கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் வரும் ‘மற்றும் பல’ரெல்லாம் நல்லவராகும் போது, அந்தப் பெயர்கூட பொருத்தமானதுதான்!

0 Min Read

தமிழ்நாட்டில் த.வெ.க.வுடன் தாங்கள் வைத்துள்ள கூட்டணிக்கு

என்ன பெயர் வைக்கலாம் என்று காங்கிரசார் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்!

 முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் திருச்சி உரையிலிருந்து கூட

‘நல்லா வரும்’ பெயரைத் தேர்ந்தெடுக்கலாம்!

அந்தோ, பரிதாபத்திற்குரிய ‘வாஷிங்மெஷின்’ அரசியலே!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருப்பதாகவும், தமிழ்நாட்டில் த.வெ.க.வுடன் தாங்கள் வைத்துள்ள கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பதென்று தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சோடங்கர் என்பவர்! முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் திருச்சி உரையிலிருந்து கூட ‘நல்லா வரும்’ பெயரைத் தேர்ந்தெடுக்கலாம் தான்! கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் வரும் ‘மற்றும் பல’ரெல்லாம் நல்லவராகும் போது அந்தப் பெயர்கூட பொருத்தமானதுதான்! அந்தோ பரிதாபத்திற்குரிய ‘வாஷிங்மெஷின்’ அரசியலே! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

Contents
தமிழ்நாட்டில் த.வெ.க.வுடன் தாங்கள் வைத்துள்ள கூட்டணிக்குஎன்ன பெயர் வைக்கலாம் என்று காங்கிரசார் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்! முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் திருச்சி உரையிலிருந்து கூட‘நல்லா வரும்’ பெயரைத் தேர்ந்தெடுக்கலாம்!அந்தோ, பரிதாபத்திற்குரிய ‘வாஷிங்மெஷின்’ அரசியலே!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கைதங்களைத் தாங்களே மெச்சிக் கொள்கிறார்கள்!ஜனநாயக சீரமைப்புக்கான சங்கத்தின் ஆய்வறிக்கை!சலவை செய்து தூய்மையானவர்களாக்கும் பெரிய ‘வாஷிங் மெஷின்’ பா.ஜ.க.விடம் உள்ளது!இணைந்தும் பிரிந்தும், பிரிந்து இணைந்தும்!ஒரு மக்கள் இயக்கம் உருவாக வேண்டியதன் அவசியம்!

அவரது அறிக்கை வருமாறு:

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தி.மு.க. கூட்ட ணியில் இருந்தபோது, சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பேச்சுவார்த்தை முடியும் முன்பாகவே ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெற்றுக் கொண்டது காங்கிரஸ் கட்சி. சட்டமன்றத் தேர்தல் முடிந்தது – 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலில் தங்களுக்குப் பெரும் துணையாகவும், தமிழ்நாட்டு அரசியலில் தங்களைத் தூக்கிச் சுமக்கும் கூட்டாளியாகவும் இருந்த தி.மு.க.வை விட்டு விலகுவதாகக் கூட அறிவித்திடாமல், ‘பெருந்தன்மையோடு’ நேரே த.வெ.க. அலுவலகத்துக்குச் சென்று,  அங்கே இணைப்பு – பல தேர்தல்களிலும் தொடரும் என்று அறிவிப்பு கொடுத்தது காங்கிரஸ்.

தங்களைத் தாங்களே
மெச்சிக் கொள்கிறார்கள்!

மாநிலத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்கத் தாங்கள் கொடுத்த அய்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்காக, இரண்டு அமைச்சர் இடங்களை வாங்கியிருக்கிறது; தற்போது த.வெ.க.விடமிருந்து ஒரு மாநிலங்களவை இடத்தையும் கோரியபடி, அந்த ஒரு இடமும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸின் 60 ஆண்டுகள் அமைச்சர் ‘பசி’யும், மற்றொரு ‘வரம்’ கேட்டவரின் 8 ஆண்டு ‘எம்.பி. பசியும்’ இப்போதைக்குத் தீர்ந்திருக்கக் கூடும். காங்கிரசின் இந்தக் கூட்டணித் தாவல் தமிழ்நாட்டில் கண்டனத்தைப் பெற்றாலும் கூட, அரசியலில் தாங்கள் எதையோ புதிதாகச் சாதித்து விட்டதாகத் தங்களைத் தாங்களே அவர்கள் மெச்சிக் கொள்ளவும் கூடும்.

ஜனநாயக சீரமைப்புக்கான
சங்கத்தின் ஆய்வறிக்கை!

ஆனால்,  கடந்த 12 ஆண்டுகளாக ஒன்றியத்தில் தொடரும் பா.ஜ.க.வின் ஆடு– புலி ஆட்டத்தில் (ஆட்சிக் காலத்தில்), காங்கிரஸ் எத்தனை எம்.பி.க்களையும், எம்.எல்.ஏக்களையும் வெட்டுக் கொடுத்திருக்கிறது என்பது பற்றி ஒரு கணக்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஜனநாயக சீரமைப்புக்கான சங்கத்தின் (Association for Democratic Reforms) ஆய்வு ஒன்றில், 2016-2020 அய்ந்தாண்டு காலத்தில் 433 எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் கட்சி மாறியுள்ளனர். அவர்களின் 170 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியுள்ளனர். அவர்களில் மிகப் பெரும்பாலோர் பா.ஜ.க.விற்குத் தான் தாவியுள்ளனர். பா.ஜ.க.விலிருந்தும் பிற கட்சிகளுக்கு 28 பேர் மாறியுள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளிலிருந்து பா.ஜ.க.விற்குத் தாவிய எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 182 பேர்; பிற கட்சிகளின் 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்குச் சென்றுள்ளனர் என்று வகை வகையாகப் பிரித்து இந்தப் பட்டியலை வெளி யிட்டிருந்தது அந்த அமைப்பு.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். 10 ஆண்டுகளில் (2014-2024) சுமார் 740 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிகளிலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் காங்கிரசார் தான். தேர்தல் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு அணியோ, கட்சியோ மாறும் இத்தகைய உள்ளடி நடவடிக்கைகள்மூலம் தான் மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், கோவா, மணிப்பூர், கருநாடகா, மகாராட்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை உருவாக்கியது பா.ஜ.க!

சலவை செய்து தூய்மையானவர்களாக்கும் பெரிய ‘வாஷிங் மெஷின்’
பா.ஜ.க.விடம் உள்ளது!

‘‘ஊழல்வாதிகள், தேச விரோதிகள், வாரிசு அரசி யல்வாதிகள்’’ ‘கல்லாப்பெட்டி கூட்டணி’ என்று தங்களால் வசைபாடப்பட்டவர்களையும் சலவை செய்து தூய்மையானவர்களாக்கும் பெரிய ‘வாஷிங் மெஷின்’ அக் கட்சியிடம் உள்ளது.  சிறிய அளவில் பிற கட்சிகளிடமும் வாஷிங் மெஷின்கள் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும், தமிழ்நாட்டில் தேர்தல்கள் முடிந்தவுடனே கட்சி மாறும் நடவடிக்கைகள் இதுவரை பெரிதும் இருந்ததில்லை. இந்தத் தேர்தல் தான் அதிலும் ‘மாற்றத்தை’க் கொண்டு வந்துள்ளது.

இணைந்தும் பிரிந்தும்,
பிரிந்து இணைந்தும்!

பா.ஜ.க.வின் அணி மாற்றும் ஆட்டமும், அதன் நேரடி ஆட்சியும் தமிழ்நாட்டில் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான், தி.மு.க. கூட்டணியில் போட்டி யிட்ட சில கட்சிகள் எவ்வித நிபந்தனையுமின்றி த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தன. அ.தி.மு.க. தலைமையின் அறிவுறுத்தலை மீறி, 20 எம்.எல்.ஏ.க்களும் த.வெ.க.வை ஆதரித்து வாக்களித்தனர். ஆனால், அதற்குள்ளாகவே கலைத்துக் கோக்கப்படும் சீட்டுக் கட்டுகளைப் போல, இணைந்தும் பிரிந்தும், பிரிந்து இணைந்தும் 2 அணிகளாகத் தங்க ளுக்குள்ளேயே விளையாடிக் கொண்டிருந்த அ.தி.மு.க.விலிருந்து நான்கு சீட்டுகள் தனியே சிதறி ஓடின. ‘தங்களைத் தேர்ந்தெடுத்த தொகுதியின் நலனுக்காக’ சில நாள்களிலேயே தலைமைச் செயலகத்தின் ஒரு மாடியில் சென்று பதவி விலகி, (இந்த அக்கறை முன்பே இருந்திருந்தால் போட்டியிடாமலேயே இருந்திருக்கலாமே!) அடுத்த மாடியில் சென்று ஆட்சியில் இருக்கும் கட்சியில் இணைந்தனர். கட்சி அலுவலகங்களிலிருந்த ‘வாஷிங் மெஷின்’ இப்போது அவசர ஏற்பாடாகத் தலைமைச் செயலகத்திற்கே வந்து இறக்கப்பட்டுள்ளது போலும்! இடைத் தேர்தல் வாய்ப்போ, வேறு பதவிகளோ கிடைக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு மக்கள் இயக்கம் உருவாக
வேண்டியதன் அவசியம்!

இன்னும் சில சீட்டுகள் சரிந்திருக்க வேண்டிய நேரத்தில், தமிழ்நாட்டு மக்கள் முகம் சுளித்ததைத் தொடர்ந்து, கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறார்கள் (இருவர்) போலும். கட்சித் தாவல் தடைச் சட்டத்தை இன்னும் வலுப்படுத்தினால் இத்தகைய அவலங்களைத் தடுக்க முடியும். கட்சி மாறி, அதன் அடித்தளத்திலிருந்து தான் மேலே வர வேண்டும், சில ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றெல்லாம் சட்டம் இருந்தால், திடீரென கொள்கை பிடித்துப் போயும், தொகுதி நலனுக்காகவும் கட்சி மாறுவதெல்லாம் நடக்குமா? இவற்றை வலியுறுத்தி ஒரு மக்கள் இயக்கம் உருவாக வேண்டியதன் அவசியத்தை நாடு இன்று எதிர்கொண்டிருக்கிறது.

இதனிடையே, இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருப்பதாகவும், தமிழ்நாட்டில் த.வெ.க.வுடன் தாங்கள் வைத்துள்ள கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பதென்று தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சோடங்கர் என்பவர்! முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் திருச்சி உரையிலிருந்து கூட ‘நல்லா வரும்’ பெயரைத் தேர்ந்தெடுக்கலாம் தான்! கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் வரும் ‘மற்றும் பல’ரெல்லாம் நல்லவராகும் போது அந்தப் பெயர்கூட பொருத்தமானதுதான்!

அந்தோ பரிதாபத்திற்குரிய ‘வாஷிங்மெஷின்’ அரசியலே!

‘‘சில கறைகள் துவைத்தாலும் போகாதவை’’ என்பதை மறந்துவிட வேண்டாம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

4.6.2026          

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *