வாரியன்வயல் என்கிற கிராமத்தை, அதன் 20 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் மற்றவர்களுக்குத் தெரியும் வாய்ப்புக் குறைவு. அந்தக் குக்கிராமத்திலும் ஒருவர் கருப்புச் சட்டையோடு வலம் வருகிறார், அதிலும் 51 வயதில்தான் அதன் தத்துவத்தை அறிந்ததாகக் கூறுகிறார். வியப்பாக இருக்கிறது அல்லவா? வாருங்கள்… அந்தக் கிராமத்துக் கதையைக் கேட்டு வருவோம்.
தனி மனிதராய், கருப்புடைத் தரித்து, கம்பீரமாய் வலம் வருகிறீர்களே?
ஆமாம்! எனக்கு வயது 61 ஆகிறது. 51 வயதில் தான் திராவிடர் கழகத்தில் இணைந்து, கருப்புச் சட்டை அணியத் தொடங்கினேன். சிவகங்கை மாவட்டம் வாரியன்வயல் எனும் குக்கிராமத்தில் 1964 இல் பிறந்தேன். அம்மா அற்புதம், அப்பா அருளானந்த். ஒன்பதாம் வகுப்பு வரை படித்த நான், தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் உதவியாளராக வேலை செய்தேன். ஆறு மாதங்கள் கடந்த நிலையில் மருத்துவக் கல்லூரி மற்றும் சரபோஜி கல்லூரி மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு, பெரும் கலவரமாக மாறியது. இதனால் கல்லூரி விடுமுறை விடப்பட்டது. இச்சூழலில் வேலை இழந்த நான், நண்பர் ஒருவரின் உதவியால் மும்பைக்குச் சென்றேன்.
ஓ… அந்தக் காலத்திலேயே மும்பைக்குச் சென்றுள்ளீர்களா?
ஆமாம்! அப்போது எனக்கு 14 வயது இருக்கும். சென்னை – மும்பை ரயில் கட்டணம் 45 ரூபாய். அங்கு ஒரு தேநீர் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அது ஒரு பிரபலமான “ஈரானி டீக்கடை”. மாதச் சம்பளம் 125 ரூபாய். மூன்று ஆண்டுகள் மும்பையில் வசித்தேன். இடையில் மஸ்ஜித் பந்தர் (Masjid Bandar) எனுமிடத்தில் சொந்தமாக “வடை பாவ்” (Vada Pav) கடை நடத்தினேன். ஓரளவு ஹிந்தியும் கற்றுக் கொண்டேன். நான் மும்பையில் இருந்த காலத்தில் தான் சஞ்சய்காந்தி விமான விபத்தில் இறந்து போனார். மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், நான் சென்னைக்கு வந்துவிட்டேன்.
சென்னையில் வந்து என்ன செய்தீர்கள்?
மும்பையில் பணி செய்ததைப் போலவே சென்னையிலும் ஈரானி டீக்கடையில் (Irani Chai) வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால் அவர்களது தேநீர் கடையில் அல்லாமல், பேக்கரி நிறுவனத்தில் வேலை பார்த்தேன். சென்னையில் அந்தக் காலத்திலேயே ஈரானி டீக்கடை பிரபலமானது. சிம்சன், ரேடியோ மார்க்கெட், சாந்தி திரையரங்கம் அருகில், மில்லர் திரையரங்கம் அருகில், எல்.அய்.சி. அருகில், புரசைவாக்கம், மின்ட் தெரு, யானைக்கவுனி, சென்ட்ரல், தம்புச்செட்டி தெரு உள்ளிட்ட பல இடங்களிலும் இந்தக் கடை இருந்தது.
நான் சிந்தாதிரிப்பேட்டை கிளையில் வேலை செய்தேன். அதிகாலை 3 மணிக்குத் தொடங்கி, மதியம் ஒரு மணி வரை வேலை இருக்கும்.
எங்கள் கடைக்குப் பின்னால் தான் சிங்கண்ண செட்டித் தெரு இருக்கிறது. அங்கு மாலை நேரங்களில் கூட்டங்கள் நடக்கும். ஓய்வாக இருப்பதால், அங்கு சென்று பேச்சுகளைக் கேட்பேன். புலவர் ஆடலரசு, தஞ்சை கூத்தரசன், வண்ணை ஸ்டெல்லா, இரகுமான் கான் ஆகியோர் பேசியதைக் கேட்டுள்ளேன். ஒரு கட்டத்தில் வேலை பார்ப்பதை நிறுத்திவிட்டு, “டாம்ஸ்” சாலையில் சிற்றுண்டி உணவகம் தொடங்கினேன்.
அப்போது எனக்கு வயது 20. ஒரு ரூபாய்க்கு 5 இட்லி விற்பனை செய்த காலம். பிறகு பிரியாணி கடை தொடங்கினேன். இப்போது வரை அது செயல்பட்டு வருகிறது.
தங்களுக்கு எப்போது திருமணம் ஆனது?
எனது இணையர் பெயர் ஈஸ்வரி. நாங்கள் தன்விருப்பத் திருமணம் செய்து கொண்டோம். மேலும் இது ஜாதி, மத மறுப்புத் திருமணம் ஆகும். இது இயல்பாக நடந்த ஒன்று. திருமணத்திற்கு முன்பு எனக்கொரு விபத்து ஏற்பட்டது. அப்போது எங்கள் வீட்டிற்கு எதிரில் குடியிருந்த செவிலியர் ஈஸ்வரி என்னைக் கவனித்துக் கொண்டார். அந்த அறிமுகத்தில் தான் அவர் இணையர் ஆனார். எங்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். இருவருமே தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார்கள். சொந்தமாக வீடு வாங்கி, அவரவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். எனக்கும் சென்னையில் இரண்டு வீடுகள் உள்ளன.
எனது இணையருக்குக் கர்ப்பத்தடை அறுவைச் சிகிச்சை, சென்னை, பெரியார் திடல் மருத்துவமனையில் தான் நடைபெற்றது. அப்போது கூட இந்தக் கொள்கைக் குறித்து எனக்குப் பெரிய அறிமுகம் இல்லை. அதேநேரம் 30 வயது கடந்த நிலையில் பெரியார் திடலுக்குப் புத்தகங்கள் வாங்க சென்றுள்ளேன். அதேபோல எங்கள் கடைக்கு ஒருவர் சாப்பிட வருவார். அவர் எப்போதும் பெரியார், அம்பேத்கர் கருத்துகளைப் பேசிக் கொண்டிருப்பார். அவர் மூலமும் கூடுதலான உணர்வுகளைப் பெற்றேன்.
திராவிடர் கழகத்தில் எப்போது இணைந்தீர்கள்?
எனது பெற்றோர் மறைவிற்குப் பிறகு, நான் பிறந்த வாரியன்வயல் கிராமத்தில் தங்க வேண்டிய சூழல் வந்தது. தஞ்சாவூர், மும்பை, சென்னை ஆகிய ஊர்களில் 37 ஆண்டுகளைக் கழித்த நிலையில் பெற்றோரின் வீடு, நிலம், விவசாயம் போன்றவற்றைப் பாதுகாக்கும் நிலைக்கு வந்தேன். இப்படியான சூழலில் தேவகோட்டை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கடைத் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு கடையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஒளிப்படம் இருப்பதைப் பார்த்தேன். அதுகுறித்து கடை உரிமையாளரிடம் விசாரித்தேன். அவர் நமது இயக்கத் தோழர் கொ.மணிவண்ணன் அவர்களின் மகன் என்பது தெரிய வந்தது. (தோழர் மணிவண்ணன் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்விற்குப் பிறகு தேவகோட்டையில் வசிக்கிறார்)
இந்நிலையில் திராவிடர் கழகப் புத்தகத்தின் பின்புறப் பக்கத்தில் இருந்த “திராவிடர் கழகத்தில் இணைய விரும்புகிறீர்களா?” என்கிற தாளைப் பூர்த்தி செய்து, தலைமை நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன். ஒரு சில நாட்களில், அப்போது காரைக்குடி கழக மாவட்டத் தலைவராக இருந்த ஆசிரியர் ச.அரங்கசாமி என்னைத் தொடர்பு கொண்டார். ஆக நான் இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்ட போது எனக்கு வயது 51. அப்போது முதல் மாவட்டத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வருகிறேன். தேவகோட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அய்யாவை முதன்முதலில் பார்த்தேன். எனினும் திருச்சி கருஞ்சட்டைப் பேரணியின் போது, காரைக்குடி என்னாரெசு பிராட்லா என்னை ஆசிரியரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
மாணவர் பருவம் மற்றும் இளைஞர் பருவத்தில் இயல்பாக வாழ்ந்துவிட்டு, 51 வயதிற்கு மேல் பகுத்தறிவு வாழ்க்கை வாழ்கிறீர்களே, என்ன மாதிரியான வேறுபாட்டை உணர்கிறீர்கள்?
முன்பெல்லாம் நம்பிக்கையே வாழ்க்கையாக இருந்தது. யாராவது, எதையாவது சொன்னால் எது சரி, எது தவறு எனக் கண்டுபிடிக்கத் தெரியாது. இப்போது யார், என்ன பேசுகிறார்கள் என்பது புரிகிறது. அதுமட்டுமின்றி இந்த இயக்கத்தில் இருந்தால் எல்லாவற்றிலும் சரியாக இருக்க வேண்டும் என்கிற உணர்வும் மேலோங்கி இருக்கிறது. இன்னும் வெளிப்படையாகச் சொல்கிறேன், பத்து பேர் தவறு செய்தால், நாமும் அதில் ஒரு ஆளாக இருந்தோம். அப்படி இருந்தால் தான் பணியிடத்தில், தங்குமிடத்தில் நம்மையும் சேர்த்துக் கொள்வார்கள்.
ஆனால் இந்த இயக்கத்திற்கு வந்த பிறகு நாம் ஏதாவது தவறு செய்தால், இந்த இயக்கத்தில் இருக்கிற 10 பேர் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார்கள்; வழிநடத்துகிறார்கள். அதனால் நம்மிடையே ஓர் ஒழுங்கு ஏற்படுகிறது. இதுபோன்ற அனுபவம் வேறு இயக்கத்தில் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
சிறு வயது முதலே வெளியூர்களில் வசித்த தாங்கள், 51 ஆம் வயதில் தான் கிராமத்திற்கே வந்துள்ளீர்கள். அதுவும் கடவுள், மதம், ஜாதியை எதிர்க்கும் சுயமரியாதை வீரராக இருக்கிறீர்கள். எதிர்ப்புகள் பலமாக இருந்திருக்குமே?
பல வகைகளிலும் பிரச்சினைகள் வந்தன. முன்னதாக எங்கள் பெற்றோர் சொத்துகளைச் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். அதைச் சட்டப்படி மீட்டெடுத்தேன். அதற்கு இயக்கத் தோழர் கொ.மணிவண்ணன் முழுமையாக உதவி செய்தார். அதேபோல திராவிடர் கழகத்தில் செயல்படுவதற்கும் எதிர்ப்புகள் இருந்தன. பெரும்பாலான மக்கள் தேவாலயம் (Church) சார்ந்து வாழும் போது, தனித்துவமாக ஒருவரை இயங்க விடமாட்டார்கள். அதிலும் தேவாலயத்தின் ஒரு பகுதியை நான் இடித்துவிட்டதாகவும் என் மீது பொய்க் குற்றம் சுமத்தினார்கள். இயல்பாகவே நாம் பகுத்தறிவுச் சிந்தனையுடன் வாழ்கிறோம். இதுபோன்ற அனுபவங்களும் நமக்குக் கிடைக்கிற போது, நமது எண்ணங்களிலும், கொள்கையிலும் மேலும் உறுதி கிடைக்கிறது. பெரியார், ஆசிரியர் படங்களை வீட்டில் மாட்டி வைத்திருக்கிறேன், மாடியில் கழகக் கொடியை ஏற்றி வைத்திருக்கிறேன், கருப்புச் சட்டையில் நாளும் வலம் வருகிறேன், எங்கள் கிராமத்திற்குத் தினமும் நான் செய்து வரும் பிரச்சாரம் இதுதான்”, என வாரியன்வயல் ஜோசப் உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.
