சென்னை, ஜூன் 13- தூத்துக்குடி தொகுதிக்கு வர வேண்டிய கப்பல் கட்டும் ஆலை திட்டம் என்னவானது என்று தி.மு.க. மக்களவை குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தற்போதைய தவெக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி, தற்போதைய தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவிற்கே முன்மாதிரி தி.மு.க. ஆட்சி
“உங்களை விட 100 மடங்கு ஒன்றிய அரசை எதிர்த்தவர்கள் மற்றும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள் தான்.” மேலும், திமுக ஆட்சியில் இருந்தபோது ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்காத நிலையிலும், தமிழ்நாடு மக்களைப் பாதுகாப்பதிலும், மக்கள் நலத் திட்டங்களை வழங்குவதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்மாதிரியாக திமுக ஆட்சி திகழ்ந்தது.
தற்போதைய தமிழ்நாடு அரசின் கீழ் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. “தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இதுவரை இல்லாத அளவிற்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியாத அரசாக தற்போதைய தவெக அரசு செயல்பட்டு வருகிறது.” மறைந்த தலைவர் கலைஞர் தான் முதன்முதலில் காவல்துறைக்கு பெண் காவலர்களைக் கொண்டு வந்தார்.
பெண்கள் பாதுகாப்பிற்காகத் தனியாக ஒரு பிரிவை உருவாக்கியவர் மு.க.ஸ்டாலின்.
“தற்போது என்னென்ன திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன என்றே தெரியாமல், அதற்குப் புது ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக தவெக அரசு உள்ளது. ஒரு திட்டத்திற்குப் புது பெயர் கொடுத்து, புது சீருடை வழங்கினால் அது புதிய திட்டமாக மாறிவிடுமா?” தூத்துக்குடி தொகுதிக்கு வரவேண்டிய கப்பல் கட்டும் ஆலை திட்டம் என்னவானது?
“முந்தைய ஆட்சியைக்குறை சொல்வதை நிறுத்துங்கள்!”
எடுத்தற்கெல்லாம் “முந்தைய ஆட்சி, முந்தைய ஆட்சி” என்று பழியைப் போடுவதை தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அதை விடுத்து தமிழ்நாட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கான தகுந்த நடவடிக்கைகளில் தற்போதைய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
