மின்னிமார்க், ஜூன் 10- காஷ்மீர் பள்ளத்தாக்கையும் லடாக்கையும் இணைக்கும், நாட்டின் மிக முக்கியமான மற்றும் மிக உயரமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான ‘சோஜிலா சுரங்கப்பாதை’ (Zojila Tunnel) கட்டுமானத்தில் நேற்று (9.6.2026) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 11,578 அடி உயரத்தில் கட்டப்பட்டு வரும் 13.153 கி.மீ நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சிறீநகர்-கார்கில்-லே தேசிய நெடுஞ்சாலையில் அமைந் துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவு காரணமாக சோஜிலா கணவாய் மூடப்பட்டு, லடாக் பகுதி பல மாதங்களுக்கு நாட்டின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இந்த அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்துப் பருவங்களிலும் தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்கும் நோக்குடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், காஷ்மீர் மற்றும் லடாக் இடையேயான தற்போதைய பயண நேரம் 1.5 மணி நேரத்திலிருந்து வெறும் 15 நிமிடங்களாகக் குறையும். இது உலகிலேயே மிக நீளமான ஒற்றைக் குழாய் இருவழிப் பாதையாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுரங்கப்பாதையின் எஞ்சி யிருந்த கடைசி 2.5 மீட்டர் தூரப் பகுதி நேற்று வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது இதன் மூலம் இமயமலையின் இரு முனைகளும் இணைக்கப்பட்டு, இந்த மாபெரும் உள்கட்டமைப்புத் திட்டம் நிறைவடைவதை நோக்கிய மிக முக்கியமான படி எட்டப்பட்டுள்ளது. காஷ்மீருக்கும் லடாக்கிற்கும் இடையே அனைத்துப் பருவ காலங்களிலும் தடையற்ற போக்குவரத்து இருக்க வேண்டும் என்ற பல தசாப்த கால கனவை நனவாக்கும் வகையில் இந்த மைல்கல் அமைந்துள்ளது.
பயன்பாட்டிற்கு
எப்போது வரும்?
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், “தற்போதைய நிலவரப்படி, சுரங்கப்பாதையின் ஒட்டுமொத்தப் பணிகளில் சுமார் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவாகச் செய்து முடிக்கப்பட்டு, இந்தச் சுரங்கப்பாதை 2028 பிப்ர வரியில் பொதுமக்களின் பயன் பாட்டிற்காகத் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினர்.
இத்திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் போது, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், நாட்டின் பாதுகாப்புப் படையினரின் விரைவான இயக்கத்திற்கும் இது பெரு மளவில் உதவும் என எதிர்பார்க் கப்படுகிறது.
