செய்திச் சிதறல்கள்

3 Min Read

.பி.யில் அவலம்:

நோய்வாய்ப்பட்ட சிறுவனை ஸ்ட்ரெச்சரில் வைத்து சாலையில் தள்ளிச் சென்ற பெற்றோர்

இந்தூர், ஜூன் 8 மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக அங்குள்ள எம்.ஒய். அரசு மருத்துவமனையில் ஆதர்ஷ் என்ற 12 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மேல் சிகிச்சைக்காக சிறுவனை மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் சிறுவனை அழைத்துச் செல்ல பெற்றோர் ஆம்புலன்ஸ் வாகனத்தை தேடியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் ஏதும் கிடைக்கவில்லை.

இதனால் அவர்கள் தங்கள் நோய்வாய்ப்பட்ட மகனை 45 டிகிரி கொளுத்தும் வெயிலில் 1 கிலோமீட்டர் தூரம் ஸ்டிரெச்சர் ஒன்றில் வைத்து சாலையில் தள்ளிக்கொண்டே மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கடும் வெயிலில் அந்த சிறுவனின் தந்தை ஸ்டிரெச்சரை சாலையில் இழுத்துச் சென்றார்.

பின்னால் சென்ற சிறுவனின் தாய், வெயிலில் இருந்து மகனை பாதுகாக்க தனது சேலையின் நுனியை தண்ணீரில் நனைத்து சிறுவனின் முகத்தில் போர்த்தியவாறு நடந்து சென்றார். அவர்களுடன் எந்த மருத்துவ உதவியாளரும் வரவில்லை.

ஒருவழியாக சிறுவனை மாற்று மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்த மருத்துவர்களிடம் காட்டியபோது அவர்கள் சிறுவனை பரிசோதித்துவிட்டு மீண்டும் எம்.ஒய். மருத்துவமனைக்கே கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இந்த முறையும் வாகனம் கிடைக்காமல் அவர்கள் சிறுவனை மீண்டும் ஸ்டிரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டே எம்.ஒய். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த தலைவர்களின் கண்ணியம் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் சிதைக்கப்படுகிறது!

மு.வீரபாண்டியன் கண்டனம்

சென்னை, ஜூன் 8- மறைந்த தலைவர்களின் கண்ணியம் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் சிதைக்கப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

நாட்டின் மதிப்பு மிக்க அரசியல் தலைவராக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் கண்ணியத்தை சிதைத்து, அவமதிக்கும் முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவரது உருவப் படத்தை மிக மோசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த அநாகரீகமான பதிவைக் கண்டவர்கள் எவரும் கண்டனம் செய்யாது இருக்க முடியாது. கலைஞரின் கண்ணியத்தை சிதைக்கும் அற்பத்தனமான பதிவுக்கு எதிர்வினையாக, தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் விஜய் அநாகரிகமாக சித்தரிக்கும் பதிவுகளும் சமூக ஊடகங்களில் உலாவி வருகின்றன.அறிவியல் தொழில்நுட்பத்தின் நிகழ்கால உச்சமாக வளர்ந்திருப்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும்.

இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை தடுப்பது எப்படி? என்ற வினாவிற்கு விடை தேடி, உலக நாடுகளும், அறிஞர்களும் விவாதித்து வருகின்றனர். இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை, சமூகம் மதித்து போற்றி வரும் அரசியல் தலைவரான, எழுத்தும் பேச்சும் ஒரு சேர கைவரப்பெற்று திகழ்ந்தவரான, நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களால் சிறந்த ராஜ்யவாதி என ஏற்றுக் கொள்ளப்பட்டவரான, சமூகநீதி ஜனநாயக நெறியில் நின்று அரசு நிர்வாகத்தை முன்னெடுத்த திறன் மிக்க அரசுத் தலைவராக வாழ்ந்தவருமான கலைஞர் போன்ற போற்றுதலுக்குரிய மனிதர்களையும், உயர் பொறுப்பில் உள்ளோரை இழிவுபடுத்துவது அறிவுடையோர் செய்யும் செயலாகாது.

இது போன்ற அநாகரீகமான குற்றங்கள் நேரும் போது, சமூகம் ஒட்டுமொத்தமாக இணைந்து கண்டிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பிறரை இழிவு படுத்தும், தரம் தாழ்ந்தச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *