திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்
படப்பிடிப்பு அரங்குகளுக்குள் இருந்து தமிழ்த் திரையுலகத்தை கிராமப்புற வெளிக்கு அழைத்து வந்தவர் என்று எப்போதும் புகழப்படுபவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அரங்குகளுக்குள் மட்டுமல்ல… கற்பனைக் கதாபாத்திரங்களிலிருந்து – உழைக்கும் மக்கள், ஏழை எளியவர்கள், கிராமத்து மக்களின் உண்மையான வாழ்க்கையைப் படம்பிடித்து அவர் உருவாக்கிய பாணி தான், படிப்படியாக எல்லாப் பகுதி மக்களின் வாழ்க்கையையும் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்யப் பலருக்கும் தூண்டுகோலாயிற்று.
அவருடைய “வேதம் புதிது” என்ற திரைப்படம் இன்றும், என்றும் நம் நெஞ்சங்களிலிருந்து நீங்காத திரைப்படம். அதற்கொரு சிக்கல் பார்ப்பனர்களால் எழுந்தபோது, திராவிடர் கழகம் தான் முன்னின்று குரல் கொடுத்து, அதனை முறியடித்தது. அதற்கு நன்றி தெரிவித்த பண்பாளர்.
ஜாதி வெறிக்கு எதிராகவும், பகுத்தறிவுக் கருத்துகளை முன்வைத்தும் அவர் இயக்கிய படங்கள் உணர்வுப் பூர்வமானவை. பெண் சிசுக் கொலை அதிகம் நடந்துகொண்டிருந்த உசிலம்பட்டிப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு அவர் உருவாக்கிய ‘கருத்தம்மா’ திரைப்படம் பெரும் விழிப்புணர்வை மக்களுக்குக் கொண்டு சேர்த்தது.
கவியுலகில் ‘புரட்சிக் கவிஞர் பரம்பரை’ என்று ஒன்று உருவானதைப் போல, நம்மால் ‘புரட்சி இயக்குநர்’ என்று பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட ‘பாரதிராஜா பரம்பரை’ ஒன்று திரையுலகில் உருவாகி, இன்று வரை ஆண்டு கொண்டிருக்கிறது.
திரைப்படங்களைத் தாண்டி, ஈழத் தமிழர் உரிமைக்காகவும், காவிரி நீர் பிரச்சினையின் போதும் தமிழின உணர்வோடு போராட்டக் களத்திற்கு வந்தவர். நம் மீது எப்போதும் மதிப்புக் கொண்டு பழகக் கூடியவர். நம் அழைப்பை ஏற்று பெரியார் திடலில் நடந்த புத்தகச் சங்கமத்தில் பங்கேற்று உரையாற்றியவர். தமிழ்த் திரையுலகை எளியவர்கள் கையில் கொண்டுவந்து சேர்த்தது – அவர் வாழ்க்கை எழுதிய தனித்த வரலாறு. அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும், கலை உலகிற்கும் பேரிழப்பு!
இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என்று அத் துறையில் தரமான படைப்புகள் உருவாகக் காரணமானவர்; பலரை உருவாக்கி வளர்த்தவர்; பலருக்கு ஊக்கமாகத் திகழ்ந்தவர். அவருடைய மகனின் இளம் வயது மரணம் அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அதுவே அவரது மறைவை விரைவுபடுத்தியது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், கலைக் குடும்பத்தினருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.06.2026
