குணசீலன் மாதிரி ஒரு தீவிர தொண்டரைப் பார்க்க முடியாது!
அய்யாவைப்பற்றியோ, இயக்கத்தைப்பற்றியோ, என்னைப்பற்றியோ யாராவது தவறாகப் பேசிவிட்டால், உடனே அவர்கள்மீது கோபப்படுவார்!
சென்னை, ஜூன் 5 ‘‘குணசீலன் மாதிரி ஒரு தீவிர தொண்டரைப் பார்க்க முடியாது; மற்றவர்களுக்குக் கட்டுப்பட மாட்டார் அவர்! அய்யாவைப்பற்றியோ, இயக்கத்தைப்பற்றியோ, என்னைப்பற்றியோ யாராவது தவறாகப் பேசிவிட்டால், உடனே அவர்கள்மீது கோபப்படுவார்; யாராக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டார்! வில்லிவாக்கம் நம் கழகக் கோட்டையாக இருந்த பகுதி!’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழா –
குணசீலன் – தங்கமணி படத்திறப்பு நினைவேந்தல்
கடந்த 1.6.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற ‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழா – குணசீலன் – தங்கமணி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
‘‘இவர் தமிழர் இல்லை என்றால்
எவர் தமிழர்?’’
மிகுந்த பெருமையோடும், சிறப்போடும் நடை பெறக்கூடிய ‘விடுதலை’யினுடைய 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், சிறப்பு மிகுந்த இரண்டு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுடைய படங்களைத் திறந்து, அவர்களுக்கு வீர வணக்கமும், புகழ் வணக்கமும் செலுத்தக்கூடிய நினைவேந்தல் கூட்டத்தில் சிறப்பாக வரவேற்புரை ஆற்றிய வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் அவர்களே, இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக கலந்து கொண்டுள்ள எழுத்தாளர் ப.திருமாவேலன் நம்முடைய இயக்கக் கொள்கைகளை அன்றாடம் ‘முரசொலி’ நாளிதழ் மூலமும், ‘கலைஞர்’ தொலைக்காட்சி மூலமும், மற்ற ஏடுகள் மூலமும் பரப்புரை செய்து வருபவர். அதுமட்டுமின்றி, மிக ஆழமாகப் படித்தவர் எழுத்தாளர் திருமாவேலன் அவர்கள். ‘‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’’ என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கின்ற புத்தகங்கள் மூன்று பெரிய வால்யூம்களாக வெளிவந்திருக்கின்றன. அதனுடைய பெருமை எப்பொழுது தெரியும் என்றால், வருங்காலத்தில் தெரியும். பெரியார் கருத்தைப் பரப்பு வதைப்பற்றி இப்பொழுது கவலையே இல்லை. தொடக்கத்தில் இருந்த ஒரு காலகட்டம் அது. நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யாரிடம் என்றால், திரிபுவாதிகளிடமிருந்து என்பதுதான் இன்றைக்கு இருக்கிற மிக முக்கியமான கவலையாகும். அப்படிப்பட்ட நிலையில், பெரியாருடைய கருத்துகளைப் பாதுகாக்க வேண்டும்.
விஞ்ஞானத்தை யாரும் தடுக்க முடியாது; அதுபோல, யாரும் பெரியாரைத் தடுக்க முடியாது!
பெரியார் உலகளாவிய அளவுக்குப் பரந்திருக்கிறார். அதனுடைய சிறு எடுத்துக்காட்டுதான் அகிலா செல்வ ராஜ் போன்றவர்கள். நீங்களும், நானும் அதற்குக் காரணமில்லை. அது இயற்கை. எப்படி அதைச் சொல்கிறேன் என்றால், விஞ்ஞானத்தை யாரும் தடுக்க முடியாது; அதுபோல, யாரும் பெரியாரைத் தடுக்க முடியாது. பெரியார் என்றால் விஞ்ஞானம்! சமூக விஞ்ஞானம் மட்டுமல்ல, எல்லா ஞானமும். ஞானத்திலேயே பயன்படக்கூடியது விஞ்ஞானம்.
‘‘அந்தக் காலத்திலே நாங்கள்’’ என்று பேசுவதில் அர்த்தமே கிடையாது
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சிறப்பான நிலையை அழகாக எடுத்துச் சொல்லி, எடுத்துக்கொண்ட தலைப்பிற்கேற்ப, சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களைப் பற்றியும், ‘விடுதலை’யினுடைய பங்களிப்பின் சிறப்பைப் பற்றியும் எடுத்துரைத்த நம்முடைய ப.திருமாவேலன், திராவிட இயக்கத்தினுடைய ஒப்பற்ற ஆவணக் காப்பகமாக இருக்கக்கூடியவர். இந்தத் திடலில் இருந்துஉருவான பல பேரில், அவரும் ஒருவர். ஆனாலும் சில நேரங்களில், வயதானவர்கள் கூட புதிய தலைமுறையிடம், இளந்தலைமுறையிடம்தான் வழி காட்டுங்கள் என்று கேட்கக்கூடிய நிலை. காலம் மாறிப் போயிருக்கிறது. ‘‘அந்தக் காலத்திலே நாங்கள்’’ என்று பேசுவதில் அர்த்தமே கிடையாது.
