‘விடுதலை’யின் அரிமா நோக்கு

விடுதலையின் அரிமா நோக்கு

விடுதலை ஏடு வாரம் இருமுறை ஏடாக ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் டி.ஏ.வி.நாதன் அவர்களை அதிகாரபூர்வ ஆசிரியராகக் கொண்டு அரையணா விலையில் 1.6.35 முதல் மவுண்ட் ரோட், மதராஸ் என்ற முகவரியிலிருந்து வெளிவந்தது.

(7.6.1935, குடிஅரசு)

அதன்பின் 1.1.1937 முதல் அதே முகவரியில் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை அவர்களை அதிகாரப்பூர்வ ஆசிரியராகக் கொண்டு நாளேடாக காலணா விலையில் வெளிவந்தது.

(10.1.1937, குடிஅரசு)

3.7.1937 முதல் விடுதலை நாளேடு காலணா விலையில் அவரையே ஆசிரியராகக் கொண்டு ஈரோட்டிலிருந்து வெளிவந்தது.

(3.1.1937, குடிஅரசு)

1939இல் அண்ணா அவர்கள் விடுதலை ஏட்டின் பொறுப்பாசிரியராக இருந்து, அதன்பின் 21.12.1941இல் அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.

விடுதலை ஏட்டில் வந்த ஒரு கட்டுரைக்காக 124ஏ பிரிவின் படியும் விடுதலை வெளியீட்டாளர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள்மீதும், ஆசிரியர் பண்டித முத்துசாமி பிள்ளை மீதும் ராஜகோபாலாச்சாரியார் அரசு வழக்குத் தொடுத்து அதன் காரணமாக இருவரும் 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர்.

அதன் காரணமாக அ.பொன்னம்பலனார் விடுதலையின் அதிகாரபூர்வ ஆசிரியர் பொறுப்பை 9.1.1939 முதல் ஏற்றுக்கொண்டார்.

விடுதலை ஏடு யுத்தப் பிரச்சாரத்திற்காக தரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் குத்தூசி குருசாமி அவர்கள் 12.9.1943 முதல் 30.9.1945 வரை பொறுப்பாசிரியராக இருந்தார். என்.கரிவரதசாமி அதிகாரப்பூர்வ ஆசிரியராக இருந்தார்.

விடுதலை
ராய்ட்டர் – அசோசியேட்டட் பிரஸ் தந்திகளுடன் வெளிவரும்
(விலை அணா ஒன்று)

ஈரோட்டில் நடைபெற்று வரும் விடுதலை தினசரியானது 20.9.1943 முதல் சென்னையிலிருந்து, ராய்ட்டர் அசோசியேட்டட் பிரஸ் முதலிய தந்திச் செய்திகளுடனும் மற்றும் பல இந்தியச் செய்திகளுடனும், அரிய கட்டுரைகளுடனும் புதிய நல்ல முறையில் வெளிவரும் புதியதாகச் சந்தாதாரர்களாகச் சேர விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட விலாசத்திற்கு எழுதுமாறு வேண்டுகிறோம்.

ஏஜண்டுகளாக இருக்க விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட விலாசத்திற்கு எழுதி விவரம் தெரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

மானேஜர், விடுதலை

  1. பாலகிருஷ்ணப் பிள்ளை தெரு,

சிந்தாதிரிப்பேட்டை, சென்னை

(16.09.1943, விடுதலை)

விடுதலை

விடுதலை ஈரோட்டிலிருந்து வெளிவருவது இந்த இதழோடு நிறுத்தப்பட்டிருக்கிறது.

இனி வெகு விரைவில் குடிஅரசுப் பத்திரிகை வாரப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கும்.

வாசகர்கள் ஆதரிக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

(18.09.1943, விடுதலை)

யுத்தப் பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட விடுதலை மீண்டும் தந்தை பெரியாரின் பொறுப்புக்கு 6.6.1946 முதல் வந்தது. அதன் அதிகாரப்பூர்வ ஆசிரியராக கே.ஏ.மணி (அன்னை மணியம்மையார்) இருந்தார்.

20.06.1943 முதல் குத்தூசி குருசாமி விடுதலை பொறுப்பாசிரியராக இருந்தார். 2.01.1962 வரை அவர் அப்பொறுப்பில் இருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் தேதியன்று திராவிட நாடு பிரிவினை நாள் கொண்டாடுமாறு தோழர்களுக்கு தந்தை பெரியார் விடுதலையில் அறிக்கை விட்டார். சென்னை மாகாண அரசு வாளா இருக்குமா? விடுதலை மீது பாய்ந்தது. ரூ.2000 விடுதலைக்கு ஜாமீன் கட்ட வேண்டும் என்று ஏட்டின் பதிப்பாசிரியரும், வெளியீட்டாளருமான அன்னை மணியம்மையார் அவர்களுக்கு அரசு ஆணை பிறப்பித்தது. இந்தப் பிரச்சனையை பொது மக்களிடத்தில் தந்தை பெரியார் வைத்தார்! விடுதலையின் ஈடுஇணையற்ற தொண்டின் அவசியத்தை உணர்ந்த பொதுமக்களோ ரூ.15,200 அள்ளித் தந்தனர்.

எஸ்குருசாமி அவர்களைத் தொடர்ந்து கிவீரமணி அவர்கள் விடுதலை பொறுப்பாசிரியாக இருந்து வந்தார். அன்னை மணியம்மையார் அவர்களது மறைவுக்குப் பிறகு 24.03.1978 முதல் கி.வீரமணி அவர்கள் அதிகாரபூர்வ ஆசிரியராகவும். பிரசுரதாரராகவும் இருந்து வருகிறார்.

விடுதலையின் அதிகாரபூர்வ ஆசிரியர்கள்

  1. டி.ஏ.வி.நாதன்
  2. பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை
  3. அ.பொன்னம்பலனார்
  4. என்.கரிவரதசாமி
  5. கே.ஏ.மணி (அன்னை மணியம்மையார் அவர்களின் ஆரம்பப் பெயர்)
  6. ஈ.வெ.ரா.மணியம்மை (திருமணத்துக்குப் பின்னர் பெயரில் சிறிது மாறுதல்)
  7. கி.வீரமணி

விடுதலையின் பொறுப்பாசிரியர்கள்

  1. சி.என்.அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)
  2. சா.குருசாமி
  3. சாமி. சிதம்பரனார்
  4. கி.வீரமணி
  5. கலி.பூங்குன்றன்

விடுதலை மலர்கள்

1956ஆம் ஆண்டு செப்டம்பர் 17இல் தந்தை பெரியார் அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி விடுதலை மலர் வெளிவந்தது. அதன் விலை 4 அணா. ஆசிரியர் எஸ்.குருசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு விடுதலை ஆசிரியராக கி.வீரமணி அவர்கள் பொறுப்பேற்ற திலிருந்து 1962ஆம் ஆண்டு முதல் (தந்தை பெரியார் 84ஆம் ஆண்டு பிறந்த நாள்) தொடர்ந்து பெரியார் பிறந்தநாள் மலரை வெளியிட்டு வருகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *