‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

10 Min Read

‘விடுதலை’ அடித்திருக்கிற எதிர்நீச்சல் என்பது சாதனைகளை விட அதிகமானது!
‘விடுதலை’ வாழ்ந்தால் எவரே வீழ்வர்!
‘விடுதலை’ வீழ்ந்தால் எவரே வாழ்வர்!
‘விடுதலை’யின் ஆதரவாளர்களாக இருக்கிறவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்!

சென்னை, ஜூன் 8 ‘‘‘விடுதலை’ அடித்திருக்கிற எதிர்நீச்சல் என்பது சாதனைகளை விட அதிகமானது. எனவேதான், ‘‘விடுதலை வாழ்ந்தால் எவரே வீழ்வர்! ‘விடுதலை’ வீழ்ந்தால் எவரே வாழ்வர்!’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழா!

கடந்த 1.6.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற ‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழா – சுயமரியாதைச் சுடரொளிகள் குணசீலன் – தங்கமணி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில்,  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  தலைமை வகித்து  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

முதலமைச்சர் கலைஞரின்
உருக்கமான உரை!

அந்த விழா சிறப்பாக நடந்தது.  அவ்விழாவில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மிக உருக்கமாகப் பேசினார். ‘‘நான் முதலமைச்சராக வேண்டும் என்ற அய்யா அவர்களின் விருப்பத்தை, வீரமணிமூலம் சொல்லி அனுப்பி, கட்டாயப்படுத்தினார்கள். அவர் இட்ட கட்டளையினால்தான், நான் இந்தப் பணியை செய்கிறேன்’’ என்று, அந்த வரலாறுகளையெல்லாம் எடுத்துச் சொன்னார்.

அதற்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது. ‘விடு தலை’யில் கஷ்டப்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு; மகிழ்ச்சியான, வேடிக்கையான நிகழ்ச்சிகளும், அய்யா  ரசித்த நிகழ்ச்சிகளும் உண்டு. ‘விடுதலை’யினுடைய சிக்கனத்துக்காக உங்களுக்குச் இந்த நிகழ்வைச் சொல்கிறேன்.

‘விடுதலை’க்கு
புதிய அச்சு இயந்திரம்!

ஜெர்மன் இன்ஜினியர், இங்கேயே ஒரு வாரம் தங்கி, மெஷினை பூட்டிக் கொடுத்தவுடன், அச்சு இயந்திரம் தொடக்க விழாவிற்காக மெஷினை ஆன் செய்வதற்கு ஏற்பாடாகிவிட்டது. விழாவில், முதலமைச்சர் கலைஞரை, ‘‘மெஷினை ஆன் செய்யுங்கள்’’ என்றார் அய்யா. ‘‘இல்லீங்க, நீங்கள் தொடங்கி வையுங்கள்’’ என்று முதலமைச்சர் கலைஞர் சொன்னார்.  ‘கடகடவென்று’ பேப்பர் அச்சானது. முதல் பேப்பரை எடுத்து, அய்யாவிடம் கொடுத்தோம்.  அழகாக இருந்தது.

நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், உள் பகுதியில் திரை கட்டி, 30, 40 பேருக்கு தேநீர்  விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். இந்த விஷயத்தை அய்யாவிடம் சொல்லவில்லை; தெரியாது அவருக்கு. அய்யாவை, ‘வீல் சேரில்’ அழைத்து வந்தோம்.  முதலமைச்சர் கலைஞர், அமைச்சர்கள்,  சர்வீஸ் கமிஷனின் பணி யாற்றக் கூடிய அதிகாரிகள் எல்லோரையும் உள்ளே போகச் சொன்னோம். மற்றவர்கள் எல்லாம் திரைக்கு வெளியே அமர்ந்திருந்தார்கள்.

டீ பார்ட்டி என்றால், பெரிய பார்ட்டி இல்லை. ஒரு சுவீட், காரம், டீ, காபி, தண்ணீர் அவ்வளவுதான்.

ஒரு நாற்காலியை காலியாக வைத்து, அந்த நாற்காலியில், அய்யாவை அமர வைத்தோம்.

அய்யா அவர்கள், இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் திரும்பிப் பார்த்துவிட்டு, ‘‘ம்,  என்ன?’’ என்று கேட்டார்.

‘‘தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கேன்’’ என்று சொன்னேன்.

முதலமைச்சருடன் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள், ‘மெஷின் மிகச் சிறப்பாக இருக்கிறது’ என்று. மற்றவர்களை கவனிப்பதற்காக நான், அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருந்தேன்.

அய்யா பேசும்போது, ‘‘நான் இதுவரையில், என் வாழ்நாளில் எத்தனையோ பத்திரிகை நடத்தி இருக்கி றேன். ஒரு பத்திரிகைக்குக் கூட வெளிநாட்டில் இருந்து மெஷினோ மற்றதோ வாங்கியது இல்லை. ஒரு 2000, 3000 ரூபாய்க்கு ஏலம் எடுப்பேன். பழைய மெஷினை எடுத்து, அதை மறுபடியும் ரீ–கண்டிஷன் செய்துகொள்வேன்’’ என்றார்.

அதனால்தான்,  ‘விடுதலை’  அலுவலக வாசலில், உள்ளே நுழையும்போதே சத்தம் கேட்கும். அவ்வளவு சத்தம் ‘தடதட’ ‘தடதடான்னு’ சத்தத்துடன் இயங்கும். அதனால்தான், எவ்வளவு சத்தம் வந்தாலும் காதில் கேட்டுக் கேட்டு எங்களுக்குப் பழகிப் போயிற்று.

புதிய மெஷினைப்பற்றி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சிறப்பாகச் சொல்லிவிட்டு, ‘‘எங்கள் பத்திரிகை அலுவலகத்திற்கும் இதுபோன்ற மெஷின் வாங்கவேண்டும்’’ என்றார்.

‘நான், யாருக்கும் கடனும் கொடுக்கமாட்டேன்; கடனும் நான் வாங்கமாட்டேன்’ – தந்தை பெரியார்!

அப்போது அய்யா அவர்கள்,  ‘‘ஒரு முக்கிய மான நண்பர் ஒருவர் வந்தார்; அவருடைய வார்த்தையைத் தட்ட முடியவில்லை. இவங்க எல்லோரும் என்னிடம் கேட்கவில்லை.  இந்த அம்மாவும் (மணியம்மையார்) அவங்களுக்குச் சிபாரிசு. ‘பரவாயில்லை, வாங்கிக் கொடுக்கலாம்’’ என்று. நான் ஒரு லட்ச ரூபாயை FD-யில் போட்டு வைத்திருந்தேன். இந்த வட்டியைக் கணக்குப் பார்த்தேன். மாதா மாதம் இவ்வளவு ரூபாய் வட்டியாகக் கட்டவேண்டி இருக்குமே என்று நினைத்து, அதை எடுத்துக் கொடுத்துவிடலாம் என்று நினைத்தேன். நான், யாருக்கும் கட னும் கொடுக்கமாட்டேன்; கடனும் நான் வாங்க மாட்டேன்.

‘‘அழகு என்றால்,
செலவு’’ என்று  அர்த்தம்!’’

இன்னும் என்னால் சமாதானம் ஆகிக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் ‘ஆசிரியர்’ பொறுப்பில் விட்டுவிட்டோம். நல்லா இருக்கு; முதலமைச்சர், ரொம்ப அழகாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார். ‘‘அழகு என்றால், செலவு’’ என்று  அர்த்தம்’’ என்று சொல்லிவிட்டு, கடைசியாக ஒன்றைச் சொன்னார், ‘‘என் வாழ்நாளில் இதுவரையில், நான் யாருக்கும் டீ பார்ட்டி கொடுத்ததே கிடையாது’’ என்றார்.

அங்கே அமர்ந்திருந்த அமைச்சர்களுக்கு எல்லாம் ஒரு மாதிரி சங்கடமாக ஆகிவிட்டது.

‘‘இவ்வளவு செலவு செய்துவிட்டு, இதற்கு மேல டீ பார்ட்டி வேற செலவு.  நான் இங்கே வந்து பார்த்தேன்,  ஆசிரியர் அவர் இஷ்டத்துக்குப் பண்ணிட்டாரு, நான்தான் அவருக்கு உரிமை கொடுத்துவிட்டேனே; அதனால், அவர் இஷ்டத்துக்கு பண்ணிட்டாரு. சரி, அப்புறம் எனக்கு நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்; தலைக்கு மேல போயிடுச்சு,  எவ்வளவு போனால் என்ன?’’ என்று சொன்னார்.

