நாம், ஒரு கூட்டத்தாருக்குத்தான், ஒரு வகுப்புக்குத்தான் நன்மை செய்கின்றவர்களாவோம். அது மற்றொரு வகுப்பாருக்குத் தீமையாய்த் தோன்றலாம் அல்லவா? நாம் ஏன் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? திருடனுக்கும், திருட்டுக் கொடுப்பவனுக்கும் எப்படி நன்மை செய்ய முடியும்? ‘திருட்டுப் புத்தியை விட்டுவிடு; இல்லாவிட்டால் விட்டு விடும்படிச் செய்வேன்’ என்பதுதான் திருடனுக்குச் செய்யும் நன்மையாகும். இதை நன்மையாகத் திருடன் மதிப்பானா? ஆதலால், நமது சேவை ஒரு நாளும் பணக்காரனுக்கும், முதலாளிக்கும் நன்மையாய்க் காண முடியுமா? அவர்களுக்கு நன்மை செய்வது என்பது நமது கொள்கையுமாகுமா? ஆகவே, நாம் பொது நலச் சேவைக்காரர்கள் அல்ல; நம்மை புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் என்ன தவறு?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
