சென்னை, ஜூன் 05 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.6.2026) சென்னை அண்ணா அறிவால யத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
38 பேர் கொண்ட கள ஆய்வு குழு
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக ஆராய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் 38 பேர் கொண்ட “கள ஆய்வு குழு” நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் தற்போது தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்து மட்ட நிர்வாகிகளையும் நேரடியாகச் சந்தித்து ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் பெற்று வருகின்றனர்.கள ஆய்வு குழுவின் நேரடி சந்திப்புகள் ஒருபுறமிருக்க, திமுகவினர் தங்களது கருத்துகளை நேரடியாகப் பதிவு செய்வதற்காக “உடன்பிறப்பின் குரல்” என்ற புதிய இணையதளத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் தளம் மூலம் இதுவரை 4.60 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. கள ஆய்வு குழுவினர் இதுவரை நடத்திய ஆய்வுகள் குறித்தும், தொண்டர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப் பட்டது.
தற்போது களத்தில் உள்ள ஆய்வுக் குழுவினர், வருகிற ஜூன் 10-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது இறுதி கள ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், கட்சியில் தொய்வாகச் செயல்பட்ட நிர்வாகிகள் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மற்றும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய (4.6.2026) ஆலோசனைக் கூட்டத்திலும் இதுகுறித்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
