ஏ.அய். தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, 2030ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் தண்ணீர் நுகர்வு, மின்சாரத் தேவை மற்றும் நிலப் பயன்பாடு ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயரக்கூடும் என அய்.நா. எச்சரிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) என்றதும் நம் நினைவுக்கு வருவது சாட்பாட்களும், நொடியில் உருவாகும் அழகிய ஏ.அய். ஒளிப்படங்களும்தான். ஆனால், டிஜிட்டல் மாயாஜாலத்தின் பின்னணியில், பூமி பந்து தாங்க முடியாத அளவிற்கு ஒரு மாபெரும் சுற்றுச்சூழல் விலை மறைந்திருக்கிறது என்று அய்க்கிய நாடுகள் சபை அதிர வைக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நாம் கணினியிலும் மொபைலிலும் பயன்படுத்தும் ஏ.அய்-க்கு பின்னால் ‘தரவு மய்யங்கள்’ (Data Centres) எனப்படும் பிரம்மாண்ட சர்வர் உலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அதிநவீன சர்வர்கள் சூடாவதைத் தடுக்கவும், அவற்றுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் கற்பனை செய்ய முடியாத அளவிற்குத் தண்ணீர் தேவைப்படுகிறது. அய்.நா. அறிக்கையின்படி, 2030ஆம் ஆண்டிற்குள் இந்த ஏ.அய். தொழில்நுட்பம் மட்டுமே சுமார் 130 கோடி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான தண்ணீரை உறிஞ்சித் தீர்க்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு, தற்போதைய ஒட்டுமொத்த ஆப்ரிக்கக் கண்டத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கைக்குச் சமம் என்பதுதான் இதில் உறைப்படையச் செய்யும் உண்மை.
தண்ணீர் மட்டுமா? மின்சார நுகர்விலும் ஏ.அய். பெரும் தீங்காக மாறி வருகிறது. 2030-க்குள் ஏ.அய். தரவு மய்யங்கள் மட்டும் ஆண்டுக்கு 945 டெராவாட்-ஹவர் மின்சாரத்தை குடிக்கும் என இந்த ஆய்வு கூறுகிறது. இது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நைஜீரியா ஆகிய 3 நாடுகளின் ஒட்டுமொத்த ஆண்டு மின் நுகர்வை விட 3 மடங்கு அதிகம் ஆகும். இதில் மற்றொரு சுவாரசியமான உண்மை என்னவென்றால், ஏ.அய். மாடல்களுக்கு பயிற்சி அளிப்பதை விட, நாமும் நீங்களும் அன்றாட வாழ்க்கையில் அதனைப் பயன்படுத்துவதில்தான் (80% – 90% வரை) அதிக ஆற்றல் வீணாகிறது. குறிப்பாக, நாம் சாதாரணமாகக் கேட்கும் கேள்விகளை விட, ஏ.அய். மூலம் காணொலி காட்சிப் பதிவுகளையும், ஒளிப்படங்களையும் உருவாக்கும்போது சர்வர்கள் தங்களின் முழு ஆற்றலையும் உறிஞ்சுகின்றன.
ஏ.அய். வளர்ச்சியை நிறுத்த வேண்டும் என்பது அய்.நா-வின் நோக்கமல்ல. ஆனால், தொழில்நுட்பப் புதுமைகளைக் கொண்டாடும் அதே வேளையில், இயற்கையையும் கணக்கில் கொண்டு அரசாங்கங்களும், நிறுவனங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. தொழில்நுட்பத்தின் இந்த அசுர தாகத்தைத் தணிக்க, நம் பூமியிடம் போதிய வளங்கள் இருக்கிறதா என்ற அழுத்தமான கேள்வி இப்போது உலகிற்கு முன்னால் எழுந்துள்ளது.