இப்பொழுது நாம் அவர்களைப் பார்த்துத்தான் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். எப்பொழுதும் அறிவியல், புத்தாக்கத்தைக் கொடுத்து கொண்டே இருக்கக்கூடியது. அப்படிப்பட்ட முறை யிலே, நம்முடைய அன்பு அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடியவர்தான் நம்முடைய தோழர் சிறப்பு மிகுந்த நம்முடைய திருமாவேலன் அவர்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்ற நம்முடைய இயக்கத் தோழர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நேரத்தின் நெருக்கடியைக் கருதி அவர்கள் அத்தனை பேரையும் தனித்தனியே விளிக்கவில்லை. அதற்காக யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.
விழுதுகள் பழுதில்லாமல் இருக்கின்றன!
கழகப் பொருளாளர் உள்பட மற்றும் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் உள்பட மற்றும் தாய்மார்கள், மகளிரணியைச் சேர்ந்த சகோதரிகள் உள்பட, பெரியார் நூலகர் வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். அய்யா அறிஞர் புலவர் வீரமணி போன்றவர்கள், இப்படி சான்றோர்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டிருந்தாலும், எல்லா வகையானவர்களும் இன்றைக்கு இந்தக் கூட்டத்தில் சிறப்பாக பார்க்கக்கூடிய வாய்ப்பில், அத்தனை பேரையும், வருக! வருக! என்று ஆசிரியர் என்ற முறையில் நான் வரவேற்பதோடு, இன்றைக்குப் படத்திறப்பில் நம்முடைய குணசீலன் – தங்கமணி ஆகியோருடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் அத்தனை பேரையும் – இந்தப் பிள்ளைகளை எல்லாம் இங்கே பார்க்கும்போது எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. அவர்களை இழந்து விட்டோமே என்று நினைக்கிறோம்; ஆனால், அவர்களுடைய வாரிசுகள் எல்லாம் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்’’ என்பதுபோல, விழுதுகள் பழுதில்லாமல் இருக்கின்றன என்பதற்கு இது அடையாளமாகும். அவர்களுக்கு நன்றி செலுத்துகின்றோம்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், குண சீலன் மாதிரி ஒரு தீவிர தொண்டரைப் பார்க்க முடியாது. மற்றவர்களுக்குக் கட்டுப்பட மாட்டார் அவர். சரியான முன்கோபி; அய்யாவைப்பற்றியோ, இயக்கத்தைப்பற்றியோ, என்னைப்பற்றியோ யாராவது தவறாகப் பேசிவிட்டால், உடனே அவர்கள்மீது கோபப்படுவார். யாராக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டார். அவர் ரயில்வே ஊழியர். அந்த நிலையிலேயும், வட சென்னை மாவட்ட கழகத் தலைவர், செயலாளர் போன்ற பொறுப்புகளில் இருந்தவர்.
‘மிசா’வில் எங்களோடு
ஓராண்டு சிறையில் இருந்தவர்!
அவர் ‘மிசா’வில் எங்களோடு ஓராண்டு சிறைச்சாலை யில் இருந்தார். மிசாவில் , திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 12 பேர் சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தோம். சிறைச்சாலையில், அவரை சமாளித்தது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஏனென்றால், இயக்கத்தைப்பற்றி யாராவது ஏதாவது சொல்லிவிட்டால், அவர்களிடம் சண்டைக்குப் போவார். ‘‘ஆசிரியர் உங்களைக் கூப்பிடு கிறார்’’ என்று யாராவது சொன்னால்தான், பேசாமல் வந்து அமர்ந்துவிடுவார்.
நான் வெளியூர் கூட்டங்களுக்கு அடிக்கடிச் செல்வேன். சில ஊர்களில் இருந்து சலசலப்பு வரும். அப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூ ரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதற்கு சில நாள்களுக்கு முன், அங்கே இருந்து எனக்கு ‘மொட்டை கடிதாசி’ வந்தது. அந்தக் கடிதத்தில் ‘திருச்செந்தூர்ல நீ காலை வைச்சுப் பேசிடுவியா? அப்படிப் பேசினால் என்னாகும் தெரியுமா? வெடிகுண்டு வீசுவோம்’’ என்று எழுதப்பட்டிருந்தது.
‘வெடிகுண்டு வீசுவோம்’ என்ற
மிரட்டல் கடிதம்!
அந்தக் கடிதத்தை அப்படியே ‘விடுதலை’யில் வெளியிட்டோம்.
வெடிகுண்டு வீசினால் நல்லதுதானே என்று நினைத்து, திருச்செந்தூரில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பங்கேற்க நான் ரயிலில் ஏறிப் பயண மானேன். நான் பயணமான ரயில், தாம்பரம் தாண்டியவுடன், திடீர்னு இவர் என்னுடைய கம்பார்ட்மெண்ட்டுக்கு வருகிறார்.
‘‘என்னங்க, நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்?’’ என்று நான் கேட்டேன்.
உடனே அவர், ‘‘அப்படி ஒரு கடிதம் வந்திருக்கிறது; நீங்கள் தனியாகப் போனால், நாங்கள் விட்டுவிடுவோமா? என்றார்.
‘‘நான் தனியாகப் போகவில்லை; அங்கே மக்கள் இருப்பார்கள்’’ என்றேன் நான்.
அப்படி நான் எங்கே சென்றாலும், குணசீலன் வந்து விடுவார். அது போராட்டமென்றாலும், பொதுக்கூட்டம் என்றாலும். அவருக்கு ஒரு வசதி என்னவென்றால், அவர் ரயில்வே பணியாளர் என்பதுதான், டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. பாஸ் வைத்திருப்பார். மிகக் குறைவான கட்டணம் என்பதால், ரயில்வே பாஸ் எடுத்துக் கொள்வார். ‘மிசா’வில் மட்டுமல்ல, பல போராட்டங்களில் பங்கேற்று இருக்கிறார்.
இயக்க நிகழ்ச்சி அனைத்திலும் பங்கேற்பார்!
நம்முடைய குணசீலன் அவர்கள், என்னுடைய பிறந்த நாள், ‘விடுதலை’ பிறந்த நாள், அய்யாவின் பிறந்த நாள் இப்படி ஏதாவது ஒன்றை சாக்காகச் சொல்லி, ஒரு பெரிய சாக்லேட் அல்லது கேக் கொண்டு வருவார். ‘‘ஏங்க, இவ்வளவு சுவையும் சாப்பிட்டால் மனுஷனுக்கு சர்க்கரை அளவு கூடிவிடாதா?’’ என்பேன்.
அதே மாதிரி, தங்கமணி அவர்கள், குணசீலன் அவர்கள் மறைந்த பிற்பாடு கூட, பெரியார் திடலுக்கு வந்து ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்பார். அவரும், சாக்லேட், கேக் கொண்டு வருவார்.
நான் அவரிடம் சண்டை போடுவேன்; ‘‘ஏம்மா, இதெல்லாம் வாங்கிட்டு வருகிறீர்கள். சும்மா வந்து பார்க்க வேண்டியதுதானே’’ என்பேன்.
இயக்க நிகழ்ச்சி அனைத்திலும் அவர் பங்கேற்பார். இன்றைக்கு அவர்களுடைய பிள்ளைகள் நல்ல அள வுக்கு, இயக்கக் கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்கி றார்கள்.
வில்லிவாக்கம் ஒரு காலத்தில், நம் கழகக் கோட்டையாக இருந்த பகுதியாகும். வில்லிவாக்கம் என்றால், அய்யாக்கண்ணு மேஸ்திரி என்று தொடங்கி, ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.
வில்லிவாக்கத்தில்தான் ஜாதி ஒழிப்பு மாநாடு மிகப்பெரிய அளவிற்கு நடத்தப்பட்டது!
அய்யா தியாகராஜன் ஆனாலும், அவருடைய துணைவியார் ஆனாலும், அதே மாதிரி குணசீலன் அவர்கள் ஆனாலும், ஒருவருக்கொருவர் அவர்கள் சொந்தக்காரர்களாக இருந்தாலும் கூட, எல்லா கட்சி களையும்விட அதிகமாக நம்முடைய தோழர்கள் அங்கே இருந்தார்கள். அன்றைய இளைஞர்கள் எல்லாம் இன்றைக்கு வயதானவர்களாகவும், சிலர் மறைந்தும் போய்விட்டார்கள். வில்லிவாக்கத்தில்தான் ஜாதி ஒழிப்பு மாநாடு மிகப்பெரிய அளவிற்கு நடத்தப்பட்டது. இப்படி ஒரு வரலாறு வில்லிவாக்கத்திற்கு உண்டு.
நம்முடைய தங்கமணி அவர்கள் மறைந்த செய்தி கேட்டு, மிகவும் துயரத்தோடு இருந்தோம். தேர்தல் முடிவு வெளிவந்த நாள் என்பதால், அதிக நேரம் எங்களால் அங்கே இருக்க முடியவில்லை. ஆகவே, சூழ்நிலை காரணமாக, உடனடியாக அவருடைய படத்திறப்பை நடத்த முடியவில்லை. இன்றைக்கு படத்திறப்பை நடத்துகின்றோம்.
(தொடரும்)
