திருவாங்கூர் சமஸ்தானம் (36) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’-மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

7 Min Read

தந்தை பெரியாரின் தொண்டையும், தொல்லைகளையும் சில சுயநலமிகள் மறைக்க முயன்றாலும், சத்தியாகிரகத்தின் கடைசிக் கட்டத்தில் காந்தியாரே அவர்கள் முகத்திரையைக் கிழிக்க நேர்ந்த சம்பவமும் நடந்தது. காந்தியார் சத்தியாகிரகத்தை முடிவுக்குக் கொண்டு வர, ராணியாரிடம் பேச அழைக்கப்பட்டார். காந்தியார், வைக்கம் சத்தியாகிரகத்தில் ராமசாமி நாயக்கர் தீவிரமாக இருப்பதால் அவரைக் கலக்காமல் எந்த முடிவும் காந்தியாரால் எடுக்க முடியவில்லை. அவரிடம் பேச்சு வார்த்தை நடத்திவிட்டே ராணியாரை சந்திக்கச் சென்றார். ராணியார், காந்தியாரிடம், “நாங்கள் சாலைகளைத் திறக்கிறோம். ஆனால், அடுத்து ராமசாமி நாயக்கர் கோயில் நுழைவுக் கிளர்ச்சி என்று ஆரம்பித்தால் என்ன செய்வது? அதை அவர் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தால் சாலைகளைத் திறக்க உத்தரவிடுகிறேன்” என்றார்.

அப்போது காந்தியார், பெரியாரை அரண்மனைக்கு அழைத்தார். காந்தியார் பெரியாரிடம், “நாம் என்ன முடிவெடுப்பது?” என்று கேட்டார். ராமசாமி நாயக்கர், “நம் கிளர்ச்சி கோயில் வாசல்வரைதான். இப்போது கோயில் நுழைவுக்கு அழுத்தம் தரப் போவதில்லை” என்று கூற, காந்தியார், “அப்படியே சொல்லிவிடலாமா?’ என்று வினவினார். ராமசாமி நாயக்கர், “நன்றாக சொல்லிவிடுங்கள்” என்று பதில் கூறினார். காந்தியார், ராணியாரிடம், “கோயில் நுழைவுப் பிரச்சினை இப்போதைக்கு இல்லை” என்று கூறினார். அதற்குப் பிறகே வைக்கம் கோயில் சுற்றுத் தெருக்கள் எல்லா மக்களும் புழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. வைக்கம் போராட்டம் வெற்றியடைந்தது.

அந்த வெற்றியைப் பற்றி 27.11.1925 அன்று நவசக்தியில், “வைக்கத்தில் முழு வெற்றியடைந்ததறிந்து மிகவும் மகிழ்ச்சி. மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள எல்லா பாதைகளும் ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்து விடப்பட்டுள்ளன. கோயில் கோபுரத்திற்கு சிறிது தூரத்தில் புதிய வாசல் அமைக்கப்பட்டுள்ளன. தெய்வ வழிபாடு செய்ய உரிமையுள்ளோர் அனைவரும் பயன்படுத்த அனுமதி கிடைத்து விட்டதால் காந்தியாரின் அனுமதியோடு, சத்தியாகிரகம் முடிவுக்கு வந்தது. எளியவர் பக்கம் நின்று நீதி வழங்கிய திருவாங்கூர் மகாராணியாருக்கும், காந்தியடிகளின் உபதேசங்களைக் கேட்டு, அதற்கு மாறாமல் சத்தியாகிரகம் நடத்திய ஈ.வெ.ராமசாமி நாயக்கர் உள்ளிட்ட சத்தியாகிரகிகளுக்கும், வெற்றி பெற்ற தொண்டர்கள் உள்பட அனைவருக்கும் மனமார வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று எழுதப்பட்டிருந்தது.

வைக்கம் தெருக்களில் நடக்க ஆணை பிறப்பிக்கப் பட்டபோது, தந்தை பெரியார் சென்னையில் இருந்தார். மைலாப்பூரில் அவர் ஆற்றிய சொற்பொழிவுக்காக 11.9.1924 அன்று, “வகுப்பு வெறுப்பு, வெறுப்பைத் தோற்றுவித்தல், ராஜ துரோகம்” என்ற குற்றங்களுக்காக ஈரோட்டில் கைது செய்யப்பட்டார். 8.3.1924 அன்று பேசிய பேச்சுக்கு, ஆறு மாதம் கழித்து 124ஏ, 153ஏ ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு அந்த வழக்குகளுக்காக சென்னையில் இருந்தே தீர வேண்டிய நிலைக்கு ஆளாகியிருந்தார். தந்தை பெரியார் எதிர் வழக்காடவில்லை என்றாலும், சில மாதங்களில் இந்த வழக்கு நியமற்றது என்று கூறி, அவர் விடுதலையானார். இதைப் பயன்படுத்திக்கொண்ட எதிரிகள் வைக்கம் போராட்டத்தில் அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்ற பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். (சான்று: “வைக்கம் போராட்டம்” – கு.வெ.கி.ஆசான்)

கட்டுரை

ஆனால், இந்த இருட்டடிப்பை பொய் என்று நிரூபிக்கும் வகையில் அதைத் துவக்கிய கேரளத் தலைவர்கள் பெரியார் அய்யாவின் உழைப்பையும், தியாகத்தையும் பாராட்டவே செய்தனர். திருவாங்கூர் நாட்டின், ஆங்கிலேய அரசாங்க பிரதிநிதி காட்டன் (C.W.E.Cotton, Resident, Travancore), “Infact, the movement would have collapsed long ago, but for the support it received from outside Travancore through the question of opening this is a purely domestic purpose” என்று குறிப்பிட்டார். “ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தலைமை இயக்கத்திற்கு புத்துயிர் கொடுத்தது” என்று கேரளத் தலைவர் டி.கே.ரவீந்தரன் குறிப்பிட்டார்.

கேரளக் காங்கிரஸ், “தீண்டாமை விலக்கக் குழு” செயலாளர் கே.கேளப்பன், திருவாங்கூர் திவானுக்கு எழுதிய கடிதத்தில், “ஈரோடு ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தலைமை வகிக்க 4,000 பேருக்கு மேல் கலந்து கொண்ட கூட்டம் வைக்கத்தில் நடந்தது. தீண்டத்தகாதோர் வைக்கம் திருவீதிகளில் போதல் கூடாது என்னும் கட்டை அறுக்க ராமசாமி நாயக்கர் முயன்றார். வெற்றியும் பெற்றார்” என்று எழுதினார். இருட்டடிப்புக்குப் பதிலாக இதுபோல் பலரும் தந்தை பெரியாரைப் பாராட்டினர், எழுதினர். இருட்டிப்பு செய்தவர்கள் தோற்று ஓடினர்.

கட்டுரை

வைக்கத்தில் நடந்த வெற்றி விழாக் கொண்டாட்டத்தைப் பற்றி 29.11.1925 ‘குடிஅரசு’ எழுதியது. “வைக்கத்தில் நடந்த வெற்றி விழாவிற்கு ராமசாமி நாயக்கர் தலைமை தாங்கினார். கேளப்பன், மன்னத்து பத்மநாபன், டி.கே.மாதவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்ட முடிவுரையில் ராமசாமி நாயக்கர், “தெருவில் நடக்க உரிமைக் கேட்டவர்களை சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், இப்போது நடப்பதற்கு நமக்கு உரிமை தந்து உதவ முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியா கிரகத்திற்கும், மகாத்மாவுக்கும் எவ்வளவு சக்தி என்று விளங்கும்.

ஆரம்பத்தில் பிராமணர் கட்சியில் இருந்த அரசு, இப்பொழுது அவர்களுக்கு விரோதமாக தீண்டத்தகாதோர் கையைப் பிடித்துக் கொண்டு, அத்தெரு வழியே அழைத்துச் செல்வதை நாம் பார்க்கிறபோது, நமக்கே சத்தியாகிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப்படத் தோன்றுகிறது. சத்தியாகிரகத்திற்கு விரோதியாய் இருந்தவர் பிராமணர்களே ஒழிய அரசாங்கம் இல்லை என்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்” என்று 6.12.1925 ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியிட்டார் தந்தை பெரியார்.
கட்டுரை

கட்டுரை கட்டுரை

கட்டுரை

அவர் பெயரை, அவரின் பெரும்  பங்கை மறைக்க முயன்றவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் 1959இல் தந்தை பெரியார் ஓர் உரையாற்றினார். அதில், “ராணி எங்களோடு ராஜி பண்ணி ஒரு உடன்பாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்து இருந்தபோது, அப்போது சமஸ்தானத்து திவானாக இருந்த பார்ப்பனர் என்னிடத்தில் ராணி நேராக பேசிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ராஜகோபாலாச்சாரிக்குக் கடிதம் எழுதினார். அவரும், காந்தியார் வழியாகக் காரியம் நடந்ததாகக் காட்ட காந்தியாருக்குக் கடிதம் எழுதினார். காந்தியாரும் கடைசி நேரத்தில் ராணியை சந்தித்துப் பேசினார். எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்;  நமக்குப் பேரும், புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் ஒப்புக் கொண்டேன்” என்று கூறினார்.

அவர் பேசியபடியே அந்தத் தலைவர் அவர் முன்னெடுத்த போராட்டத்தின் வெற்றியைப் பற்றித்தான் கவலைப்பட்டாரே ஒழிய, அவரின் தனிப்பட்ட பெயருக்கோ, புகழுக்கோ அவர் எதுவுமே செய்ததில்லை. அவர் போராட்டங்கள் எதிலுமே இதே வழியைத்தான் கையாண்டார்.

வைக்கம் போராட்டம் மட்டுமல்ல; அவர் ஈடுபட்ட எந்தப் போராட்டங்களிலும் அவா தோல்வியே அடைந்ததில்லை. அதைப் பற்றி அவரே குறிப்பிட்ட போது, “என் போராட்டங்கள் என்றுமே தோற்றதில்லை, வெற்றி கிடைக்க வேண்டுமானால் சற்று தாமதமாகலாம்” என்று கூறியுள்ளார்,

அந்த “வைக்கம் வீரர்!” பொதுத் தொண்டிற்கு வந்த காலக்கட்டத்தில், “நான் என்னையே நம்பித்தான் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளேன்” என்று கூறி தன் பொதுத் தொண்டைத் தொடங்கிய தந்தை பெரியார்தான் பல செயற்கறிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். (சான்று: “வைக்கம் போராட்டம்” – பழ.அதியமான்.)

திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு வந்த விவேகானந்தர், ஒரு வீட்டில் குடிக்கத் தண்ணீர் கேட்க, அந்த வீட்டில் உள்ளவர்கள் அவர் ஜாதியைக் கேட்டு, அவர் பார்ப்பனரல்லாதவர் என்று தெரிந்ததும் தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டனர்.

அந்த நாட்டில் நடக்கின்ற ஜாதியக் கொடுமைகளை கண்ணுற்ற அவர், “திருவாங்கூர் சமஸ்தானம், ஒரு பைத்தியக்காரர்கள்” விடுதி (Mad House) என்று குறிப்பிட்டார். அதேபோல் ஓர் ஆங்கில வரலாற்றாளர், “திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிகழ்ந்த ஜாதியக் கொடுமைகள், பாலின இழிவுகள் போன்றவை உலகில் எங்குமே நிகழாதக் கொடுமைகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பல சமஸ்தானங்களாக இருந்த இந்த நாட்டில் ஜாதிய ஏற்றத்தாழ்கள் இருந்தாலும், தீண்டாமை என்ற கொடுமை இருந்தாலும், திருவாங்கூர் நாட்டில் நம்பூதிரி பார்ப்பனர்களால் மற்ற பெரும்பான்மை மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகள் போல் உலகில் எங்குமே நிகழ்த்தப்பட்டதில்லை. பல இடங்களில் தீண்டாமை இருந்தது. ஜாதியைக் காரணம் காட்டி மக்கள் மீது ‘கல்லாமை’ திணிக்கப்பட்டது.

ஆனால், திருவாங்கூர் நாட்டில்தான் ஜாதியால் “காணாமை” என்ற சமூகச் சட்டம் பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப் பட்டது. அரை ஆடையோடு அனைத்துப் பெண்களையும் அலைய விட்ட நாடு அது. இரண்டு புரட்சிப் பெண்கள் அந்த மாநிலத்தின் மகளிர் அனைவரின் மானத்தைக் காத்த மாபெரும் வீராங்கனைகள் ஆனார்கள்.

நாஞ்செலியால், அவர் உயிர்த் தியாகத்தில் மார்பை மறைக்கும் மேலாடை போடும் உரிமை அந்த நாட்டுப் பெண்களுக்குக் கிடைத்தது.

குறியேடத்து தாத்ரி குட்டியால் (பார்ப்பன) நம்பூதிரிப் பெண்களான அந்தர் ஜனங்களின் மேல் திணிக்கப்பட்ட ‘ஸ்மார்த்த விசாரம்’ என்ற இழிவு ஒழிந்தது.

‘முத்துக் குட்டிச் சாமியார்’ என்ற வைகுண்ட சாமியாரால் சாணார்கள் என்ற இழிவாக பார்க்கப்பட்ட நாடார்கள் மறுவாழ்வு பெற்றனர். சிறீ நாராயண குருவால் ஈழவ மக்கள் கல்வியறிவு பெற்று நல்வாழ்வு வாழ்ந்தனர்.

‘அய்யன் காளி’ என்ற வாழ்நாள் போராளியால் புலையர்களும், பறையர்களும் மற்ற தாழ்த்தப்பட்டோரும் தலை நிமிர்ந்தனர்.

நாட்டிற்கு சம்பந்தமே இல்லாத தந்தை பெரியாரால், மாடுகளும், நாய்களும், பன்றிகளும் நடக்கக் கூடிய தெருக்களில் மனிதர்கள் நடக்கும் உரிமையைப் பெற்று, மான உரிமையைப் பெற்றனர்.

ஜாதியச் சட்டங்களால் அந்த மக்களும், பெண்களும் பட்ட துயரங்களும், காயங்களும் மாறாத வடுக்களாக அந்த மக்கள் மேல் படிந்து விட்டதை யார் மாற்ற முடியும்?

– முடிக்கிறேன்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *