தி.மு.க.வின் தகைசான்ற தலைவருக்கும், கொள்கை வீரர்களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திராவிடத்தை உயிர் மூச்சாகக் கொண்ட திராவிட அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழா (75 ஆண்டு) கண்ட ஓர் இணையற்ற இயக்கம்.
1916 இல் தொடங்கப் பெற்றது 110 ஆண்டுகளுக்கு முன்னே, சர் பிட்டி தியாகராயர், டாக்டர் நாயர், டாக்டர் நடேசனார் போன்ற திராவிடர் தலைவர்களால் பார்ப்பனரல்லாதார் இயக்கம். (The Non-Brahmin Movement) தந்தை பெரியார் அவர்கள், 1926 இல் காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கம், சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக வெளியேறி, சுயமரியாதை இயக்கம் என்று ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு, பெண்ணடிமை நீங்கிய சமத்துவம், சமதர்ம மூட நம்பிக்கைகளுக்கு எதிரான புதியதோர் பகுத்தறிவுச் சிந்தனைப் பண்ணையாக உருவாக்கினார்.
பழைய நீதிக்கட்சி அரசியலில் சந்தித்த தேர்தல் தோல்வி காரணமாகவும், பதவி அரசியல் உள்ளடிகளாலும், 1937 இல் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் பார்ப்பனர்கள் நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கத்தை 500 அடி ஆழத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தனர்.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம்,
தி.க.; தி.மு.க.வின் அரிமா நடை!
தி.க.; தி.மு.க.வின் அரிமா நடை!
1944 இல் நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து, பண்பாடு, கல்வி மற்றும் சமூகப் புரட்சி கொள்கைகள், சுயமரியாதை இயக்கக் கொள்கை, கோட்பாடுகளை உள்ளடக்கி, சேலத்தில் 1944 இல் திராவிடர் கழக பெயர் மாற்றம் செய்யப்பட்ட மாநாட்டில், ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்றே தந்தை பெரியார் பெயரிட்டு ஒரு புத்தெழுச்சி புதுமுறுக்குடன் சமூக இயக்கம் கண்டார்.
1949 இல் அதன் அரசியல் பிரிவாகி, திராவிடர் கழக இணையான இரட்டைக் குழலாக திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி, பத்தாண்டுகள் – எதிர்க்கட்சியாகப் பணியாற்றி, 1967 இல் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியும் அமைத்தது. ஒரு புதிய அரசியலை, திராவிடர் உரிமைகளை அடிக்கட்டுமானத்தை எழுப்பிய நீதிக்கட்சி, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க கொள்கைகள், திட்டங்களை – தனது அரசியல் இலக்கு ஆக்கிக் கொண்டு, முறையே அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருக்குப் பின், தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில், ‘திராவிட மாடல்’ ஆட்சியாக 5 ஆண்டில், 50 ஆண்டுக்கான சாதனை, சமூக மாற்ற வளர்ச்சி என்ற முந்தைய தலைவர்களின் மாண்பை இணைத்து மேலும் வலுவான கொள்கைச் சாதனைகளைச் செய்த சரித்திரம் இன்றும் மாற்றி எழுதப்பட முடியாத வரலாற்றுப் பெட்டகமாகும்.
தேர்தல் வெற்றி, தோல்வி என்பது அவ்வப்போது வாக்காளர்களின் மனநிலையைப் பொறுத்து ஏற்படும் தீர்ப்பே தவிர, ஆழ்ந்து அடுத்த தலைமுறைப்பற்றிச் சிந்தித்து, அறிவிக்கும் முடிவாக இருப்பதில்லை.
93 ஆண்டுகளில், 83 ஆண்டு அனுபவம்!
தி.மு.க.வும், அதன் அரசியல் எதிரிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தோல்வியும் அதிர்ச்சிக்குரியதுதான் என்றாலும், அதனால், சில ஆரிய அல்லது அவர்களுக்குக் குத்தகைக்குப் போன ஊடகங்கள் வர்ணிப்பதைப்போல திராவிடக் கொள்கைகளே இல்லாமற் போய்விட்டன என்பது அற்ப சந்தோஷமே!
93 ஆண்டுகாலத்தில் 83 ஆண்டு அனுபவத்தில், முதல் தேர்தல் முதல் கடைசியாக நடந்த தேர்தல்வரை பார்த்து, வெற்றி– தோல்வி சரித்திரம் கண்ட ஒரு ஒரு பொது வாழ்க்கைத் தொண்டன் – தந்தை பெரியாரின் மாணவன் – என்றும் தாய்க் கழகம், தன் குஞ்சுகளைத் தூக்கும் பருந்தை எதிர்க்கும் தாய்க்கோழி போன்று களத்தில் நின்று, சில பல நிலைகளை, உரிமையோடும், கொள்கை உறவு நிலையோடும், மலை குலைந்தாலும், மனங்குலையா மாவீரன் தளபதி சகோதரர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் உடன்பிறப்புகளுக்கு நினைவூட்ட வேண்டிய கடமையைச் செய்வது இவ்வறிக்கையின் நோக்கம். ஊன்றி படித்து உணரவேண்டுகிறோம்.
1969 இல், முதலமைச்சர் அண்ணா மறைந்தவுடன், ஆரியம் கொக்கரித்தது.
‘‘இனி தி.மு.க. கலைந்த சீட்டுக் கட்டு – சரிந்த மணல் வீடு – பதவிச் சண்டையால் அக்கழகம் ஒழிந்துவிடும்’’ என்று நினைத்தது.
தந்தை பெரியார் ஒரு மாதம் சென்னையில் தங்கி, அறிக்கை மற்றும் தக்கவர்கள் மூலம் முந்தைய நீதிக்கட்சி நிலைபற்றி முன் உதாரணங்களை எல்லாம் கூறி, கலைஞரை வற்புறுத்தி முதலமைச்சர் பொறுப்பை ஏற்கச் செய்தார்.
அப்போது அவர் தந்த அறிவு (அனுபவ) உரை இரண்டு.
தி.மு.க.வுக்கு தந்தை பெரியார் வலியுறுத்திய அந்தக் ‘‘கட்டுப்பாடு!’’
- ‘‘தி.மு.க. என்பது ஒரு கெட்டியான பூட்டு; அதை எவராலும் அவ்வளவு எளிதில் அழித்துவிடவோ, உடைத்துவிடவோ முடியாது. ஆனால், அந்தப் பூட்டிற்குள் யாராவது கள்ளச்சாவி போட்டுத் திறந்து விடக் கூடாது. அதில் தான் தோழர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!’’
- ‘‘அண்ணா அவர்கள் வகுத்துத் தந்த ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற மூன்று பண்புகளில், மற்ற இரண்டை விடவும் மிகமிக முக்கியமானது ‘கட்டுப்பாடு’ தான்! கடமையும், கண்ணியமும் பலவிதமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடிய தன்மை கொண்டவை. ஆனால், கட்டுப்பாடு என்பது எவருக்கும், எப்போதும், எந்தச் சூழலிலும் மாறாமல் பொருந்த வேண்டிய ஒன்றாகும். இதை ஒருபோதும் மறவாதீர்” என்றார்.
இன்று அதன் தேவை – முன்பைவிட தேர்தலில் தோற்ற ஒரு சூழலில் அதிமுக்கியம் வாய்ந்த ஒன்றாகும். தி.மு.்க.வினர் அனைவரும் தலைமைக்கு, ராணுவக் கட்டுப்பாட்டுடன் அதை நிரூபிக்க வேண்டிய முக்கிய தருணம் இது!
இயக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள், இயக்கத்தின் அடிக்கட்டுமானம் முதல் மேல்தளம் வரை பழுது பார்த்து, வலிவும், பொலிவும் உள்ளதாக ஆக்க இயற்கை அதற்கு வழங்கிய நல் வாய்ப்பு!
நல்ல சமயம் இது!
தி.மு.க. அமைப்பில் செய்யப்படவேண்டிய
சிறு மாற்றங்கள்!
சிறு மாற்றங்கள்!
இதனை நழுவிடக் கூடாது என்று ‘கப்’பென்று பற்றிக்கொண்டு, மளமளவென தேவையான மாற்றங்களை இயக்க அமைப்பிலும், கொள்கைத் திட்ட செயல் முறையிலும் செய்ய தலைமைக்கு முழு அதிகாரம் தர, தொண்டர்கள், தோழர்கள், இயக்கக் காவலர்கள் எழுச்சியோடு ஏந்திப் பிடிக்கவேண்டிய தருணம்.
இளைய தலைமுறை பொறுப்பேற்க வேண்டும் என்ற குரலுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றே கருதுகிறோம்.
தி.மு.க.வின் இளைய தலைமுறையினரை முன்பு எப்போதும் இல்லாத எழுச்சியோடு வழிநடத்த மானமிகு உதயநிதி ஸ்டாலின் இயக்கத்திற்குத் தக்க நேரத்தில் கிடைத்த ஒரு கொள்கை நிதி!
அவரது ஆற்றல், ஆளுமை, பிரச்சார முறை, இயக்கத்தவர்களிடம் காட்டும் அன்பும், பண்பும் கலந்த மரியாதை, கொள்கை லட்சியத்தில் சிறந்தோங்கி, பின்வாங்காது, சமரசமில்லா சண்டமாருதமாய் தலைவர் தளபதிக்குக் கிடைத்த ஒரு பெரும் அசையும் சொத்து.
அதனால்தான் ஆரியம், அரசியல் எதிரிகள் அவரையே குறி வைத்துள்ளனர்!
அதுபோல, கொள்கையாளர்கள், இளையர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நல்ல அனுபவமும், ஆற்றலும் உள்ள, கலைஞரால் கண்டெடுக்கப்பட்ட பலர், இளமை கருத்து, கொள்கை வளமையோடு இருப்பவர்கள் அடையாளம் காணப்படவேண்டும். சிறுபான்மைச் சமுதாயம் பல தலைமுறைகளாக ‘திராவிட இயக்கத்தினையே தங்கள் பாடிவீடாகப் பார்த்துப் பரவச உறவு கொள்ளும், குறிப்பாக இஸ்லா மிய சமூகத்தவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும். மகளிர் அணியை கொள்கை முத்திரையோடு வார்த்தெடுக்க கவிஞர் கனிமொழி போன்றவர்களையும், புதிய ஆற்றல் பொதிந்துள்ளவர்களையும் இணைத்து, கம்பீரமாக செயல்பட வைப்பது காலத்தின் கட்டாயம். ஓர் எழுச்சிப் பாசறையாக உள்ள இவர்களைப் போன்றவர்கள் சில உதாரணம்.
இயக்க மூத்தவர்கள் – மாவட்ட இயக்கத்தைப் பல ஆண்டுகள் நெருக்கடி காலம் தொடங்கி, இன்றுவரை கட்டி வந்த அனைவரையும்கூட அரவணைத்து, கலைஞர் அவர்கள் அடிக்கடி கூறும் ‘தென்னை மரத்து மட்டைகள்’ உவமையை மனதிற்கொண்டு செயல்பட்டால், புத்தொளி, புத்துணர்ச்சிக்கு, புது முறுக்கு – ஓர் இராணுவக் கோட்டம்போல், களம் காண ஆயத்தமாகலாம்.
தோல்வி – வெற்றி என்பது தேர்தல் சக்கரத்தில் சுழன்று வருபவை.
எழுக, தி.மு.க. வல்லமை பெறட்டும்!
கொள்கை சறுக்கலற்ற தொண்டறத் தோழர்களே, இதன்மூல பலம். அவர்களே இரத்த நாளங்கள், நாடி நரம்புகள் என்பதால், அவர்களது கருத்துக்கு என்றும் மதிப்பளிப்பவர், அவர்களது அருமை உணர்ந்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின் என்பது கல்லின்மேல் எழுத்து! அவர்தம் சாதனைகளும், உழைப்பும் வரலாறு மறக்க முடியாதவை!
அவரது ஒப்பிலா உழைப்பை எத்தனை சோதனைகள் வந்தாலும், பறிக்க முடியாது.
விழுவது முக்கியமல்ல, எவ்வளவுக்கெவ்வளவு எழுவது என்பதே முக்கியம்.
எழுக, தி.மு.க. வல்லமை பெறட்டும்!
திராவிடம் வெல்லும்; வரலாறு என்றும் அதைச் சொல்லும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.6.2026
