கலைஞர் பிறந்த நாள் என்பது ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல; ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்!
முதலமைச்சரின் திருச்சி உரை – மற்றவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல,
அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல!
முதலமைச்சரின் திருச்சி உரை – மற்றவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல,
அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல!

சென்னை, ஜூன் 3 ‘‘கலைஞர் பிறந்த நாள் என்பது ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல; ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்! முதலமைச்சரின் திருச்சி உரை – பொதுவானவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல, அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல!’’ என்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள்: அவரது சிலைக்கு மாலை அணிவிப்பு
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2026) அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து, பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’
தன்னைப்பற்றி ஒரு வரியில் விமர்சனம் செய்து கொள்ளுங்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்று தெளிவாகப் பிரகடனப்படுத்தினார்!
தந்தை பெரியார் அவர்களுடைய ஈரோடு ‘குடிஅரசு’ குருகுலத்தில் சிறப்பாகப் பயின்று, எழுத்தாற்றல், பேச்சாற்றல், கருத்தாற்றல், அரசியல் ஆளுமை ஆற்றல், போராட்டக் களத்தில் நின்று வென்று காட்டக்கூடிய அறப்போர் களத்தினுடைய ஆற்றல் இப்படிப் பல்வகையான ஆற்றல்களைத் தன்னகத்தே அடக்கி, தானே ஒரு வரலாறாக, அந்தத் தலைமுறைக்கு மட்டுமல்லாமல், இனி வரக்கூடிய தலைமுறைக்கும் ஆக்கிய ஓர் அற்புதமான சீரிய பகுத்தறிவுவாதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அண்ணா, கலைஞருக்குப் பிறகு ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ தொடர்ந்து செய்தார்!
தந்தை பெரியார் அவர்களால், மாணவப் பருவந்தொட்டு ஈர்க்கப்பட்டவர். அப்படிப்பட்ட அந்த உணர்வை, அவர் இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் விடாதது மட்டுமல்ல, அவருக்குப் பிறகும், இந்த இயக்கம், எப்படி அண்ணாவிற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பான வரலாற்றை உருவாக்கினார்களோ, அதுபோல, கலைஞருக்குப் பிறகு, ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைத்து நம்முடைய அருமைத் தளபதி ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகராக’ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனைச் செய்தார்கள்.
எந்த ஆட்சி வந்தாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சி யினுடைய திட்டங்களைப் புறந்தள்ளி, ஆட்சியைச் செய்ய முடியாது என்று சொல்லக் கூடிய அளவிற்கு, அகில இந்தியா மட்டுமல்ல, உலகத்தினுடைய பல பகுதிகளிலும் அந்தத் திட்டங்கள் பரவியுள்ளன.
பல ஆண்டுகால வரலாறு!
‘கலைஞர்’ என்ற, ‘திராவிடம்’ என்ற பெரிய ஆலமரத்திற்கு பல ஆண்டுகால வரலாறு உண்டு. நீதிக்கட்சியில் தொடங்கி, திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்றெல்லாம் அதற்கு ஒரு பாரம்பரியம் உண்டு.
இன்றைக்கு சிலர் நினைக்கிறார்கள், ‘திராவிடம் இல்லாமல் போய்விட்டது; காணாமல் போய்விட்டது’’ என்று அலட்சியமாக நுனிப் புல் மேய்கிறார்கள்.
திராவிடத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. திராவிடம் என்றும் வாழும்; அதை வரலாறு என்றும் சொல்லும்!
கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் – ‘திராவிடர் எழுச்சி நாளாக’’ கொண்டாடப்படுகிறது!
ஆகவேதான், தாய்க்கழகமான திராவிடர் கழகம், இன்றைக்கு இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், கலைஞர் அவர்களுடைய 103 ஆம் ஆண்டு பிறந்த நாளினை, ‘‘திராவிடர் எழுச்சி நாளாக’’ தமிழ்நாடு மட்டுமல்ல, கருநாடக மாநிலத்திலும், மராட்டியத்திலும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.
அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கம்போல பரப்புரை விழா நடத்துகிறது. தமிழின உணர்வாளர்களும், திராவிடப் பற்றாளர்களும் ஓரணியில் திரண்டு இதைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
எனவேதான், இது முழுக்க முழுக்க ஆழமான, அழுத்தம் கொண்ட, பல கொள்கை விழுதுகளை, பழுதில்லா விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போன்ற ஒரு திராவிடத் தத்துவம்!
தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல;
ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்!
ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்!
ஆகவே, கலைஞருடைய பிறந்த நாள் என்பது, ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல. ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம் என்பதைத் தெளிவாகச் சொல்லி, கலைஞர் வாழ்க! திராவிடம் வெல்க! என்ற உறுதியோடு, தாய்க்கழகமான திராவிடர் கழகம் தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறது.
அரசியல் தெளிவுள்ளவர்களால்
ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல!
ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல!
செய்தியாளர்: திருச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய பேச்சைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: முதலமைச்சருடைய முதல் பேச்சு, திருச்சியில் தொடங்கியது. ஆனால், இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவென்று சொன்னால், அவர், தன்னை ‘‘முதலமைச்சர்’’ என்பதை நினைவில் கொள்ளாமல், முழுக்க முழுக்க தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதைப்போலவே அவர் பேசியிருப்பது, மற்றவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல, அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல.
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இதுபோன்ற தன்னுடைய பேச்சு முறையை மாற்றிக் கொள்ளவேண்டும். அரசியல் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, கொள்கைத் தெளிவுள்ளவர்களுக்கும் அவருடைய உரை ஏற்புடையதல்ல.
முதலமைச்சருடைய முக்கியமான கடமை என்ன?
இது ஒரு கட்சியினுடைய அறிவுரையோ, விமர்சனமோ அல்ல. ஆளுங்கட்சியாக இருந்த ஒரு கட்சி, ‘‘ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருப்போம்’’ என்று சொல்லும்போது, எதிர்க்கட்சிகள் என்னென்ன குறைகளைச் சொல்கிறார்கள் என்பதை நுணுகி ஆராய்ந்து, அதற்குரிய பதிலையும், தம் ஆட்சியின் கொள்கை என்ன என்பதையும் மக்களுக்கு விளக்குவதுதான், முதலமைச்சருடைய முக்கியமான கடமையாகும்.
ஆனால், அவருடைய திருச்சி பேச்சு, மாற்றத்தைத் தரவில்லை, ஏமாற்றத்தையே தந்திருக்கின்றது.
செய்தியாளர்: தி.மு.க. கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள், அடுத்தடுத்து த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவிக்கக்கூடிய நிகழ்வைப் பார்க்க முடிகிறது; இது சரியான நகர்வுதானா?
தமிழர் தலைவர்: இது அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி. எங்களிடம் அல்ல!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
