‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (1)

6 Min Read

பெண்களுக்கு ‘இந்து’ மதம் என்ற ‘ஸநாதன’ மதம் இழைத்தக் கொடுமைகளுக்கு அளவே இல்லை. அவர்கள் மதத்தில் பெண்களை ஓர் உயிருள்ள, இரத்தமும், சதையுமான மனித இனமாக நினைத்ததேயில்லை. நான்கு வருணத்தைக் கற்பித்த ஸநாதன மதத்தில் பெண்களுக்கு எந்த வருணத்திலும் இடமேயில்லை.

‘பஞ்சமர்’கள் எப்படி சமூகப் படிநிலையில் அய்ந்தாவதாக வைக்கப்பட்டு “தீண்டத்தகாதவர்” களாக ஆக்கப்பட்டார்களோ, அதே போல் பெண்கள் அவர்களுக்கும் கீழாக வைக்கப்பட்டார்கள். அவர்கள் “போகப் பொருளாக”த்தான் பார்க்கப்பட்டார்கள்.

“சமூக அந்தஸ்து” என்பது அவர்களுக்குக் கிடையவே கிடையாது. அவர்கள் வேதம் ஓதக் கூடாது, மந்திரங்கள் சொல்லக் கூடாது, பூஜை செய்யக் கூடாது, அர்ச்சகர் ஆக முடியாது, பூணூல் போடக் கூடாது, கல்வி கற்கும் உரிமை கிடையாது போன்ற சமூகக் கட்டுப்பாடுகள் அவர்கள் மேல் ஸநாதனவாதிகளால் (பார்ப்பனர்களால்) திணிக்கப்பட்டன. பெண், குழந்தைப் பருவத்தில் தந்தையாலும், வாலிபத்தில் கணவனாலும், மூப்பில் மகனாலும் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்று மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது.

“எந்த நிலையிலும் பெண் தன்னிச்சையாக, சுயமாக செயல்படக் கூடாது” என்று அதே மனுதர்மம் கூறுகிறது. பெண்ணடிமைத்தனம் என்பது இந்து மதத்தின் ஓர் அடிப்படைக் கூறாகும். அந்த அடிப்படையின் உச்சக் கட்டக் கொடுமைதான் “சதி” என்ற “உடன்கட்டை” ஏற்றும் வழக்கம். கணவன் இறந்து விட்டால் (பெண்) அவன் மனைவி மற்ற ஆணுடன் தவறிழைத்து விடுவாள் என்ற இழிவான எண்ணத்தில் கணவன் பிணத்தோடு, மனைவியைக் கட்டி வைத்து எரித்துக் கொல்லும் கொலைகள் இயல்பாக எந்தவித கருணையுமின்றி, மனிதத் தன்மையுமின்றி நடத்தப்பட்டன.

அந்தக் கொலைகள் சமூக அங்கீகாரத்தோடு நடந்தன. ஆயிரம் ஆயிரம் பெண்கள் இரக்கமேயின்றி இந்த வழக்கத்தால் கொலை செய்யப்பட்டனர். அந்த நிகழ்ச்சிகளின் கொடுமைகளையும், அதை அரசாங்கங்கள் தடுக்க முயன்றதையும், அவ்வாறு செய்ய விடாமல் பார்ப்பனர்கள் போட்டத் தடைக் கற்களையும் பார்ப்போம்!

“ஆங்கிலேயே இந்தியர்கள்” (சமஸ்கிருதம் படித்த ஆங்கிலேயர்கள்) அதிகம் வெறுத்த ஸநாதன மத வழக்கமானது “சதி” என்ற பெண்களைக் கொல்லும் வழக்கம். “சதி” (Sattee) என்ற பெண்களை உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் இந்தச் சடங்கைப் பழங்காலமாக ஆரியர்கள் செய்து வந்தனர். வழக்கமாகக் கொண்டிருந்தனர். மத்திய ஆசியாவில் வாழ்ந்த நாடோடிகள் (ஆரியர்கள்) இந்தப் பழக்கத்தை வைத்திருந்தனர்.அவர்களின் படையெடுப்புகளால் இந்த நாட்டிலும் இந்தப் பழக்கம் பரவியது.

ஹெப்தலைட்டுகள் இங்குள்ள மக்களோடு உறவு கொண்டதால் உருவானதாகக் கருதப்படும் இராஜபுத்திரர்களிடயே இந்தப் பழக்கம் கட்டாயமாக்கப்பட்டது. ஆரியர்களின் ரிக் வேதத்தில் இதைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன. கணவனோடு உடன்கட்டை ஏறிய பெண்ணிற்கு முதல் நினைவுச் சின்னம் மத்தியபிரதேசம், சாகருக்கு அருகில் ஏரன் என்ற ஊரில் காணப்பட்டது. கி.பி.510இல் ஒரு தூணில் இந்த நிகழ்வைப் பற்றிய கல்வெட்டு காணப்படுகிறது. போரில் கொலையுண்ட தங்கள் கணவர்களோடு உடன்கட்டை ஏற்றப்பட்ட பெண்களுக்காக நாட்டப்பட்ட எண்ணற்ற நினைவுக் கற்கள் வட இந்தியா முழுவதும் இன்றும் காணப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் ஒரு ஆண் பல பெண்களை மணக்கும் நடைமுறை இருந்தது. அதுவும் வயது முதிர்ந்த கிழவர்கள் கூட இளம் பெண்களை, சிறுமிகளை மணக்கும் முறை இருந்தது. வயது முதிர்ந்தவர்கள் மூப்பின் காரணமாக மரணமடைந்ததால் அவர் மனைவிகள் (சிறுமிகளாக இருப்பவர்கள் உட்பட) அனைவரையும் கணவனின் சிதையில் தள்ளி எரித்துக் கொள்ளும் கொடுமையான பழக்கமே உடன் கட்டை ஏறும் பழக்கம். பார்ப்பனர்களாலும், சத்திரியர்களாலும் சில சூத்திரர்களாலும் பின்பற்றப்பட்ட மத வழக்கம் இது. “சதி” என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு “பரிசுத்தமானவள், தூய்மையானவள்” (கற்புடையவள்) என்று பொருள்.

1834இல் 284 பார்ப்பனப் பெண்கள், 292 சத்திரியர்கள், 14 வைசியர்கள், 25 சூத்திரர்கள் சதியால் எரித்துக் கொல்லப் பட்டதாக அரசுப் பதிவில் உள்ளது. (சான்று: “இந்தியா” வரலாறும், அரசியலும் – டி.ஞானய்யா) இந்தக் கொடிய பிற்போக்குத்தனமான, பெண்களுக்கு எதிரான தாக்குதல் அய்ரோப்பாவைச் சேர்ந்த சமஸ்கிருதம் படித்த இந்தியர்(?)களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல் ராஜா ராம் மோகன்ராய் போன்ற ஆங்கிலம் படித்த இந்திய ஆங்கிலேயர்களுக்கும் இது ஒரு கேவலமான பழக்கம், ஒழிக்கப்பட வேண்டியது என்ற உணர்வு இருந்தது. அதன் விளைவாகவே கிழக்கிந்திய கம்பெனி ஒரு சட்டம் இயற்ற முயன்றது.

பார்ப்பனர்களிடம் ஒரு கட்டாயச் சடங்காக இருந்து வந்த இந்தப் பெண்களைக் கொடுமைப்படுத்திக் கொல்லும் “காட்டுமிராண்டி”ப் பழக்கம், நாளடைவில் சத்திரியர்(ராஜபுத்திரர்)களுக்கிடையேயும், மெதுவாக “சூத்திரர்”களுக்கும் பரவியது.

கணவன் மறைந்தால் பெண்கள் கற்பிழந்து விடுவார்கள், தவறு செய்து விடுவார்கள் என்ற பெண்கள் மேல் இருந்த ஒரு கீழான எண்ணமே இதற்குக் காரணம் (“மாதர்கள் பெரும்பாலும் “விபசார “தோஷமுள்ளவர்களென்று என்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங்களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன” என்று அத்தியாயம் 9, ஸ்லோகம் 19இல் “அசல் மனுதர்ம சாஸ்திரம்” கூறுவதைத்தான் பார்ப்பனர்கள் தங்கள் வீட்டுப் பெண்களையே இழிவுபடுத்தி, நெருப்பில் கொளுத்தினர்).

ஆனால், அதை நேரடியாகச் சொல்லாமல் கணவனோடு “உடன் கட்டை” ஏறினால் அந்தப் பெண் நேரடியாக கணவரோடு சொர்க்கம் சென்று, ஆயிரம் வருடங்கள் சொர்க்கலோக இன்பங்களை அடைந்து வாழ்வாராம். அந்தப் பெண் கடவுளுக்கு சமமானவள் என்றும் (“சதி மாதா”என்று அவருக்காகக் கோயில் கட்டிக் கும்பிடும் வழக்கம் இருந்தது), கணவன் மீதான அன்பையும், பற்றையும், பக்தியையும் காட்டும் வழியென்றும், இந்தச் செயலால் கணவன் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களிலிருந்து விடுதலை அடைவான் என்றும் பெண்களிடம் மூளைச்சலவை செய்தே ஆரம்பத்திலிருந்து வளர்க்கப்பட்டனர்.

