – உதய்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்த போது, இன்ஜினுக்கு அடுத்த பொதுப் பெட்டியிலிருந்த பயணி ஒருவர் அவசர கால சங்கிலியை இழுத்துள்ளார். இதனால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரயில் நின்றவுடன், அதிலிருந்த சில பயணிகள் கீழே இறங்கி, அருகில் இருந்த மற்றொரு ரயில் தண்டவாளத்தின் வழியாக நடந்து சென்றனர்.
அதே நேரத்தில், அந்தத் தடத்தில் பெரோஸ்பூர்-சியோனி பாதாள கோட் விரைவு ரயில் அதிவேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரயில், அவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் ரயில்வே பாதுகாப்புப் படை அரசு ரயில்வே போலீஸ் (GRP), ரயில்வே மூத்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து எப்படி நேரிட்டது என்பது குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.”