முதலமைச்சர் கலைஞர் என் பக்கத்தில் திரும்பி, ‘‘ஏன்யா, எங்களுக்கு டீ பார்ட்டி கொடுத்துவிட்டு, அய்யா எப்படிச் சொல்கிறார் பாருய்யா’’ என்று  வேடிக்கையாகச் சொன்னார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். அய்யா அவர்கள் திருச்சிக்கு வேனில் போகிறார். அப்போது எனக்குக் கார் கிடையாது. அடையாறு வீட்டிற்கு அருகே இரவு 11 மணியளவில் ரோட்டில் இறக்கிவிட்டார்.

நான் அய்யாவைப் பார்த்து, ‘‘வருகிறேன், அய்யா’’ என்று சொன்னேன். அய்யா மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்.

ரகசியம் தெரியுமா உங்களுக்கு?

அப்போது அம்மா அவர்கள் அய்யாவைப் பார்த்து, ‘‘உங்கள் ஆசிரியரைப்பற்றி சொன்னீங்களே, ரொம்ப தாராளமா டீ பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து, பெரிய அளவில் செலவு செய்தார் என்று சொன்னீங்களே, அதன் ரகசியம் தெரியுமா உங்களுக்கு?’’ என்றார்.

‘‘என்ன?’’ என்றார் அய்யா.

‘‘முதல் நாள், வழக்குரைஞர் நண்பர் குழந்தைக்குப் பெயர் சூட்டுகிற விழா நடைபெற்றது. அதற்காக ஸ்வீட், காரம் எல்லாம் மிச்சமானது. அதை எடுத்து வைத்துதான், டீ பார்ட்டி வைத்திருக்கிறார் ஆசிரியர்’’ என்றார் அம்மா!

‘‘ஓ, அப்படியா! சரியாகத்தான் செய்திருக்கிறார்; இது  எனக்குத் தெரியாமல் போயிற்றே’’ என்றார் அய்யா.

ஆகவே, ‘விடுதலை’ வாழ்க்கையிலேயே இந்த டீ பார்ட்டி கொடுத்த சம்பவத்தை மறக்கவே முடியாது.

அய்யாவின் செல்லப் பிள்ளை
அன்பில் தர்மலிங்கம்!

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அன்பில் தர்மலிங்கம் அவர்கள் அய்யாவுக்குச் செல்லப் பிள்ளை மாதிரி.  அய்யா அவர்கள் காலையில் திருச்சிக்குப் போனவுடன், அன்பில் தர்மலிங்கம் அய்யாவைச்  சந்திக்கிறார்.

அப்போது, ‘‘அய்யா, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு  என்னிடம் பேசினார். ‘அன்பில் உனக்குத் தெரியுமா? பெரியார், எங்களுக்கெல்லாம் டீ பார்ட்டி கொடுத்தார்’ என்றவுடன், அப்படியா? என்றேன்.  ‘ஆமா! டீ பார்ட்டி கொடுத்தது மட்டுமல்ல, டீ பார்ட்டிக்கு முன்பு  எங்களுக்கு எவ்வளவு கொடுத்தார் தெரியுமா? இவ்வளவு செலவாயிடுச்சுன்னு சொன்னார்’ என்று கூறினார் என்று அய்யாவிடம் தெரிவித்தார்.

எப்பொழுதுமே உண்மைகளை மறைக்கத் தெரியாது அய்யாவுக்கு!

அய்யாவுக்கு எப்பொழுதுமே உண்மைகளை மறைக்கத் தெரியாது.  ‘‘அன்பில், உங்களுக்கு ஒன்று தெரியுமா? அது கூட ஆசிரியர் செலவு பண்ணல; அவன் செலவு பண்ணல; ஏற்கெனவே மிச்சம் மீதி ஆனதை எடுத்துத்தான்  டீ பார்ட்டி கொடுத்தாரு. அதை நீங்கள் சொல்லிடாதீங்க, சொல்லிடாதீங்க’’ என்று வேடிக்கையாகச் சொன்னார். ஆகவே, இப்படி எல்லாம் சிக்கனம் செய்து ‘விடுதலை’ வந்தது. ஒவ்வொரு வகை யிலும் சிக்கனம் சிறந்தது என்று அய்யா சொல்வார்.

பேப்பர் ரீலைக் கட் செய்யும்போது, எங்களைக் கூப்பிடுவார்; ‘‘இன்றைக்குக் கொஞ்சம் ‘விடுதலை’ முகப்புகள் அழகாக இருக்கிறது’’ என்பார். அய்யாவுக்கு அச்சுத் தொழில் முழுவதும் தெரியும்.  இன்றைக்கு வெளிவந்த ‘விடுதலை’யில் அய்யா திருத்துவதுபோன்ற படம் வெளியிட்டிருக்கிறோம்.

அச்சுத் தொழில் தெரிந்தவர்களுக்குத் தெரியும். ‘கேஃலி’ என்று பெயர். அவர் எழுதியதை அவரே திருத்துவார். அவரே கைப்பட எழுதுவார்; எழுதி, அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். ஆகவே, அவருக்கு எல்லாவிதமான நுணுக்கங்களும் தெரியும். முதன் முதலில், நான் பொறுப்புக்கு வந்த உடனே, என்னை அழைத்து, ‘‘ஏம்பா, தலைப்பில் இவ்வளவு பெரிய எழுத்தில் போட வேண்டுமா?இதற்குப் பதிலாக இன்னொரு நியூஸ் போடலாம் அல்லவா!  நம் ஆட்கள் சின்ன எழுத்தாக இருந்தாலும் படிக்கத் தவற மாட்டாங்க என்று சொல்லிவிட்டு, ஃபோர்மேனைக் கூப்பிடு என்று சொல்வார்.

ஃபோர்மேன் வந்து, ‘‘இந்தக் கெட்டப்பில் போட்டால் தான், அழகாக இருக்கும்’’ அய்யா என்று சொல்வார்.

‘‘அழகல்லாம் வேண்டாம்யா, கருத்துதான் நமக்குப் போய்ச் சேரணும்’’ என்பார் அய்யா.

இன்றைக்கு ‘விடுதலை’  உலகளாவிய அளவிற்குச் சென்றிருக்கிறது!

அவ்வளவு பெரிய போராட்டம்,  பல வளர்ச்சிகளுக்கு இடையில் வந்த சூழ்நிலையில்தான், இன்றைக்கு ‘விடுதலை’  உலகளாவிய அளவிற்குச் சென்றிருக்கிறது.  சில பேர் நினைக்கலாம், ‘சர்க்குலேஷன் குறைவாக’ இருக்கிறதே என்று. ஒவ்வொரு தோழரும் வாங்குவது குறைவு. ஆனால், PDF முறையில், ஒவ்வொரு தோழரும் 200 பேருக்கு, 300 பேருக்கு என்று நாள்தோறும் அனுப்புகிறார்கள். அந்த வகையில், ஏராளமான எண்ணிக்கையில் போய்ச் சேருகிறது.

‘விடுதலை’ ஓர் அற்புதமான அறிவுப் பாசறை. அறிவுத் தொழிற்சாலை!

ஆகவேதான், ‘விடுதலை’ வெளிவருவது விடு தலைக்காக அல்ல; நம்முடைய கெடுதலையைப்  போக்குவது விடுதலைதான். ‘விடுதலை’யினுடைய கருத்துகள் மிக ஆழமான கருத்துகள். ‘விடுதலை’ ஓர் அற்புதமான அறிவுப் பாசறை. அறிவுத் தொழிற்சாலை. அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அதனுடைய தத்துவம்.

ஆகவே ‘விடுதலை’ வளரும்; வளர்க்க வேண்டும். நிச்சயமாக, அதனுடைய நூற்றாண்டில் எல்லோர் கைகளிலும் ‘விடுதலை’ இருக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவோம்.

இப்பொழுது ஏற்பட்டிருக்கிற மாறுதல்கள்  எப்படிப்பட்டவை என்பதைப் பற்றியெல்லாம் சொன்னார் சகோதரர் திருமாவேலன் அவர்கள். அதற்கு என்ன காரணம்? ஊடகங்கள்தான் அதற்கு ஒரு பெரிய காரணம்.

எலியை, மலையாக்குகிறார்கள்; சிங்கம் போல காட்டுகிறார்கள். ஆகவே, மிகப்பெரிய ஒரு மாறுதல் வர வேண்டும் என்றால்,  உண்மையைச் சொல்லக்கூடிய ஏற்பாடு வந்திருக்கிறது. அண்மைக் காலத்தில், வருத்தத்தோடு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், முதலில், தவறான தகவல்கள் திட்டமிட்டு விஞ்ஞான பூர்வமாகப் பரப்பப்படுகிறது.  அதனுடைய விளைவு மிகவும் ஆபத்தானதாகும்.

திட்டமிட்டே திரிபுவாதத்தோடு, தவறான தகவலைத் தெரிந்தே பரப்புகிறார்கள்!

முன்பெல்லாம் ஒரு தவறான செய்தியைப் பத்திரிகையில் பிரசுரித்துவிட்டால், ‘‘தவறுக்கு வருந்துகிறோம்’’ என்று போடுவார்கள். ஆனால், இப்பொழுது அப்படி கிடையாது. இரண்டு வார்த்தை யைப் போடுகிறார்கள். Misinformation என்று ஒரு வார்த்தை, தகவல் கொடுக்கும்போது; இன்னொரு வார்த்தை என்னவென்றால், Disinformation இந்த இரண்டு வார்த்தைக்கும் என்ன வேறுபாடு என்றால், Misinformationஎன்பது, தவறான தகவல், தவறாக எதிர்பாராமல் வருவது. ஆனால், Disinformation என்பது Delepreterly, wantonly திட்டமிட்டே திரிபுவாதத்தோடு, தவறான தகவலைத் தெரிந்தே பரப்புவது.

இப்பொழுது இருக்கின்ற அறிவியல் கருவிகளால், அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய மறுபக்க விளைவுகளில் அவ்வப்போது நாம் கண்டிக்க வேண்டிய செய்திகள் இருக்கின்றன. ஆகவேதான், ‘விடுதலை’ போன்ற ஏடுகளுக்குச் சிறப்பு இருக்கிறது. நிறைய பதிலுரைகளை எழுத வேண்டி இருக்கிறது. ஆதாரங்கள் இருக்கிறது.

‘விடுதலை’யினுடைய வளர்ச்சி என்பது
ஒரு தனி மனிதருடைய ஒரு வியாபாரம் அல்ல!

ஆகவேதான், தோழர்களே, தாய்மார்களே, நண்பர்களே, ‘விடுதலை’யின் ஆதரவாளர்களாக இருக்கிறவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். எனவேதான், ‘விடுதலை’யினுடைய வளர்ச்சி என்பது ஒரு தனி மனிதருடைய ஒரு வியாபாரம் அல்ல, வணிகம் அல்ல. இது ஓர் அறிவுப் பெருக்கு. ஒரு பெரிய எதிர்நீச்சல்.

எமர்ஜென்சி நேரத்தில், ‘பெரியார்’ என எழுதக்கூடாது என்று சொன்னார்கள்.  கலைஞர் அவர்கள்தான் கத்திரிக்கா, வெண்டைக்காய் நல்லது என்று எழுதி, மிகப்பெரிய அளவுக்கு ஒரு போராட்டம் நடத்தினார்.

பெரியார் வளர்த்த ஏட்டில்,  ‘தந்தை பெரியார்’ என்று  போடக்கூடாது. அதே மாதிரி சங்ராச்சாரியாரை, ‘சங்கராச்சாரி’ என்று போடக்கூடாது என்று சொன்னார்கள்.  அன்னை மணியம்மையார் அவர்கள், ‘‘நான் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன்; எங்கள் பத்திரிகை. அதில், நாங்கள் எப்படி போடுவோமே, அப்படித்தான் போடுவோம்’’ என்று உறுதியாகச் சொன்னார்கள்.

 ‘‘விடுதலை வாழ்ந்தால் எவரே வீழ்வர்!
‘விடுதலை’ வீழ்ந்தால் எவரே வாழ்வர்!’’

ஆகவேதான், ‘விடுதலை’ அடித்திருக்கிற எதிர்நீச்சல் என்பது சாதனைகளை விட அதிகமானது. எனவேதான், ‘‘விடுதலை வாழ்ந்தால் எவரே வீழ்வர்! ‘விடுதலை’ வீழ்ந்தால் எவரே வாழ்வர்!’’

வாழ்க விடுதலை!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *