சென்னை, ஜூன் 14- பசிபிக் பெருங்கடலில் தற்போது எல்நினோ நிலை உருவாகியுள்ளதாகவும், அது வரும் ஜூன் – ஆகஸ்ட் காலாண்டில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு எல்நினோ நிலை உருவாகக்கூடும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்த முக்கிய முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ளது. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
வெப்பநிலை அதிகரிப்பு: மத்திய மற்றும் கிழக்கு எக்வடோரியல் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. தற்போது, இந்த வெப்பநிலை எல்நினோவின் அடையாளக் குறியீடான +0.5°C அய்க் கடந்து பதிவாகியுள்ளது.
காலநிலை முன்னறிவிப்பு அமைப்புகளின் கணிப்பின்படி, வரும் ஜூன் – ஆகஸ்ட் 2026 காலாண்டில் எல்நினோ மிதமான நிலையில் இருந்து வலுவான நிலையை அடையக்கூடும். மேலும், இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இது உச்சக்கட்ட தீவிரத்தை எட்ட வாய்ப்புள்ளது.
இந்தியப் பெருங்கடல் நிலை: பசிபிக் பெருங்கடலில் மாற்றம் இருந்தாலும், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற் பரப்பு வெப்பநிலை தற்போது இயல்பான அளவிலேயே உள்ளது. வரும் நாட்களிலும் இது இயல்பான நிலையிலேயே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு:
“எல்நினோவின் நகர்வுகள் மற்றும் கடல் வெப்பநிலை மாற்றங்களை இந்திய வானிலை ஆய்வு மய்யம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்கள் மாதாந்திர முன்னறிவிப்புகள் மூலம் தொடர்ந்து வழங்கப்படும்.