விதவைக் கோலம் ஏற்ற பெண்கள் பலவித மதக் கட்டுப்பாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டு, மீண்டும் ஒரு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத சமூகக் கட்டுப்பாடுகள் அவர்கள் மேல் திணிக்கப்பட்டு, அதைவிட மரணமே மேல் என்ற மனஓட்டம் அவர்கள் மேல் திணிக்கப்பட்டன. அதனால் இந்த நம்பிக்கைகளை நம்பி, வேறு வழியின்றி அதை ஆரம்பக் கட்டங்களில் பெண்கள் ஏற்றுக் கொண்டு உடன்கட்டை ஏறினர்.

நாளடைவில் இதுவே கட்டாய சடங்காக மாறி பெண்கள் விரும்பாவிட்டாலும் கணவனை எரிக்கும் நெருப்பிலேயே மனைவியை தள்ளி, எரித்துக் கொல்லும் சடங்காக மாறிப் போனது. பெண்களை இப்படி வலுக்கட்டாயமாகக் கொல்வது கொலைக்குற்றமாகக்  கூட கருதப்படவில்லை. மாறாக “மதச்சடங்கு” என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டது.

1823ஆம் ஆண்டு “பேனி பார்க்கஸ்” என்பவர், தான் கண்ட “சதி”க் கொலையைப் பற்றி எழுதுகிறார். “கங்கைக் கரையருகே இருக்கும் ஒரு சிற்றூரில் பிற்பகல் நேரத்தில் ஒரு கூட்டத்தைக் கண்டேன். இறந்த கணவன் சிதையில் அவன் மனைவி குதிக்கப் போகிறாள் என்று கூட்டத்தினர் பேசிக் கொண்டிருந்தனர். அதைப் பார்ப்பதற்கு நானும், என் கணவரும் அங்கு நின்றோம். 20 வயதே ஆன அந்தப் பெண் உடன்கட்டை ஏற வேண்டும் என்று உள்ளூர் வெள்ளைக்கார நீதிபதியிடம் மனு அளித்தாள். அவர் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்.

அந்தப் பெண் மன்றாடினாள். ஆனால் அவர் அப்பொழுதும் அதற்கு இணங்கவில்லை. அவள் அவரின் வீட்டின் முன் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினாள். அவர் அவளைத் திட்டி அனுப்பி விட்டார். அவளின் உறவினர்கள் ஒரு கும்பலாக வந்து நீதிபதியிடம் வந்தனர். உடன்கட்டை ஏறுவது மத சம்பிரதாயம், அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சினர். மதத்தின் பெயர் சொன்னதால் நீதிபதி அரை மனத்துடன் அனுமதி கொடுத்தார்.அவள் நெருப்பில் விழுந்து சாவதைப் பார்க்கத்தான் அந்தக் கும்பல் அங்கே கூடியிருந்தது.

கணவனின் இறந்த உடல் சிதையில் வைக்கப்பட்டு தீ மூட்டப் பட்டது. 20 வயதான அந்த இளம்பெண், “ராம், ராம்” என்று கூறியபடி சிதையில் படுத்தாள். தீ நாக்குகள் அவளைத் தழுவத் தொடங்கின. வெப்பம் தாங்காமல் அவள் அலறிக் கொண்டே சிதையிலிருந்து இறங்கி ஓடினாள். உடனே கூட்டத்தினர் அவளைத் தடியால் அடித்து இழுத்து வந்து மீண்டும் சிதையில் படுக்க வைத்தனர். அவள் கத்திக் கதறிவாறே மீண்டும் சிதையை விட்டு ஓடினாள். “அவளை விடாதீர்கள், கொல்லுங்கள், கொல்லுங்கள்” என்ற கூக்குரலிட்டவாறு அந்த கும்பல் அவளைப் பின்தொடர்ந்து ஓடியது. ஓடிய பெண் கங்கையில் குதித்துவிட்டாள். அவளைத் தொடர்ந்த கூட்டத்தில் இரண்டு பேர் ஆற்றில் குதித்து அவள் முடியைப் பிடித்து இழுத்து வந்து கதறிக் கொண்டிருந்த பெண்ணை மீண்டும் சிதையில் தள்ள முயன்றனர். நீதிபதி குறுக்கிட்டார். “உங்கள் திட்டப்படி அவளை நெருப்பில் தள்ளி விட்டீர்கள்.கங்கையில் குதித்து அவள் மறுபிறவி எடுத்து விட்டாள். இனி அவளைப் பாதுகாப்பது என் பொறுப்பு. இது என் உத்தரவு” என்று அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று விட்டார்” என்று பேனி பார்க்கஸ் அந்த நிகழ்வை குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு கொடுமை? இதைப் போன்ற கொடூரத்தைத் தடுக்க ஆங்கிலேய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை? (சான்று: “எனது இந்தியா” – எஸ்.ராமகிருஷ்ணன்.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *