சென்னை, ஜூன் 2- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்தும் வகையில் விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஓய்வூதியம்
இது தொடர்பாக அரசு கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச்செயலர் சோ.சுரேஷ் நேற்று (1.6.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 1.4.2003 முதல் செயல்படுத்தப்பட்டு வந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வந்தனர்.
இதன் விளைவாக, கடந்த திமுக அரசு, அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 9.1.2026 அன்று ஓர் அரசாணை (எண் 7) மூலம், தமிழ்நாட்டில் 01.01.2026-க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தது.
இதன் மூலம், அரசு ஊழியர்கள் கடைசியாக பெற்ற அடிப்படைச் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில், 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் 60 சதவீதம் வழங்கப்படும். பணிக்கொடை மூலமாக அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்கள் பெரும்பகுதியினர் இத்திட்டத்தை தற்காலிகமாக ஏற்றுக் கொண்டாலும், ஓய்வூதியத்துக்காக ஊழியர்களிடமிருந்து 10 சதவீதம் பிடிக்கக்கூடாது, ஏற்கெனவே பிடித்த தொகையையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
விதிகளை வெளியிட வேண்டும்
இருப்பினும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த விதிகளும், சட்ட ரீதியான மற்றும் கணக்கியல் தேவைகளும் வெளியிடப்பட்ட பின்பு 1.1.2026 முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படும் வரை திமுக அரசு, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான விதிகளை வெளியிடவில்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்ற அரசும் இதுவரை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான விதிமுறைகளை வெளியிடவில்லை.
தமிழ்நாடு வெற்றிக்கழகம் தனது தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என குறிப்பிட்டிருப்பதால், உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்குவதற்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும்.
அதுவரை, ஏற்கெனவே, ஓய்வு பெற்றவர்களுக்கு, உடனே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
