குற்றங்களை விசாரிக்க மட்டுமே அதிகாரம்; யாரையும் சித்ரவதை செய்யும் உரிமை காவல்துறைக்கு இல்லை மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் உயர்நீதிமன்றக் கிளை கருத்து

3 Min Read

மதுரை, ஜூன் 12 காவல் துறைக்கு குற்றங்களை விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, யாரையும் சித்ரவதை செய்ய உரிமை இல்லை என மானாமதுரை ஆகாஷ் உயிரிழந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை கூறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் ஒரு வழக்கில் கைது செய்தனர். அப்போது, அவர் தப்ப முயன்றதில் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். ஆனால் காவல் துறையினர் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மானாமதுரை – ராமேசுவரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘காவல் மரணம் என்பதால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட –– – பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிசிஅய்டி விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கில் முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை சிபிசிஅய்டிக்கு மாற்றப்பட்டு, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் விசாரிக்கிறார். கண்காணிப்புப் படக்கருவிக் காட்சிகள் மற்றும் மருத்துவமனை, காவல் நிலைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிபிசிஅய்டி விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு தகுந்த சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, விசாரணையை விரைந்து முடித்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். காவல் துறைக்கு குற்றங்களை விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, யாரையும் சித்ரவதை செய்ய உரிமை இல்லை. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 வழங்கும் வாழும் உரிமை மற்றும் மனித கண்ணியம் என்பது காவல் நிலைய வாசலோடு முடிந்து விடுவதில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

மின்சார கேபிள் பழுதுகளை சீரமைக்க சிறப்புக் குழு சென்னை வருகை

தமிழ்நாடு மின்வாரியம் நடவடிக்கை

தமிழ்நாடு

சென்னை, ஜூன் 12 சென்னை மாநகரில் அடிக்கடி ஏற்படும் மின்சார கேபிள் பழுதுகளை விரைந்து சீரமைக்கவும், மின்தடை புகார்களை உடனுக்குடன் சரிசெய்யவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு  சென்னைக்கு வருகை தந்துள்ளது.

சென்னையில் பருவமழை காலங்களிலும், கோடை காலங்களிலும் பூமிக்கடியில் செல்லும் மின்கேபிள்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு பல மணி நேரம் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் குடிநீர் விநியோகம், மருத்துவமனை சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, மின்வாரிய அமைச்சரின் உத்தரவின்பேரில், மின்கேபிள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நவீன கேபிள் பழுது கண்டறியும் கருவிகளுடன் சென்னை வந்துள்ளனர்.

சிறப்புக் குழுவின் பணிகள்:

  1. சென்னையில் அடிக்கடி பழுதாகும் பகுதிகளை கண்டறிந்து, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பது.
  2. பழைய கேபிள்களை மாற்றி புதிய தரமான கேபிள்களை அமைப்பது குறித்து ஆய்வு செய்வது.
  3. மின்தடை ஏற்பட்ட 2 மணி நேரத்திற்குள் பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பது.
  4. ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனி கண்காணிப்பு குழு அமைப்பது.

இக்குழுவினர் அடுத்த 15 நாட்களுக்கு சென்னையில் தங்கி, அண்ணா நகர், தியாகராயர் நகர், அடையாறு, வேளச்சேரி, மாதவரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பொதுமக்கள் மின்தடை தொடர்பான புகார்களை 1912 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்புக் குழுவின் வருகையால் சென்னை மக்களுக்கு  மின்சார சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா அல்லது இதுவும் ஒரு கண் துடைத்து நாடகமா என்று கேட்டு பொதுமக்கள் புலம்புகின்றனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *