25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு கோரி வழக்கு! தமிழ்நாடு அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, ஜூன் 4- கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் எஸ்.சி.,
எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்த சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் பெற்றோருக்கு எந்த வருமான உச்ச வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.

ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெற்றோருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்காவிட்டால், வசதியானவர்கள் ஜாதி அடிப்படையில் இந்த சலுகையை பெற அதிக வாய்ப்புள்ளது.

இதனால் இந்த சட்டத்தின் நோக்கமே வீணாகிவிடும். எனவே, கல்வி உரிமை சட்டத்தின் இட ஒதுக்கீட்டின்கீழ் பயன்பெறும் சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கும் வருமான உச்ச வரம்பு நியமிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் தருமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

 

தலைமைச் செயலகத்தில்

பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமல்

சென்னை, ஜூன் 4- சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந் துள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. நாமக்கல் கவிஞர் மாளிகை உள்பட 10 தள கட்டிடத்தில் 54 துறை செயலர்களும், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி நேரமாகவும், அரை மணி நேரம் உணவு இடைவேளையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனிதவள மேலாண்மைத் துறையில் வருகைப் பதிவுக்காக பயோமெட்ரிக் மற்றும் முகம் கண்டறியும் தொடுதிரை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

ஜூன் 1 முதல் அந்தத் துறையின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார முறையில் கட்டாயமாக வருகை பதிவு செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து மற்ற துறைகளுக்கும் விரைவில் இம்முறையை விரிவு படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்ட போது தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

தலைமைச் செயலக வரலாற்றிலேயே பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயமாக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது சிறப்பு அம்சமாகும்.

72 லட்சம் மோசடி செய்த புகாரில் த.வெ.க. நிர்வாகி கைது

தூத்துக்குடி, ஜூன் 4 திருச்செந்தூர் அருகே ரூ.72 லட்சம் மோசடி செய்த வழக்கில் த.வெ.க. நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டார். ஏரல் த.வெ.க. நகரசெயலாளர் ராஜாவின் வீட்டை ரூ.90 லட்சத்துக்கு வாங்க கோபி என்பவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் வீட்டை விற்பனை செய்வதாக கூறி ரூ.72 லட்சம் பணத்தை பெற்று கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறி ராஜா மீது கோபி புகார் அளித்துள்ளார்.

முன்னதாக கிரைய ஒப்பந்தம் செய்ய முன்பணமாக ரூ.72 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு ராஜா கூறியிருக்கிறார். மேலும் மீதமுள்ள ரூ.18 லட்சத்தை உங்கள் பெயருக்கு பத்திர பதிவு செய்து தரும் போது கொடுங்கள் என கோபியிடம் ராஜா கூறியிருக்கிறார். இதனை நம்பி ராஜாவின் வங்கி கணக்கிற்கு ரூ.72 லட்சத்தை கோபி செலுத்தியுள்ளார். ஆனால் ரூ.72 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அதோடு த.வெ.க. நிர்வாகி ராஜா தலைமறைவாகி விட்டதாக காவல்துறையில் கோபி புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *