இந்திய அறுவை சிகிச்சை வல்லுநரான மருத்துவர் சுதிர் சிறீவஸ்தவா, கயானாவின் ஜார்ஜ்டவுனில் இருந்த படியே சுமார் 20,000 கிலோமீட்டர் தொலைவில் இந்தியாவின் இந்தூர் நகரில் இருந்த மருத்துவப் பயனாளிக்கு ரோபோடிக் உதவியுடன் வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.
சுகாதாரத் துறையின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கக்கூடிய வரலாற்றுச் சாதனை நிகழ்வாக, இந்திய அறுவை சிகிச்சை வல்லுநர் ஒருவர் கயானாவில் இருந்து சுமார் 20,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தூரில் இருந்த நோயாளிக்கு ரோபோடிக் உதவியுடன் வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சையை செய்துள்ளார். உலகின் மிக நீண்ட தூர ரோபோடிக் கார்டியாக் டெலிசர்ஜரி (Remote Cardiac Telesurgery) என்ற புதிய உலக சாதனையை இந்த நிகழ்வு படைத்துள்ளது.
மருத்துவ உலகில் புதிய மைல்கல்லாக, கயானாவின் ஜார்ஜ்டவுன் பொது மருத்துவமனை கார்ப்பரேஷன் (GPHC), மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ‘இர்காட் இந்தியா’ (IRCAD India) மருத்துவ மய்யம் ஆகியவற்றை இணைத்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. பிரபல ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வல்லுநரான மருத்துவர் சுதிர் சிறீவஸ்தவா, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘எஸ்.எஸ்.அய். மந்த்ரா’ (SSI Mantra) ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையைப் பயன்படுத்தி, கயானாவில் இருந்தபடியே ‘லிமா டேக் டவுன்’ (Left Internal Mammary Artery – LIMA takedown) என்ற சிக்கலான இதய அறுவை சிகிச்சையை ரிமோட் மூலம் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.
இதற்கு முன்பு பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க், இந்தியாவின் இந்தூர் ஆகிய நகரங்களுக்கு இடையே 10,000 கிலோமீட்டர் தொலைவில் செய்யப்பட்ட ரோபோடிக் இதய அறுவை சிகிச்சையே உலக சாதனையாக இருந்தது. தற்போதைய சாதனை, அந்தத் தூரத்தை விட இருமடங்காக (20,000 கி.மீ) அதிகரித்துள்ளது. இது தொலைதூர மருத்துவ வரலாற்றில் முக்கிய பரிணாம வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. மருத்துவர் சிறீவஸ்தவா கயானாவின் ஜார்ஜ்டவுனில் அமர்ந்து, நிகழ்நேர தொலைதூர இயக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு நாற்காலி கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். ரோபோடிக் கைகளும் அறுவை சிகிச்சை கருவிகளும் இந்தியாவில் இருந்தன. மருத்துவர் கயானாவில் கைகளை எவ்வாறு அசைத்தாரோ, அதே அசைவுகளை இந்தூரில் இருந்த ரோபோடிக் கைகள் அப்படியே துல்லியமாகப் பிரதிபலித்தன.
இந்த அறுவை சிகிச்சை அதிநவீன ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் மூலம் செய்யப்பட்டது. இதன் சிக்னல் வேகம் வெறும் 290-300 மில்லிசெகண்ட் (அதாவது 0.29 முதல் 0.30 வினாடிகள்) மட்டுமே தாமதத்தைக் கொண்டிருந்தது. இதனால் கயானாவில் மருத்துவர் கொடுத்த கட்டளைகள், அதே நொடியில் இந்தூரில் உள்ள ரோபோவால் தடையின்றி செயல்படுத்தப்பட்டன. உயர் ரக 3D காட்சித் தொழில்நுட்பம் (High-definition 3D visualisation) மற்றும் மேம்பட்ட ரோபோடிக் கட்டுப்பாடுகள் காரணமாக, சிக்கலான இதய அறுவை சிகிச்சையை மிகத் துல்லியமாகவும் நிலைத் தன்மையுடனும் செய்ய முடிந்தது.
இந்தியாவில் இந்த அறுவை சிகிச்சையின் போது மணிப்பால் மருத்துவமனையின் (ஜெய்ப்பூர்) மருத்துவர் லலித் மாலிக், பண்டாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் மருத்துவர் ராம் சுக்லா மற்றும் இர்காட் இந்தியாவின் தலைவர் மருத்துவர் மோஹித் பண்டாரி ஆகியோர் களத்தில் இருந்து ஆதரவு அளித்தனர். இந்த சாதனை அறுவை சிகிச்சை, கயானாவின் 60ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களுடன் இணைந்து நிகழ்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கயானாவின் ‘தேசிய ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தின்’ (National Robotic Surgery Programme) தொடக்க விழாவின் ஒருபகுதியாகவும் இது அமைந்தது. இதன் தொடக்க நாளில் மொத்தம் 3 ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டன.
இந்த சாதனையை நாட்டின் சுகாதாரத் துறையின் மாபெரும் வரலாற்றுத் தருணம் என்று கயானாவின் அதிபர் மருத்துவர் முகமது இர்பான் அலி பாராட்டியுள்ளார். தொழில்நுட்பத்தின் மூலம் புவியியல் எல்லைகளை எப்படிக் கடக்க முடியும் என்பதை இது நிரூபித்துள்ளதாகவும், மேம்பட்ட மருத்துவக் கண்டுபிடிப்புகளில் கயானாவை ஒரு முன்னணி நாடாக இது நிலைநிறுத்தியுள்ளது என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
