சாப்பிட்ட பிறகு எச்சில் இலையில் உருளும் உருளு சேவாவின் அப்டேட் வேர்ஷன் ‘மிதிசேவா – சரன்பிரசாத்’
நவீன உலகிலும், பகுத்தறிவு. அறிவியல் சிந்தனைகள் வளர்ந்து வரும் காலத்திலும், சில சமூகங்களில் நிலவும் சில பழக்கவழக்கங்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. கோகண் பகுதி உயர்ஜாதி சமூகத்தினரிடையே நிலவும் “மிதிசேவா’ (‘சரன்பிரசாத்) என்ற வேண்டுதல் பகுத்தறிவற்ற மற்றும் மனிதநேயமற்ற நடைமுறையாகும்.
இது, ஏற்கெனவே சர்ச்சைக்குரியதாக இருக்கும் ‘உருளு சேவா’ என்ற பழக்கத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்று கூறப்படுகிறது. இது போன்ற நடைமுறைகள் அறிவற்ற அவலத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.
இந்த ‘சரன்பிரசாத்’ என்பது திருமணம் தாமதமாகும் நபர்களுக்குத் திருமணம் நடந்தால் நிறைவேற்றப்படும் ஒரு வேண்டுதல். இதில், திருமணம் முடிந்த இணையரின் பெற்றோர் உணவால் நிரம்பிய வாழை இலைகளின் மீது ஏறி நின்று, புதுமண இணையரின் வாழ்க்கை சிறக்க ‘ஸ்லோகங்களை’ச் சொல்வார்கள். பின்னர், அவர்கள் மிதித்த உணவை ‘பிரசாதமாக’ ஏழைகளுக்கு வழங்கிவிடுவார்களாம். இன்றும் இந்த நடைமுறை தொடர்வது வேதனைக்குரியது.
இந்த ‘சரன்பிரசாத்’ பல வகைகளில் கண்டிக்கத்தக்கது!
“உணவே மருந்து,” “அன்னம் பரப்பிரம்மம்” என்று அவாள் போற்றும் ஸநாதன கலாச்சாரத்தில், காலால் உணவை மிதிப்பது எவ்வளவு பெரிய அவமதிப்பு? அண்மையில் நிட்டி ஆயோக் அறிக்கை இந்தியாவில் சுமார் 47 லட்சம் மக்கள் இரவு உணவின்றி தூங்கச் செல்கின்றனர் என்கிறது. இவ்வளவு மக்கள் ஒரு வேளை உணவிற்காகப் பசியால் வாடும்போது, உணவை இப்படி வீணாக்குவதும், காலால் மிதிப்பதும் எந்த வகையான பக்தி? இது ‘உணவை மதிக்காத’ மனப்போக்கையே காட்டுகிறது. உணவு என்பது உண்ணுவதற்குத் தான், மிதிப்பதற்கு அல்ல.
மனிதநேயமற்ற செயல்!
மிதித்த உணவை ஏழைகளுக்குப் ‘பிரசாதம்’ என்ற பெயரில் கொடுப்பது அவர்களை இழிவுபடுத்துவது இல்லையா? ஏழைகள் என்ன, யார் மிதித்த உணவையும் உண்ணத் தயாராக இருக்கிறார்களா? இது மனித கண்ணியத்தை மீறும் செயலாகும். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்றால், தரமான உணவை வழங்க வேண்டும். அவர்களை இப்படி இழிவுபடுத்தக் கூடாது. இது மனிதநேயமற்ற ஒரு வர்க்கப் பாகுபாட்டைக் காட்டுகிறது.
மூடத்தனம் மற்றும்
சுகாதாரமின்மை!
காலால் மிதித்த உணவை உண்பது சுகாதாரத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இவர்கள் கால்களை தூய்மைப்படுத்த சோப்புபோட்டு கழுவுவார்களா? அல்லது ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடில் கால்களை மூழ்கடித்து தூய்மை செய்வார்களா? எப்படிச் செய்தாலும் காலில் உள்ள நுண் துளைகள் மூலம் நினநீர் வெளியேறிக்கொண்டு தானே இருக்கும். அது இந்த உணவில் கலக்குமே; எவ்வளவு அருவருப்பான நடைமுறை!
‘ஸ்லோகம்’ சொல்வதன் மூலம் உணவு ‘புனித’மாகி விடும் என்பது வெறும் மூடநம்பிக்கை. இது நோய்களைப் பரப்புவதற்கு ஒரு வழியாகும்.
பகுத்தறிவற்ற பார்வை:
ஒருவரின் திருமணம் சிறப்பாக அமைய, உணவை மிதிப்பதற்கும், ‘ஸ்லோகம்’ சொல்வதற்கும் என்ன தொடர்பு? இது பகுத்தறிவுக்குப் புறம்பான ஒரு நம்பிக்கை. திருமண வாழ்க்கையின் வெற்றி என்பது புரிதல், அன்பு ஒருவரை ஒருவர் மதிப்பதில் தான் இருக்கிறது. உணவை மிதிப்பதில் அல்ல. இது போன்ற பழக்கவழக்கங்கள் அறிவார்ந்த சமூகத்திற்கு அழகல்ல.
பாரம்பரியம் என்ற பெயரில் இது போன்ற மூடத் தனமான, மனிதநேயமற்ற பழக்கவழக்கங்களைத் தொடரக்கூடாது. உணவை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏழைகளை இழிவுபடுத்தாமல் உதவ வேண்டும். பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையுடன் சிந்திப்பதே உண்மையான சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இது போன்ற நடைமுறைகளைக் கண்டித்து, சமூக மாற்றத்திற்கு நாம் பாடுபட வேண்டும். “அன்னம் பசி ஆற்றுவதற்கே!” – அதை மதித்து, பசித்தோருக்குத் தரமான உணவை வழங்குவதே உண்மையான மனிதநேயம்!
