எங்களின் முயற்சியெல்லாம் முதன் முதலில் மக்களுக்கு அறிவூட்ட வேண்டும் என்பதுதான். மூடப் பழக்கங்களைச் சாமி, பூதம், சாத்திரம், புராணம் இவைகளில் உள்ள நம்பிக்கைகளை அடியோடு விட்டு விடச் செய்ய வேண்டும்; இவ்விதமாக நல்லறிவு கொண்ட மக்கள் எல்லோரையும் பிறகு ஒன்று திரட்ட வேண்டும். இதற்குப் பின் இவர்கள் யாவரும் சேர்ந்து பெரும் கிளர்ச்சி செய்து அரசாங்கச் சட்டங்களை அழித்து மாற்றியமைக்க வேண்டும். இந்நாட்டினை இந்நட்டவர்களே ஆளும்படிச் செய்ய வேண்டும்; இவ்விதமாக மக்கள் பகுத்தறிவு பெறுவதும், மனிதன் மனிதனாகப் பாவிக்கப்பட்டுத் திராவிடத்தைத் திராவிடன் ஆளச் செய்வதுதான் எங்களின் வேலை. இப்பணிகளை நாங்கள் செய்யாமல் போனால் வேறு யார் செய்வார்கள், அவர்களால் செய்து முடிக்க முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
