தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் போராட்டங்களிலும்
‘விடுதலை’ நாளேடு கேடயமாகவும், வாளாகவும் இருந்திருக்கின்றது!
இன்னும் பல நூறாண்டுகள் ‘விடுதலை’ நாளேடு என்பது திகழும்; திகழ வேண்டிய தேவை இருக்கின்றது!
‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழாவில் எழுத்தாளர் ப.திருமாவேலன் சிறப்புரை
‘விடுதலை’ நாளேடு கேடயமாகவும், வாளாகவும் இருந்திருக்கின்றது!
இன்னும் பல நூறாண்டுகள் ‘விடுதலை’ நாளேடு என்பது திகழும்; திகழ வேண்டிய தேவை இருக்கின்றது!
‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழாவில் எழுத்தாளர் ப.திருமாவேலன் சிறப்புரை
சென்னை, ஜூன் 12 ‘‘தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் ‘விடுதலை’ நாளேடு கேடயமாகவும், வாளாகவும் இருந்திருக்கின்றது! இன்னும் பல நூறாண்டுகள் இந்த ‘விடுதலை’ நாளேடு என்பது திகழும்; திகழ வேண்டிய தேவை இருக்கின்றது! ஆசிரியர் அவர்கள் எந்நாளும் நம்மை வழிநடத்துவார்!’’ என்றார் எழுத்தாளர் ப.திருமாவேலன் அவர்கள்.
‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழா!
கடந்த 1.6.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற ‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழா – சுயமரியாதைச் சுடரொளிகள் குணசீலன் – தங்கமணி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில், எழுத்தாளர் ப.திருமாவேலன் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
‘விடுதலை’ என்பது கேடயமாகவும் இருந்திருக்கிறது;
வாளாகவும் இருந்திருக்கின்றது!
வாளாகவும் இருந்திருக்கின்றது!
அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, இலங்கை தமிழர் போராட்டமாக இருந்தாலும் சரி, மொழிவாரி மாகாணங்களை உருவாக்கிய போராட்டமாக இருந்தாலும் சரி, சென்னையைக் காப்பாற்றிய போராட்டமாக இருந்தாலும் சரி, எந்தப் போராட்டமாக இருந்தாலும், அப்போது ‘விடுதலை’ என்பது கேடயமாகவும் இருந்தி ருக்கிறது; வாளாகவும் இருந்திருக்கின்றது ‘விடுதலை’யினுடைய ஒவ்வொரு தலைப்புகளும்!
சென்னை மாகாணத்தை ஆந்திராக்காரர்கள் சொந்தம் கொண்டாடிய போது, சென்னை மாகாணத்தைப் பிரிக்கும் போது, ‘‘எங்களுடைய தலைமைச் செயல கத்தையாவது சென்னையில் வைத்துக் கொள்கி றோம்’’ என்று ஆந்திராக்காரர்கள் ஒரு கோரிக்கை வைத்தார்கள். அப்போது பெரியார் எழுதியிருக்கிறார், ‘‘ஆந்திராவில் பழைய கல்யாண மண்டபங்கள் நிறைய இருக்கிறது. எனவே, நீங்கள், அதில் ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தில், உங்களுடைய தலைமைச் செயலகத்தை நடத்திக் கொள்ளுங்கள்’’ என்று அவர் எழுதியிருக்கின்றார்.
இன்னொன்றும் எழுதியிருக்கின்றார், ‘‘தனிக் குடித்தனம் போனவன், சமையலை மட்டும் இங்கே வந்து பார்த்துக் கொள்கிறேன்; எனக்கு சமையல் பண்ணு வதற்கு இடம் கொடுங்கள்’’ என்கின்ற கேவலமான நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்று கேட்டவர் அவர்.
‘‘ஒரு தலைநகரத்தைக் கூட உருவாக்க ஒரு நகர் கூட இல்லாத ஒருவன், ஏன் தனி மாகாணம் கேட்கிறாய்?’’ என்று கேட்டவரும் தந்தை பெரியார் அவர்கள்.
இப்படி எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும், சென்னை மாகாணத்தை உருவாக்கிய போராட்டமாக இருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினைப் போராட்டமாக இருந்தாலும் அதற்கு வாளாகவும், கேடயமாகவும் இருந்தது நம்முடைய ‘விடுதலை’ நாளிதழ்!
‘சூத்திரர்’ என்ற சொல்லை விரட்டியடித்ததில் பெரும் பங்கு உண்டு!
‘‘சூத்திரர் என்று சொன்னால், ஆத்திரம் கொண்டு அடி’ என்பது கைவல்யம் எழுதிய ஒரு பொன்மொழி. ஆனால், சூத்திரன் என்ற சொல்லைச் சொன்னால், அது அவமானம் என்கின்றதை உருவாக்கி, தமிழ்ச் சமூகத்தில் அப்படி ஒரு சொல்லை விரட்டி அடித்ததில், ‘விடுதலை’க்குத் தான் பெரும் பங்கு உண்டு. ‘பிராமணாள் ஓட்டல்’ என்பதற்கு எதிராக ‘விடுதலை’ நடத்திய போராட்டங்கள், அதேபோல், ரயில் நிலையங்களில் ‘பிராமணாள் சாப்பிடும் இடம்’, ‘இதராள் சாப்பிடும் இடம்’ என்கின்ற பெயர் பலகைக்கு எதிராக, மிகப்பெரிய போராட்டத்தை 1940 இல் தொடங்கி 1944 ஆம் ஆண்டு இனி இந்த சொல் இருக்காது என்கின்ற நிலைமையைப் போராடி உருவாக்கியதும் தலைவர் தந்தை பெரியார் நடத்திய ‘விடுதலை’ நாளிதழ் தான்.
தமிழ்ச் சமுதாயத்தின்
அனைத்துப் போராட்டங்களிலும் முன்னிலை வகித்த நாளிதழ்!
அனைத்துப் போராட்டங்களிலும் முன்னிலை வகித்த நாளிதழ்!
அதேபோல் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என்று ரயில் நிலையங்களில் இருக்கின்ற பெயர் பலகைகளில் தமிழை முன்னே கொண்டு வந்து நிறுத்துவதற்கான போராட்டத்தை நடத்தியதும் ‘விடுதலை’ நாளிதழ்தான். இப்படித் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னிலை வகித்து, தமிழர்களை, தமிழர்களாய் உணர வைத்து, தமிழ் இனத்தின், இனத்தையும், மானத்தையும் உருவாக்குவதற்கு அடித்தளம் அமைத்த இதழ் என்று சொன்னால், அது ‘விடுதலை’ நாளிதழ் ஒன்று மட்டும்தான் என்பதைச் சொல்லிக் கொள்வதில், அது வரலாற்று உண்மை மட்டுமல்ல, நமக்கும் பெருமையாகும். அதனால்தான் இத்தனை ஆண்டுகால வர லாற்றையும் ஒரே சொல்லில் அடக்கும் வகையில், ‘இனமானக் கேடயம் விடுதலை’ என்கின்ற தலைப்பை, தலைவர் ஆசிரியர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார்கள்.
இன்று இப்படி, உருவாக்கப்பட்ட சமூகத்தில், இவை அனைத்தும் வீணாகப் போய்விடுமோ என்கின்ற ஒரு காலத்தை, நம் கண்முன் காட்டி இருக்கின்றது, கடந்த கால தேர்தல் முடிவு என்பது.
தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சியே தோல்வி அடைந்துவிட்டதோ?
இந்தத் தேர்தல் காலகட்டத்தில், தமிழ்ச் சமுதாயத்தின் நலம் விரும்பிகள், சமூக அக்கறை கொண்டவர்கள், நம்மைப் போன்ற கருப்பு மெழுகுவத்திகள் இவர்கள் அனைவரும் கவலைப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக, தேர்தல் தோல்வி என்பது அல்ல; தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சியே தோல்வி அடைந்துவிட்டதோ? என்று அய்யப்படும் அளவுக்கு, உள்ள நிலைமையை நாம் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
1994 ஆம் ஆண்டிலேயே
ஆசிரியர் சொல்லியிருக்கிறார்!
ஆசிரியர் சொல்லியிருக்கிறார்!
நான் இதை யோசித்துப் பார்க்கும்போது 1994ஆம் ஆண்டு, திராவிடர் கழகத்தின் பொன்விழா மாநாட்டில் உரையாற்றிய ஆசிரியர் அவர்கள், ஒரு குறிப்பைச் சொல்லி இருக்கின்றார். அது இந்தக் காலகட்டத்திற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கின்றது. 1994–லேயே இதை உணர்ந்து சொல்லியிருப்பார் என்கின்ற அளவு அது இருந்தது.
‘‘அரசியல் பொருளாதார படையெடுப்பை விட, தமிழினம் மீளாவண்ணம் பண்பாட்டு படையெடுப்புகள் தான் அதிகம் நடக்கின்றன. கடவுள் போதை, ஜாதி போதை, மத போதை, பதவி போதை, புகழ் போதை, சினிமா போதை, லாட்டரி போதை, மாத்திரை போதை ஆகியவை பரப்பப்படுகின்றன’’ என்று 1994 இல் அவர் சொல்லியிருக்கின்றார். அதனுடைய உச்சமாகத்தான் நாம் இப்போது இருக்கின்ற நிலைமையைப் பார்க்க வேண்டியது இருக்கின்றது. இத்தோடு சேர்ந்து வாட்ஸ்–அப் போதை, இணைய தளம் போதை, இன்ஸ்டாகிராம் போதைகளும் சேர்ந்து இவை அனைத்தும் தூண்டி விடப்படுகின்றன.
வளர்ச்சி என்கின்ற பெயரால், ‘பண்பாட்டில் யுத்தம்’ என்பது இந்த வழியாக தமிழ்ச் சமுதாயத்துக்குள் புகுத்தப்பட்டிருக்கின்றது. இதைத் திராவிட இயக்கம் போன்ற அமைப்புகள், சமூக அக்கறை கொண்ட மனிதர்களாகிய நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதுதான் மிக மிக முக்கியமானதாகும்.
தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலத்திற்குத் தேவையான வெற்றி!
2026 தேர்தல் என்பது, ஓர் அரசியல் கட்சியின் தோல்வியாக நினைத்தால், நாம் ஏமாந்து போவோம்; நாம் அப்படி நினைக்க மாட்டோம். ஏனென்றால், பெரியார் நமக்கு அப்படிக் கற்பிக்கவில்லை. காமராஜரின் வெற்றியை அவர் எப்படி தமிழர் அரசியலின் வெற்றியாக நினைத்தாரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றியை, தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலத்திற்குத் தேவையான வெற்றி என்று தந்தை பெரியார் அவர்கள் நினைத்தார்களோ, அதைப்போல திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றி என்பதை, தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலத்திற்குத் தேவையான வெற்றி என்று தான், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெரியாரின் பாசறையில் வளர்ந்தவர்களாக இருந்தாலும் நாம் நினைப்போம்.
ஏனென்றால், ‘‘ஓர் அரசியல் இயக்கம் அல்லது ஓர் ஆட்சி தமிழர்களுக்கு என்ன செய்தது? தமிழ்ச் சமுதாயத்துக்கு என்ன செய்தது? என்பதை வைத்தே நான் ஆதரிக்கிறேன்’’ என்று சொன்னார் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அந்த அடிப்படையில் பார்த்தால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்வி என்பது ஒரு ஜனநாயக அரசியல் கட்சியில், வெற்றி – தோல்விகள் என்பது மிக இயல்பானது; மேடு – பள்ளங்கள் என்பது இயல்பானது. நாம், அந்த வெற்றி – தோல்விகளை அப்படித்தான் எடுத்துக் கொள்வோம். ஆனால், இன்று சமூகத்தின் மீதான ஒரு பண்பாட்டு யுத்தத்தை, கலாச்சாரத்தினுடைய நசிவை, ஓர் அரசியல் கட்சி, தனது வெற்றியாக மாற்றிக் கொண்டுவிட்ட அவல நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.
‘‘மூன்று நோய்கள், பேய்கள்!’’
இப்போதுதான், சினிமாவை ஒழிக்க வேண்டும்; இந்தத் தமிழ்ச் சமுதாயத்தின் ‘‘மூன்று நோய்கள், பேய்கள்’’ என்று பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டியதில், சினிமாவை ஏன் அந்தக் காலத்திலேயே சொல்லி இருக்கிறார் என்பதை, நாம் அப்போது கூட, அந்தக் காலத்தில் சினிமாவைப் பயன்படுத்திக் கூட நாம் வெற்றி பெறலாம் என்று அண்ணா கண்டுபிடித்த பாணியை, இன்றைக்கு சினிமா யாருடைய கையிலேயோ சிக்கி, 25 ஆண்டு காலம் மறைமுக யுத்தம் நடத்தி, இன்று இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரச் சீரழிவுக்கு கொண்டு போய் விட்டிருக்கிறது என்று சொன்னால், இவை அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டிய காலம் என்பது நமக்கு மிகச் சிரமமான காலமாக இருக்கின்றது.
நான் பெரியார் திடலுக்குள் வந்தவுடன், அன்பு அண்ணனிடம் சொன்னது, ‘‘இனிமேல் தான் உங்களுக்கு அதிகமாக வேலை இருக்கிறது’’ என்று.
திராவிடர் கழகம், ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சியினரை வழிநடத்துவதற்கு அது ஓர் இயக்கமாக இருந்திருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சியை – அப்போதும் தமிழ்ச் சமுதாயத்தை வழிநடத்தும் கட்சியாக திராவிடர் கழகம் எப்போதும் இருந்திருக்கின்றது.
காமராஜரை ஆதரித்த காலத்திலும், தலைவர் தந்தை பெரியார் அவர்கள், ‘‘எனது வாழ்க்கையில் இரண்டு முறையோ, மூன்று முறையோ தான், நான் காமராஜரைப் பார்த்திருக்கிறேன்’’ என்று சொன்னார். அவருக்குத் தேவை என்பது, தமிழ்ச் சமுதாயத்தினுடைய வளர்ச்சியை முக்கியமாகக் கருதி அப்படி செயல்பட்டார்.
‘‘நாம் மாநாடுகளை நடத்துவதை விட, இனிமேல் அதிகமாக பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும்!’’
ஆனால், இன்றைக்குத் திராவிடர் கழகத்தின் பணி என்பது, நாம், நம்முடைய பேச்சுகளையும், நம்முடைய எழுத்துகளையும், நம்முடைய பிரச்சாரங்களையும் அதிகப்படுத்துவோம் என்பதை விட, அதை இன்னும் மாற்று வழிகளிலும் கொண்டு போய்ச் சென்று, இந்த இளைய சமுதாயத்தின் மத்தியில் நாம் அதை விதைக்க வேண்டும் என்கின்ற காலகட்டமாக இது அமைந்திருக்கின்றது. நான் சில நாட்களுக்கு முன்பு, இதே மேடையில் நடைபெற்ற கூட்டத்திலும் குறிப்பிட்டேன், ‘‘நாம் மாநாடுகளை நடத்துவதை விட, இனிமேல் அதிகமாக பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும்’’ என்று.
இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு பயிற்சி முகாம்களின் மூலமாகத்தான் நாம் இவை அனைத்தையும் கற்பிக்க முடியும். நாம் கற்பிக்கும் இயக்கம், பரப்பும் இயக்கம். அதைத்தான் 1925–களில் பெரியார் செய்தார். 1935 இல் ‘விடுதலை’யின் மூலமாகச் செய்தார். ‘புரட்சி’யின் மூலமாகச் செய்தார். ‘குடிஅரசு’வின் மூலமாகச் செய்தார். ‘உண்மை’யின் மூலமாகச் செய்தார். அந்தந்த காலகட்டத்து இளைஞர்களை ஈர்க்கக்கூடிய அளவுக்கு அவருடைய பாணி என்பது அமைந்திருக்கிறது.
‘கெடுதலை நீக்க வந்த விடுதலை’யை உயர்த்திப் பிடிப்போம்!
‘‘இன்று, நான் வயதானவனாக இருக்கலாம். நான் எழுதியதை நீங்கள் படிக்காமல் கூட போகலாம். எனக்கு யாரும் படிப்பதைப் பற்றிக் கூட கவலை இல்லை. ஆனால், ஒரு காலம் வரும், என்னுடைய பேச்சையும், எழுத்தையும் படிக்கக்கூடிய இளைய தலைமுறை நிறைய உருவாகும். அந்த இளைய தலைமுறைக்காகத்தான், எதிர்காலத்தில் வரக்கூடிய இளைய தலைமுறையை நம்பித்தான் நான் எழுதுகிறேன், பேசுகிறேன்’’ என்று சொல்லி, பெரியார் அவர்கள், தனக்குத்தானே எழுதிக்கொண்ட எழுத்துகளைத் தான் இன்று உலகம் படித்துக் கொண்டிருக்கின்றது. அப்படி அவரால் எழுதப்பட்ட எழுத்துகளை, நாம் இன்றைய இளைய தலைமுறைக்குப் புகுத்தி, அதை பல்வேறு வடிவங்களில், இன்றைக்கு இருக்கின்ற நவீன வடிவங்களில் உருவாக்கி, ‘கெடுதலை நீக்க வந்த விடுதலை’யாக நாம் இதை மீண்டும் உயர்த்திப் பிடிப்போம்! என்று சொல்லி, அனைவருக்கும் நன்றி தெரிவித்து, 92 ஆண்டுகள் அல்ல, இன்னும் பல நூறாண்டுகள் இந்த ‘விடுதலை’ நாளேடு என்பது திகழும்; திகழ வேண்டிய தேவை என்பது இருக்கின்றது. நமக்கு அறிவாயுதமாக, ஆசிரியர் அவர்கள் எந்நாளும் வழிகாட்டி, நம்மை வழிநடத்துவார் என்று என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.
– இவ்வாறு எழுத்தாளர் ப.திருமாவேலன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
