*இந்தியாவின் அரசியலே ஆரியர் – திராவிடர் போராட்டம்தான்
* அந்தப் போராட்டத்தில் முக்கிய தளபதியாக இருந்த கலைஞர்தான்
பெரியார் நினைவு சமத்துவபுரங்களைக் கொண்டு வந்தார்!
ஜாதி ஒழிப்பிற்கான இந்த முன்னெடுப்பு வேறு மாநிலத்தில் உண்டா?
மேலூர், ஜூன் 9, இந்தி்யாவில் அரசியல் என்பது இரண்டாம் பட்சம்தான். நடப்பது ஆரியர் திராவிடர் போராட்டம்தான். ஒருகாலத்தில் இந்தப் போராட்டத்தில் முக்கிய தளபதியாக இருந்து ஜாதி ஒழிப்பில் மகத்தான சாதனைகளைச் செய்தவர் நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்” என்றும், ”தமிழ்நாட்டில் உள்ளது போன்று, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் இந்தியாவில் வேறு எங்காவது இருக்கிறதா?” என்றும், ”கலைஞர் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை முதன் முதலில் உருவாக்கினார்” என்றும், ”அவர்தான் தான் வகித்துவந்த முதலமைச்சர் பதவியை துச்சமென மதித்து, தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை வழங்கியவர்” என்றும், அவரது பல்வேறு முத்திரை பதித்த சாதனைகளைப் பட்டியலிட்டு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நான்கு மாநிலங்களில் மொத்தம் 103 கூட்டங்கள் நடைபெறுவதற்கு ஆணையிட்டுவிட்டு தானும் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். முதல் நாள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பேசிய அவர், இரண்டாம் நாளான, 7.6.2026, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மதுரை மாவட்டம் மேலூரில் அமைந்துள்ள சுந்தரி டவர் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103 ஆம் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசினார். வழக்குரைஞர் மகேந்திரன் அவர்களின் நினைவாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. கழகக் கொடிகள் ஆங்காங்கே பட்டொளி வீசிப் பறந்தன. கழகத் தலைவரை வரவேற்று பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கழகத் தலைவர் நிகழ்விடத்துக்கு வருகை தந்தபோது எழுச்சிகரமான வரவேற் பினை மாவட்டத் தோழர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
மதுரை புறநகர் மாவட்ட சார்பில், திராவிடர் எழுச்சி நாள் கொண்டாட்டமாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மேலூர் நகரத் தலைவர் லெ.வீரமணி தலைமையேற்க, மேலூர் நகரச் செயலாள க.பெரியசாமி அனைவரையும் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணச்சேகரன் மேடைப் பணிகளை நெறிப்படுத்தியதோடு, முன்னிலை ஏற்று கழக வெளியீடுகளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். தென்மாவட்ட பரப்புரைக் குழு தலைவர் தே.எடிசன் ராசா, தலைமை செயற்குழு உறுப்பினர் மதுரை வே.செல்வம், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் த,ம,எரிமலை, செயலாளர் பா.முத்துக்கருப்பன், பொதுக்குழு உறுப்பினர் மன்னர் மன்னன், மாவட்ட மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி, தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ஒத்தக்கடை முருகன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். மதுரை மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், மேலூர் நகர தி.மு.க. செயலாளர் முகமது யாசின், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை,திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரை யாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் சிறப்புரை
அவர் தமது உரையின்,வழக்குரைஞர் மகேந்திரன் நினைவாக அமைக்கப் பட்டிருந்த மேடையை சுட்டிக்காட்டி, அவர் சிறந்த செயல்வீரராகத் திகழ்ந்தார் என்று அவரது சிறப்பை நினைவூட்டினார். எதிரே அமர்ந்திருந்த மக்களில் சிலரைப் பார்த்துவிட்டு அடையாளம் கண்டுகொண்டு, “கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் இங்கே கூடியிருக்கின்றனர்” என்றும் வாழ்த்தினார். அடுத்து, “இந்த மேடையில் இரண்டு வீரமணிகள் இருக்கின்றனர்” என்று பொடி வைத்துப் பேசினார். அதாவது, தன்னையும், மேலூர் நகரத் தலைவர் லெ.வீரமணி அவர்களையும் குறிப்பிட்டுச் சொல்லி, தொடக்கத்திலேயே வெடிச்சிரிப்பை வரவழைத்து விட்டார். தொடர்ந்து, “கலைஞர் அவர்களின் சாதனைகள் என்றாலே திராவிடர் இயக்கத்தின் முத்திரை பதித்த சாதனைகள்” என்றும் சிறப்பாக பாராட்டினார். அந்த தனி முத்திரை என்பது என்னவென்று விளக்குவதற்காக, ”அரசியல் என்பது இரண்டாவதுதான். இந்தியாவில் இரண்டு தத்துவங்களுக்கு இடையில்தான் போராட்டம். ஒருகாலத்தில் அந்த ஆரிய திராவிடர் போராட்டத்தில் முக்கிய தளபதியாக இருந்து போராடித்தான், இந்தி யாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களைக் கொண்டு வந்தார். இது ஜாதி ஒழிப்பில் மகத்தான சாதனை அல்லவா?” என்று விளக்கியதும் மக்கள் தம்மையும் அறியாத உணர்வால் உந்தப்பட்டு கைதட்டினர்.
ஆசிரியர் அல்லவா? ஆகவே இன்னமும் அதை தெளிவாக விளக்குவ தற்காக, “பள்ளிக்கூடங்கள் கட்டுவதை அனைவரும் வரவேற்பார்கள். சாலைகள் அமைப்பதை அனைவரும் வரவேற்பார்கள். ஆனால், ஜாதியில்; சனாதனத்தில் கை வைத்துவிட்டால் ஆதரிக்க மாட்டார்கள். அதையும் தாண்டித்தான் கலைஞர் பெண்களுக்கு சொத்துரிமையை சட்டமாக்கினார்” என்று ஒரு இடைவெளிவிட்டு, “திராவிட மாடல் ஆட்சி என்பது பதவிக்காக வந்தது அல்ல, நம் தலைமுறையின் விடியலுக்காக” என்றதும், ஆழமாகப் புரிந்துகொண்ட மக்கள் பலமாகக் கைதட்டினர். அதையொட்டியே பேசிய ஆசிரியர், “பெண்களுக்கு சொத் துரிமை வழங்க அன்றைக்கு ஒன்றிய அரசின் சட்ட அமைச்சராக இருந்த பாபாசாகேப் அம்பேத்கர் இந்து திருத்த மசோதா கொண்டு வந்து பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பரிகாரம் காண முயன்றபோது, அன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்த ஸநாதனிகள் அதைத் தடுத்துவிட்டார்கள். வெறுத்துப் போன அம்பேத்கர் தன்னுடைய பதவியையே தூக்கி எறிந்துவிட்டு கொள்கை வீரராக வெளியேறினார்” என்றும், அதற்காக காஞ்சி மடத்தலைவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரி தன்னுடைய நண்பரான அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மூலமாக என்னென்ன செய்தார் என்பதை, தாத்தாச்சாரியார் எழுதிய, இந்து மதம் எங்கே போகிறது புத்தகத்திலிருந்தே படித்துக்காட்டி, பெண்களுக்கு கலைஞர் கொண்டு வந்தது எவ்வளவு பெரிய காரியம் என்பதை ஆழமாக புரியவைத்தார்.
தொடர்ந்து இடைவெளியே விடாமல், “அம்பேத்கரையே தோற்கடித்துவிட்டோம் என்று இறுமாந்திருந்த ஸநாதனிகளை வென்று அம்பேத்கர் முயற்சியை வெல்ல வைத்ததும் திராவிடர் இயக்கம்தான்; கலைஞர்தான்” என்று பிரகடனம் போல் அறிவித்ததும் மக்கள் மிரட்சி அடைந்துவிட்டனர். தொடர்ந்து, கலைஞர் செய்த பல்வேறு முத்திரை பதித்த சாதனைகளைப் பற்றி பேசிவிட்டு, குறிப்பிட்ட சிலரை புண்படுத்துவதற்காக தொடங்கப்பட்டதல்ல திராவிடர் இயக்கம். உண்மையை நிலைநிறுத்துவதற்காக” என்று குறிப்பிட்டு தமது உரையை நிறைவு செய்தார். இறுதியாக மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர் பெ.பாக்கியலட்சுமி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மகளிரணிச் செயலாளர் இரா.கலைச்செல்வி, மாணவர் கழகத் தோழர்கள் அறிவுச்செல்வி, ச.அறிவுப்பாண்டி உள்ளிட்ட, கழக மாவட்ட கிளைக்கழகப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை மக்கள் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு கழகத் தலைவர் மற்றும் முன்னிலை வகித்து உரையாற்றியோர் உரைகளைக் கேட்டு பயன் பெற்றனர்.
