சண்டிகர், ஜூன் 9 பாஜக ஆளும் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தின் ஹான்சி தாலுகா விலுள்ள சோர்கி கிராமத்தில், மோட்டார் திருடியதாகக் குற்றம்சாட்டி (போலிக் குற்றச் சாட்டு என்று கூறப்படுகிறது) தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவரின் கால்களைக் கட்டி, கிணற்றுக்குள் தலைகீழாகத் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப் பட்ட இளைஞரின் குடும்பத்தி னரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், சிஅய்டியு மாநில பொதுச்செயலாளருமான ஜெய்பகவான், சிபிஎம் மூத்த தலைவர் சத்வீர் சிங், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சவிதா ஆகியோர் சோர்கி கிராமத்திற்குச் சென்றனர். குடும்பத்தினருடன் உரை யாற்றிய பின்பு இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட இளை ஞருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் சிபிஎம் தூதுக்குழு அரியானா பாஜக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சகுந்தலா ஜாகர், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் ரோஹ்தாஸ் ராஜ்லி, சிஅய்டியு தலைவர் மனோஜ் சோனி ஆகியோர் ஹான்சி அரசு சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப் பட்ட இளைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
