இந்திய பருவமழையை மிரட்டும் ‘எல் நினோ’… வறட்சி அபாயம்! உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!

பசிபிக் பெருங்கடலில் ‘எல் நினோ’ வானிலை மாற்றம் மிக வேகமாகத் தீவிரமடைந்து வருவதால், உலகளாவிய வானிலையிலும், குறிப்பாக இந்தியப் பருவமழையிலும் இதன் நேரடித் தாக்கம் கடுமையாக இருக்கும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் தீர்மானிக்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு சற்றுத் தாமதமாக ஜூன் 4இல் தான் எட்டிப்பார்க்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே பருவமழைக்கு வில்லனாக ‘எல் நினோ’ என்ற பிரம்மாண்ட இயற்கை அழிவு பசிபிக் பெருங்கடலில் மிக வேகமாக உருவெடுத்து வருகிறது. ஒட்டுமொத்த பூமியின் வானிலையையே தலைகீழாக மாற்றப் போகும் இந்த ஆபத்து குறித்து உலக வானிலை அமைப்பு தற்போது இந்தியாவிற்கு ஒரு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

‘எல் நினோ’ என்பது விசித்திரமான காலநிலை மாற்றம். மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் அடியில் இருக்கும் நீர், வழக்கத்திற்கு மாறாகத் தாறுமாறாக வெப்பமடையும்போது இந்நிகழ்வு நடக்கும். பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் இந்த இயற்கை மாற்றம், ஒருமுறை உருவானால் 9 முதல் 12 மாதங்கள் வரை பூமியை ஆட்டிப்படைக்கும். இந்த எல் நினோ உருவானால், உலக வரைபடத்தின் ஒரு பக்கத்தில் இருக்கும் தென் அமெரிக்க நாடுகள் கடுமையான பெருவெள்ளத்தில் மிதக்கும். ஆனால், மறுபக்கத்தில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் அப்படியே தலைகீழாகக் கடுமையான வறட்சியில் தவிக்கும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு மழைப்பொழிவில் 70% வாரி வழங்குவது இந்த தென்மேற்கு பருவமழை தான். நமது நாட்டின் குடிநீர் தேவை, விவசாயம், பொருளாதாரம் என எல்லாமே இதை நம்பித்தான் இருக்கின்றன. ஆனால், இந்த முறை எல் நினோ உருவாவதற்கான வாய்ப்பு ஜூன் – ஆகஸ்ட்டிற்குள் 80% ஆகவும், அது நவம்பர் வரை நீடிப்பதற்கான வாய்ப்பு 90% ஆகவும் உள்ளது. இதனால், இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கமான சராசரி மழையில் 90% மட்டுமே பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

மத்திய மற்றும் வட இந்தியா: இப்பகுதிகளில் பருவக்காற்று பலவீனமடைந்து, மழை பெய்யாமல் நீண்ட நாட்கள் வறண்ட வானிலையே நீடிக்கும். நெல், சோளம், பருப்பு, பருத்தி போன்ற மழை மட்டுமே நம்பியிருக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யும் லட்சக்கணக்கான விவசாயிகள், மண்ணில் ஈரப்பதம் குறைந்து விளைச்சல் பாதிப்பைச் சந்திக்க நேரிடலாம். கடந்த 2023-2024ஆம் ஆண்டில் இதேபோன்ற எல் நினோ வந்தபோது உலக வெப்பமயம் புதிய உச்சத்தை தொட்டது. இந்த முறையும் வறட்சி நிலவினால், கிராமப்புற வருமானம் பாதிக்கப்பட்டு உணவுப் பொருளின் விலை கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளது. வறட்சியுடன் சேர்ந்து கோடை வெப்ப அலையின் தாக்கமும் அதிகரிக்கும் என்பதால் மனிதர்கள், கால்நடைகள் பாதிக்கப்படுவதுடன் மின்சாரத்திற்கான தேவையும் உச்சத்தைத் தொடும்.

எல் நினோ என்பது உலக வெப்பமயமாதலால் எரியும் நெருப்பில் ஊற்றப்படும் எண்ணெய் போன்றது என அய்நா பொதுச்செயலாளர் குட்டரெஸ் எச்சரித்துள்ளார். இயற்கையின் இந்தச் சீற்றத்தை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது என்பது நிஜம்தான். ஆனால், முன்கூட்டியே கிடைத்துள்ள இந்த எச்சரிக்கையைப் பயன்படுத்தி தப்பிக்க முடியும். மாநில அரசுகள் இப்போதே அணை மற்றும் நீர்நிலைகளைச் சரியாக மேலாண்மை செய்ய வேண்டும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர் வகைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் போன்ற நீர்ச் சேமிப்பு நுட்பங்களை இப்போதே தீவிரப்படுத்த வேண்டும். தாமதமாகத் தொடங்கும் பருவமழையோடு, எல் நினோவிற்கு எதிரான இந்தியாவின் இந்தப் போர், வரும் வாரங்களில் நாம் எவ்வளவு உஷாராகத் தயாராகப் போகிறோம் என்பதைப் பொறுத்தே அமையப் போகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *